சவூதிக்கான இலங்கைத் தூதுவராக அமீர் அஜ்வத் நியமனம்

சவூதிக்கான இலங்கைத் தூதுவராக அமீர் அஜ்வத் நியமனம்

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவராக இலங்கை வெளிநாட்டு சேவையின் சிரேஷ்ட அதிகாரியான அமீர் அஜ்வத் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் சிபாரிசுடனான இந்த நியமனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நியமனத்திற்கு பாராளுமன்றத்தின் உயர் பதவிகளுக்கான குழுவினால் நேற்று வெள்ளிக்கிழமை (01) அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவராக செயற்படும் பீ.எம். அம்சாவின் பதவிக் காலம் விரைவில் நிறைவடையவுள்ளது. இதனையடுத்து, குறித்த பதவியினை வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளராக தற்போது செயற்படும் அமீர் அஜ்வத் பொறுப்பேற்கவுள்ளார்.

இதற்கு முன்னர் ஓமானிற்கான இலங்கைத் தூதுவராகவும், சிங்கபூரிற்கான இலங்கையின் பதில் உயர் ஸ்தானகராகவும் இவர் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு வரை ஓமானில் மேற்கொண்ட பணியினை அடிப்படையாக வைத்து இலங்கை – ஓமான் உறவுகள் தொடர்பான நூலொன்றினையும் இவர் எழுதியுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு சேவையில் 1998ஆம் ஆண்டு இணைந்த இவரது முதலாவது வெளிநாட்டு பதவியினை றியாதிலுள்ள இலங்கை தூதுவராலயத்தில் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு மேதிகமாக சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராலயம் மற்றும் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான தூதுவராலயம் போன்றவற்றிலும் இவர் கடமையாற்றியுள்ளார்.

அரபு மொழி பாண்டித்தியம் பெற்ற இவர் ஒரு சட்டத்தரணியுமாவார்.