'கொரோனா' வைரஸ் தொடர்பில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் பவித்ரா
'கொரோனா' வைரஸ் நாட்டுக்குள் பரவமால் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இதுவரை 15 நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளான சீன பெண்ணொருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எனினும் அது தொடர்பில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்த்தார்.
இலங்கையில் 'கொரோனா' வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதலாவது நோயாளி கடந்த திங்கட்கிழமை (27) இரவு அடையாளம் காணப்பட்டார்.
சீனாவின் உபேயி பகுதியில் இருந்து சுற்றுலாவிற்காக நாட்டுக்கு வருகை தந்த சீன பெண்ணொருவர் இந்த வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதன்போது இவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போதே கொரோனா' வைரஸிற்கு குறித்த பெண்மணி தொற்றுக்குள்ளாகியுள்ளமை அடையாகம் காணப்பட்டது.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (28) தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்த்தன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜயசிங்க உள்ளிட்ட சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது ஊடங்களுக்கு மேலும் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி,
"சீன பிரஜை ஒருவரே குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார். இலங்கை பிரஜை எவரும் இந்த வைரஸினால் இதுவரை பாதிக்கப்படவில்லை. இதன் காரணமாக கொரோனா வைரஸ் நாட்டில் அதிகளவில் பரவுவதற்கான சாத்தியமில்லை.
எவ்வாறாயினும் சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் 'கொரோனா' வைரஸ் எமது நாட்டில் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த வைரஸ் நாட்டில் பரவாமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக இந்த வைரஸ் தொடர்பில் ஆராயா எனது தலைமையில் 17 பேர் கொண்ட விசேட செயலணியொன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது. இதில் மேல் மாகாண ஆளுநர் வைத்திய கலாநிதி சீதா அரம்பொல, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் வைத்திய கலாநிதி நிஹால் ஜயசிங்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரியர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாநயக்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த விசேட செயலணியில் அங்கம் வகிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் தொடர்பில் அறிவிப்புக்களை மேற்கொள்ளவும், தகவல்களை அறிந்துகொள்வதற்கும் இரண்டு அவசர தொலைபேசி இலக்கங்கள் சுகாதார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 071 0107107 என்ற அலைபேசி மற்றும் 011 3071073 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நோயாளர்களுக்கு நாடளாவிய ரீதியிலுள்ள 11 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற முடியும்.
ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மேலதிகமாக வட கொழும்பு (ரகமா) போதனா வைத்தியசாலை, கம்பஹா வைத்தியசாலை, நீர்கொழும்பு வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, அநுராதபுரம போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, குருநாகல் போதனா வைத்தியசாலை, இரத்தினபுரி போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் பதுளை வைத்தியசாலை ஆகியவற்றில் இந்த வைரஸிற்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதனால் சந்தேகத்துக்கிடமாக உள்ள நோயாளர்களை குறித்த வைத்தியசாலைகளில் அனுமதித்து தேவையான சிகிச்சைகளை பெற முடியும்.
கடந்த இரண்டு நாட்களில் சீனாவில் கல்வி கற்கும் 204 இலங்கை மாணவர்கள் சீனாவில் இருந்து வெளியேறி உள்ளதாக சீனாவுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ள நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமில் தங்கவைக்கப்படவுள்ளனர். இந்த மாணவர்களை குறித்த இராணுவ முகாமில் இரண்டு வாரங்கள் வைத்து கண்காணிக்கப்படவுள்ளனர்" என்றார். .
இந்த ஊடவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜயசிங்க,
"தொற்றுக்குள்ளானவர்களின் அருகிலிருந்தால் மாத்திரமே வைரஸ் பரவுவதற்கான சாத்தியமுள்ளதுசன நெரிசல் மிக்க பகுதிகளுக்கு செல்வதையோ அருகிலிருந்து உரையாடுவதையோ தவிர்க்கவும். சனநெரிசல் மிக்க பகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி சவர்க்காரம் பயன்படுத்தி கைகளை கழுவி சுத்தமாக வைத்திருத்தல் அவசியம்.
இதனிடையே, கொரோனா வைரஸ் நாட்டில் ஏற்படுத்தவல்ல தாக்கத்தை குறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைளையும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட உரிய தரப்பினர் முன்னெடுத்துள்ளதாகவும், பொதுமக்கள் குறித்த தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உரிய பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாளவும்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரு இடங்களில் டேர்மல் ஸ்கேனிங் செய்யப்படுகின்றன. இந்நிலையில் குறித்த வைரஸ் தொற்று காரணமாக காய்ச்சலுடன் கூடிய அறிகுறியுடன் ஒருவர் நாட்டுக்குள் வந்தால் அங்கு அடையாளம் காண முடியும்" என்றார்.
இதேவேளை, வெளிநாட்டுக்கு செல்லும் அல்லது வெளிநாட்டிலிருந்து வருகை தரும் பயணிகள் தவிர்ந்த அவர்களின் உறவினர்களுக்கு விமான நிலையத்திற்குள் பிரவேசிப்பதற்கு நேற்று (28) காலை 6 மணி முதல் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சீனாவிலிருந்து இலங்கைக்கு வருகைதருவதற்கு முன்னர், இணையத்தளம் ஊடாக விசாவுக்கு விண்ணப்பித்தல் அவசியம் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்மூலம் சீனாவிலிருந்து வருகைதருபவர்களை இலகுவாக பரிசோதிக்க முடியும் என திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் பசன் ரத்னாயக்க கூறியுள்ளார்.
இதேவேளை, உடனடியாக முகக் கவசங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்தது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சந்தைகளில் முகக் கவசங்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அதிகார சபை குறிப்பிட்டது.
அதேவேளை, பதிவுசெய்யப்பட்ட பாமசிகளில் ஒரு நபருக்கு ஐந்து முகக் கவசங்களை மாத்திரமே வழங்குமாறு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-றிப்தி அலி-
Comments (0)
Facebook Comments (0)