"பேர்ள் கப்பல்" மூழ்கிய இடத்தில் என்ன நடக்கிறது?

"பேர்ள் கப்பல்" மூழ்கிய இடத்தில் என்ன நடக்கிறது?

வீ.பிரியதர்சன்

"மன்னாரிலிருந்து தென்பகுதியில் இருக்கும் கிரிந்த வரை சுமார் 700 கிலோ மீற்றர் கடற்பரப்பு மாசடைந்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய பிளாஸ்டிக் மாசு பேர்ள் கப்பலால் ஏற்பட்டதாகும். இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் எதிர்வரும் 20 முதல் 30 வருடங்களுக்கு தொடரக்கூடும்"என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தர்ஷினி லஹந்தபுர தெரிவிக்கிறார்.

எங்கிருந்தோ வந்த கப்பலால் இலங்கையின் கடற்பரப்பு குறித்த அவதானம் உலகளாவிய ரீதியில் பேசப்பட ஆரம்பித்தது. அந்தக் கப்பலின் பெயர் தான் எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள். இதனால் ஏற்பட்ட சூழல் பாதிப்புக்களோ அறிந்துகொள்ள முடியாத நிலைக்கு சென்றுள்ளது.

மலேசியாவின் தஞ்சுங் பிலிப்பஸ் துறைமுகத்தில் இருந்து 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி தனது பயணத்தை ஆரம்பித்த பேர்ள் கப்பலானது மே மாதம் 9ஆம் திகதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஜபல் அலி துறைமுகத்தை சென்றடைந்தது.

அங்கிருந்து மே மாதம் 10ஆம் திகதி புறப்பட்டு சிங்கப்பூர் நோக்கி தனது பயணத்தை தொடர இருந்தது. அதற்கிடையில் கட்டார் மற்றும் இந்தியா என தரித்து நின்று இறுதியில் 2021 மே மாதம் 19ஆம் திகதியன்று இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் இருந்து 9.5 கிலோமீற்றர் தொலைவில் நங்கூரமிட்டது.

அடுத்தநாள் 20ஆம் திகதி கப்பலில் தீ பரவ ஆரம்பித்து. மே மாதம் 28ஆம் திகதி வரை இலங்கையையும் அதன் கடற்பரப்பையும் அச்சத்தில் ஆழ்த்தியது. பேர்ள் கப்பல் விபத்தானது இலங்கையை மாத்திரமல்ல முழு உலகையுமே திரும்பிப் பார்க்க வைத்ததுடன் பாரிய கடல் அச்சுறுத்தலாக உணரப்பட்டது.

இதன் காரணம் இந்தக் கப்பலில் 25 மெட்ரிக் தொன் நைட்ரிக் அமிலம் மற்றும் 12 ஆயிரம் மெட்ரிக் தொன் பிளாஸ்ரிக் துகள்கள் அடங்கலாக 1,486 கொள்கலன்களில் இரசாயனப் பொருட்கள் நிறைந்திருந்தன.

இந்த விபத்து தொடர்பில் உள்ளூர் ஊடகங்கள் மாத்திரமல்ல, சர்வதேச ஊடகங்களும் பேசுமளவிற்கு பாரிய கடற்சூழல் மாசுபாடக விளங்கியது. இலங்கை அரசு கடல், கடற்கரைகளை மக்கள் பாவனையில் இருந்து தடுத்து கரைகளில் ஒதுங்கிய கழிவுகளைத்தூய்மைப்படுத்தும் பணியிலும் இறங்கியது.

இந்த விபத்தின் பின் மெல்ல மெல்ல கடல் வாழ் உயிரினங்கள் குறிப்பாக அரிய வகை ஆமைகள், டொல்பின்கள், திமிங்கிலங்கள் போன்றன இறந்த நிலையில் கரையொதுங்கின. இவ்வாறான நிலையில் ஏர்த் ஜேர்னலிசம் நெட்வேர்க்கின் ஒத்துழைப்புடன் பேர்ள் கப்பல் மூழ்கிய கடற்பகுதியில் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்ந்தோம்.

"கடலில் வாழும் அரிய வகை ஆமைகளும் டொல்பின்களும் உயிழந்தமைக்குக் காரணம் நிச்சயமாக பேர்ள் கப்பல் தீ விபத்து என்பதை உறுதியாக கூறும் சுற்றுச் சூழல் நீதி மையத்தின் சிரேஷ்ட ஆலோசகர் கேமந்த விதானகே, அமிலங்களின் விஷம் காரணமாகவே இந்த உயிரினங்கள் உயிரிழந்தனவே தவிர வேறு எந்த காரணமும் இல்லை" என ஆணித்தரமாக கூறுகிறார்.

இந்த நிலையால் மக்களும் மீன்களை உட்கொள்வதில் பெரும் அச்சமடைந்தனர். மறுபுறம் இலங்கையின் மீன் உற்பத்தி பெரிதும் பாதிப்படைந்தது. இது இவ்வாறிருக்க இந்த விபத்தால் கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடங்கள் முதல்கொண்டு அவற்றின் உயிர்களும் பறிபோயின. இது இலங்கையின் கடற் பகுதியில் வாழ்ந்த உயிர் பல்வகைமைகளை ஆழ் கடல்வரை சென்று அழித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

"உலகில் வாழும் 07 வகை கடல் ஆமைகளில் 05 வகையான கடல் ஆமைகள் இலங்கையின் கடல் பரப்பில் உயிர் வாழுகின்றன. உண்மையில் எவ்வளவு தொகையான கடல் உயிரினங்கள் இறந்தன என்று கணிப்பிட முடியாது.

உயிரிழந்து கரையொதுங்கியவற்றையே நாம் கணிப்பிட்டிருந்தோம். இறந்து கடலுக்கு அடியில் பல உயிரினங்கள் சென்றிருக்கலாம்" என்று கூறுகிறார் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமையின் (நாரா) பிரதான விஞ்ஞானி கணபதிப்பிள்ளை அருளானந்தன்.

இவ்வாறு கடல்வாழ் உயிரினங்களின் அழிவு, கடல் மாசடைந்தமை பெரும் பேசுபொருளாக மாறியது. இவ்வாறு இது குறுகியகால சூழல் நிலைமைகள் மட்டுமல்ல நீண்டகால சூழல் அச்சுறுத்தல் என சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டத்தொடங்கினர்.

"கடல் ஆமைகள் 1,000 முட்டைகளை இட்டால் தான் ஒரு கடல் ஆமை உருவாகும். அவ்வாறெனில் கப்பல் விபத்தால் உயிரிழந்த கடல் ஆமைகள் அல்லது அதன் 5 அல்லது 10 மடங்கினை உருவாக்குவதாயின் அது சுலபமான விடயமல்ல. பெண் கடல் ஆமைகள் அதிகளவில் உயிரிழந்திருப்பின் முட்டைகளைப் பெற்றுக்கொள்வதிலும் சிக்கல் ஏற்படும்" என்கிறார் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தர்ஷினி லஹந்தபுர.

ஆனாலும் இன்று வரை இந்த கடல் உயிரினங்களின் இழப்புகள் சரியான முறையில் பதிவாகவில்லை. இறந்து கரையொதுங்கிய உயிரினங்களின் உடற்பாகங்கள் சரியான முறையில் பரிசோதிக்கப்படவில்லை.

"பல பரிசோதனை முடிவுகள் வெளியாகாமையால் பேர்ள் கப்பல் விபத்தால் ஏற்பட்ட பெரும்பாலான பாதிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. கடல் வாழ் உயிரினங்களின் உயிரிழப்புக்கள் தற்போது குறைவடைந்துள்ளன. ஆனால் கடலில் அமிழ்ந்துள்ள பேர்ள் கப்பலை முழுமையாக வெளியேற்ற முற்படும் போது உயிரினங்களின்  உயிரிழப்புக்கள் அதிகரிக்க சந்தர்ப்பம் உள்ளது" என சுற்றுச் சூழல் நீதி மையத்தின் சிரேஷ்ட ஆலோசகர் கேமந்த விதானகே தெரிவிக்கிறார்.

இது இவ்வாறிருக்க இன்று கப்பல் விபத்து நடந்து 8 மாதங்கள் கடந்த நிலையில் மக்கள் மீன்களை உணவாக உட்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். ஆயினும் மீனவர்களின் பிரச்சினை வேறுவிதமாக மாறியுள்ளது.

"வழமையாக நாம் செல்லும் கடற் பகுதிகளில் மீன்கள் பிடிபடவில்லை. மீன்கள் இல்லாதது போல் தான் தெரிகிறது. எமக்கும் என்ன காரணம் என்று தெரியவில்லை" என்கிறார் 38 வருடங்களாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் திக்கோவிட்டயைச் சேர்ந்த 52 வயதுடைய தந்தையான அனில் என்ற மீனவர்.

"பேர்ள் கப்பல் எரிந்த நாள் முதல் குறிப்பிட்ட பகுதிக்குள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாது தடை விதிக்கப்பட்டது. 6 மாதங்களின் பின் சற்று தளர்த்தப்பட்டாலும் கப்பலைச் சுற்றியுள்ள பகுதிக்குள் உட்பிரவேசிக்க வேண்டாமென எல்லைகள் போடப்பட்டுள்ளன.

ஆனால் தற்போது போகக்கூடிய அனுமதி உள்ள பகுதிகளில் இந்த 6 மாத காலப்பகுதியில் சாதாரண கடலாக இருந்தால் மீன்கள் பெருகி இருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக மீன்கள் இல்லாமல் போயுள்ளன. கடலில் கலந்த இரசாயனப் பதார்த்தங்களால் மீன்களின் இருப்பிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீன்களின் இனப்பெருக்கமும் பாதிப்படைந்திருக்கும்" என்கிறார் 25 வருடங்களாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் திக்கோவிட்ட பகுதியைச் சேர்ந்த 44 வயதுடை அஜித்.

மக்களின் அனுமானங்கள் இவ்வாறு இருக்கையில் இதன் உண்மைத்தன்மை பற்றி அறிய கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரைத் தொடர்புகொண்டோம்.

"மூழ்கியுள்ள கொள்கலன்களை அகற்றும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் விசேட நிபுணர்கள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இரு பிரபல பேராசிரியர்கள் அடங்கிய இக்குழுவில் 40 நிபுணர்கள் அங்கத்துவம் வகிக்கின்றனர்.

இவர்கள் வெவ்வேறு பாணிகளில் சூழல் மாசு தொடர்பில் ஆராய்கின்றனர். உயிரினங்கள் இறத்தல், கடற்படுக்கை பாதிப்பு, பவளப் பறைகள் பாதிப்பு, கடல் நீர், காற்று பாதிப்பு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து விரிவானதொரு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது" என்கிறார் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷினி லஹந்தபுர.

அதேநேரம், "கடலில் ஏற்பட்ட இரசாயன மாற்றங்களை விட கப்பலில் இருந்து கடலில் விழுந்த பிளாஸ்டிக் துகள்கள் ( plastic nurdles) மற்றும் raisin gum என்று சொல்லப்படும் திரவத் தன்மையான பொருளும் கடல் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதில் குறிப்பாக raisin gum என்று சொல்லப்படும் திரவத் தன்மையான பொருள் கடல் அடிப்படுக்கையில் படர்ந்து கடல் சூழலுக்கும் மீனினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமையின் (நாரா) பிரதான விஞ்ஞானி கணபதிப்பிள்ளை அருளானந்தன் கூறுகிறார்.

ஆனாலும் சுற்றுச் சூழல் நீதி மையத்தின் சிரேஷ்ட ஆலோசகர் கேமந்த விதானகே, "கப்பல் விபத்தையடுத்து மீன்களின் எண்ணிக்கையில் குறைவடைதிருக்கலாம் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் கப்பல் விபத்தையடுத்து ஏற்பட்ட மாசுபாட்டிலிருந்து மீன்கள் விலகி வேறு இடங்களுக்கு சென்றிருக்கலாமென நான் நினைக்கின்றேன்" என கூறுகிறார்.

பேர்ள் கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் மற்றும் அபாயகரமான இரசாயனங்கள் அடங்கிய பட்டியலை சுற்றுச்சூழல் நீதி மையம் வெளியிட்டிருந்தது. அதில் மொத்தமாக 1,486 கொள்கலன்கள் வைக்கப்பட்டிருந்துள்ளன. அவற்றுள் 25 மெட்ரிக் தொன் நைட்ரிக் அமிலம், சோடியம் ஹைட்ரொக்சைட் மற்றும் பிற ஆபத்தான இரசாயனங்கள் மற்றும் 12 ஆயிரம் மெட்ரிக் தொன் பிளாஸ்டிக் துகள்கள் இருந்துள்ளன.

இதில் தற்போது வரை சுமார் 150 கொள்கலன்கள் அகற்றப்பட்டுள்ளன என தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமையின் (நாரா) பிரதான விஞ்ஞானி கணபதிப்பிள்ளை அருளானந்தன் கூறுகிறார்.

இவ்வாறு அகற்றப்பட்டுள்ள கொள்கலன்கள் அனைத்தும் வெற்றுக் கொள்கலன்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, அனைத்து இரசாயனப் பொருட்களும் கடலினுள் கலந்துள்ளமை தெரிகிறது. எதையும் தாங்கும் கடல் இதையும் தாங்கும். ஆனால் இந்தக் கடல் கொண்டிருக்கும் இந்த குட்டித் தீவும் அதன் சூழலும் பாதுகாப்பாக உள்ளதா? என்பது பெரும் கேள்விதான்.

"கப்பலில் காணப்பட்ட கொள்கலன்கள் அனைத்தும் கடற் படுக்கையில் பரம்பியுள்ளன. இவற்றை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் பிரத்தியேகமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவை இரு கட்டங்களாக முன்னெடுக்கப்படுகின்றன. அமெரிக்க நிறுவனமொன்று இந்த பணிகளை முன்னெடுத்துள்ளது" என்கிறார் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷினி லஹந்தபுர.

இவ்வாறு கடலில் அமிழ்ந்துள்ள கப்பலையும் கப்பலில் இருந்த பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொள்கலன்களையும் வெளியில் எடுக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவரும் நிலையில், கொள்கலன்களில் இரசாயன பதார்த்தங்கள் இருக்குமாக இருந்தால் அவற்றை மீண்டும் நாட்டுக்குள் கொண்டுவந்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது அவற்றை உரிய முறையில் அழிப்பதற்கு உரியவர்கள் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறில்லையெனில் நிலத்திற்கும் காற்றுக்கும் பெரும் அச்சுறுத்தல் என்பதும் மக்கள் அபிப்பிராயம். "அப்புறப்படுத்தும் பணிகளில் அவர்கள் தமது இலக்கில் 70 சதவீதத்தினை பூர்த்தி செய்துள்ளனர். கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் இரு அதிகாரிகள் முழு நேரம் அந்த பணிகளை கண்காணிக்கின்றனர்.

அவர்கள் காணொளிகளை பதிவு செய்கின்றனர். புகைப்படங்கள் எடுக்கின்றனர். நீர் மாதிரிகளைப் பெறுகின்றனர். இந்த பகுதியிலிருந்து எடுக்கப்படும் சிதைவுகள் வத்தளையில் உள்ள தற்காலிக சேமிப்பிடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அவற்றை வேறுபடுத்தி நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி அவற்றில் அழிக்கக் கூடிய சிதைவுகள் காணப்படுமாயின் அவை உள்நாட்டிலேயே அழிக்கப்படுகின்றன.

உள்நாட்டில் அழிக்க முடியாத அல்லது சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சிதைவுகள் நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்படுகின்றன. இங்கும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளும் சுங்க அதிகாரிகள் இருவரும் முழு நேர கடமையில் ஈடுபட்டுள்ளனர்" என்று அதற்கும் தனது பதிலை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷினி லஹந்தபுர முன்வைத்தார்.

"இரண்டாவது கட்டம் கப்பலை உயர்த்துவதாகும். இது சீன நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த சீன நிறுவனத்தின் இரு கப்பல்கள் வருகை தந்துள்ளன. கப்பலை எவ்வாறு உயர்த்துவது என்பது தொடர்பில் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்" என்ற மேலதிக தகவலையும் அவர் தந்தார்.

இலங்கையைப் பொறுத்தவரை ஆய்வுகளும் முடிவுகளும் செயற்பாடுகளும் வெளிநாடுகளை நம்பியே செய்யப்படுகின்றன. அவர்களின் முடிவுகளில்தான் இலங்கையின் சுற்றுச் சூழல் நடவடிக்கைகள் அமைய முடியும். எல்லா பிரச்சினைகளுக்கும் அரசு பதிலை தயாராகவே வைத்துள்ளது.

ஆனால் நீண்டகால பாதிப்பு பற்றிய அச்சம் இன்னும் மக்களிடையே உள்ளது. சிலவகை மீன்களில் உள்ள நச்சுப்பதார்த்தம் மனித உடல்களையும் ஊடுருவும் வாய்ப்பு உள்ளது எனவும் மக்கள் அச்சப்படுகின்றனர்.

"இந்த விபத்தால் கடலில் கலக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்களில் (nurdles) ஒரு சிறிய தொகைகளே மீண்டும் சேகரிக்கப்பட்டுள்ளன என்பதை நாம் அறிவோம். ஆனால் மிகுதியாக கடலில் கலக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்களின் பாதிப்பானது அடுத்த 500 முதல் 1,000 ஆண்டுகள் வரை நீடிக்கும்.

இந்த கப்பல் விபத்தால் சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பு எதிர்காலத்தில் ஏற்படும் என்பது உறுதி" என சுற்றுச் சூழல் நீதி மையத்தின் சிரேஷ்ட ஆலோசகர் கேமந்த விதானகே உறுதிபடக் கூறுகிறார்.

அதே நேரம் "இலங்கை கடற்சூழலில் குறித்த கப்பல் மூழ்கியதால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் பல ஆண்டுகளுக்கு நிவர்த்தி செய்ய முடியாததாகும் அடுத்துவரும் பல ஆண்டுகளுக்கு எமது நாட்டில் கடற்றொழிலில் இது பாரிய தாக்கத்தை செலுத்தும்" என்று சூழலியலாளர் கலாநிதி சந்திமா விஜேகுணவர்தனவும் தெரிவிக்கிறார்.

இந்த அச்சங்களை எல்லாம் தீர்க்கும் வகையில், "பிளாஸ்டிக் துகள்கள் எவ்வாறு நச்சுப் பொருட்களை உறிஞ்சி வைத்துள்ளன என்பது தொடர்பில் நாம் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

தொடர்ந்து கடல் நீர் மாதிரி, மீன்களின் தசைகள், மண் மாதிரிகள் போன்றவற்றை எடுத்து எவ்வாறான மாற்றங்கள் ஏற்படுகின்ற என்பது தொடர்பில் நீண்டகால நோக்கில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றோம்" என்கிறார் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமையின் (நாரா) பிரதான விஞ்ஞானி கணபதிப்பிள்ளை அருளானந்தன்.

ஆனால் இந்த ஆய்வுகளும் அதன் முடிவுகளும் மக்கள் மத்தியில் முன்வைக்கப்படுமா? இவ்வாறான பிரச்சினைகளுக்கு  அதிகம் அச்சப்படத்தேவையில்லை என்றால் ஏன் இன்னும் கப்பலை சுற்றியுள்ள கடல் எல்லை மீனவர்களுக்கு தடுக்கப்பட்டதாக உள்ளது?

"இது போன்று கப்பல் விபத்துக்கள் ஏற்படும் போது, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பொருட்கள், வசதிகள் எம்மிடம் இல்லை. எனவே 'கடல் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்' ஒன்றை அமைக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடமிருந்து ஆலோசனை கிடைக்கப் பெற்றுள்ளது.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை மாத்திரமின்றி, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, துறைமுக அதிகாரசபை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து அறிக்கையொன்றினை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் சிங்கப்பூர் கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம். சிங்கப்பூர் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் எமக்கு ஆலோசனை வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.

அத்துடன் அவுஸ்திரேலிய குழுவினரை சந்திக்கவுள்ளோம். அவர்கள் எவ்வாறான பொறிமுறையின் கீழ் செயற்பட்டுள்ளனர் என்பது குறித்த ஆலோசனை பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

அவர்களின் பொறிமுறை, தொழிநுட்பத்தின் கீழ் கடற்சூழல் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளோம்" என்கிறார் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷினி லஹந்தபுர.

எதிர்காலத்தில் இப்படி ஒரு விபத்தை எப்படிக் கையாள்வது பற்றிய அக்கறையில் அரசு விடயங்களை முன்னகர்த்துகின்றது. நீண்டகால பாதிப்பு இருப்பதை அரசதரப்பு ஒத்துக்கொண்டாலும்  தீர்வுகளை நோக்கி அரச தரப்பு பயணிப்பதை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷினி லஹந்தபுரவின் கருத்துக்களில் இருந்து புலப்படுகின்றது.

ஆனால் மக்களையும் சூழலையும் இது எந்தளவு திருப்திப்படுத்தும் என்பது எமக்குத் தெரியவில்லை. இருப்பினும் இந்த கப்பலினால் ஏற்பட்டிருக்கும் நீண்டகால சுற்றுச் சூழல் பிரச்சினை சரியாக இனம்காணப்பட்டு தீர்க்கப்படுமா என்பதுதான் மக்களின் கேள்வி.