முஸ்லிம் அரசியல்வாதிகள் மீதான சமூகத்தின் கோபம்
றிப்தி அலி
சுமார் ஐந்து தசாப்தங்களுக்கு மேற்பட்ட அரசியல் அனுபவத்தினைக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட பிழையான தீர்மானம் காரணமாக இன்று முழு நாடும் பாரிய நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு பொறுப்புக் கூறும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகுமாறு கோரி பொதுமக்கள் நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களுக்கு மேலாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தப் போராட்டங்கள் அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியினை வழங்கியமையினால் கடந்த 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை மஹிந்த ராஜபக்ஷவினை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு அவருடைய சகோதரரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார்.
இதற்கான பதிலினை 9ஆம் திகதி திங்கட்கிழமை வழங்குவதாக உறுதியளித்திருந்தார். இவ்வாறான நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை 9ஆம் திகதி அலரி மாளிகைக்கு அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார் பிரதமர் அல்லது அவ்வாறான ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.
இந்தக கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷவினை இராஜினமாச் செய்ய வேண்டாம் எனக் கோரி ஆதரவு கோஷங்களை எழுப்பினர்.
இதன்போது உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ "மக்களுக்காக நானிருப்பேன்" என்றார். இதனையடுத்து இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அலரி மாளிகைக்கு முன்பாக அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த 'மைனா கோ கம' மீது தாக்குதல் நடத்தினர்.
அங்கிருத்து ஜனாதிபதி செயலக நோக்கி நடை பவணியாகச் சென்று 'கோட்டா கோ கம' மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் அங்கு அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகளை தீவைத்து எரித்தனர். அது மாத்திரமல்லால் அங்கு அமைதியான முறையில் போராட்டத்தினை முன்னெடுத்துவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் பாரிய மோதல் இடம்பெற்றது. இந்த சம்பங்களை பேஸ்புகின் ஊடாக நேரடியாக அவதானித்துக் கொண்டிருந்த மக்கள் வீதிக்கு இறங்கி மஹிந்தவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் அவர்கள் கொழும்பிற்கு வந்த வாகனங்களையும் எரித்தனர்.
அது மாத்திரமல்லாமல், ராஜபக்ஷ அரசாங்கத்தில் அங்கம் வகித்த பல அமைச்சர்கள், அவர்களுக்காக குரல்கொடுள்ள பிரதேச அரசியல்வாதிகள் எனப் பல்வேறு தரப்பினரின் வீடுகள் மற்றும் வாகனங்கள் என சொத்துக்கள் தாக்கப்பட்டதுடன், தீக்கிரையாக்கவும் பட்டன.
இந்த வன்முறைகளினால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உட்பட ஒன்பது பேர் பலியாகினர். இவ்வாறு வன்முறை சம்பவங்கள் வியாப்பித்து சென்றதை அடுத்தே, மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இதேவேளை, அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை தாக்குவதற்கு மஹிந்த ராஜபக்ஷவே அடாவடிக்காரர்களை தூண்டிவிட்டதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.
குறித்த வன்முறை சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்து முழுக்க காரணமாக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக கைதுசெய்யப்பட்ட வேண்டும் எனவும் சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமச் செய்த போதிலும், அவரின் ஆசீர்வாதத்துடன் நாட்டில் உருவாக்கப்பட்ட வன்முறைகள் இன்னும் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அதிகாரங்களை பலப்படுத்துவதற்கு ஆதவளித்து இன்று வரை ஆளும் அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹாபீஸ் நசீர் அஹமட் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகியோரின் அலுவலகம் மற்றும் வீடு ஆகியன ஆர்ப்பாட்டக்காரர்களினால் தீக்கிரையாக்கப்பட்டன.
எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீவைப்பது ஒருபோதும் தீர்வாக அமையாது. காரணம், ஏறாவூரில் கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட அசம்பாவிதத்தின் போது நசீர் அஹமதின் அலுவலகம் அமைந்திருந்தது வேறொரு நபருக்கு சொந்தமான கட்டிடத்திலாகும்.
மேற்குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து சுமார் ஏழு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து அரசாங்த்தின் சுகபோங்களை அனுபவித்து வந்தனர்.
இவர்களின் வழங்கிய இந்த ஆதரவின் ஊடாகவே அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்ததுடன் ஜனாதிபதிக்கு பாரியளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தீர்வொன்றினை பெற முடியாது மக்கள் தவிக்கின்றனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த குறித்த ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களும் தேர்தல் பிரச்சாரங்களின் போது ஆளும் பொதுஜன பெரமுனவிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் எதிராகவே பிரச்சாரங்களை மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தனர்.
எனினும் அவர்கள், இன்று குறித்த பிரச்சாரங்களை மறந்துவிட்டு தனிப்பட்ட சுயலாபங்களிற்காக ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருகின்றனர். அதேவேளை, தற்போது எதிர்க்கட்சிக்கு ஆதரவளித்து வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசீம், எம்.எஸ். தௌபீக் ஆகியோர் ஜனாதிபதி அதிகாரங்களை குறைக்கும், அதிகரிக்கும் திருத்தங்களான 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்றுக்கும் ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு கொள்கையற்றவர்களாகவே முஸ்லிம் அரசியல்வாதிகள் காணப்படுகின்றமை முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய அவமானத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபக்ஷ குடும்பத்தினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று இன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போரட்டத்திற்கு இன, மத பேதமின்றி அனைத்து மக்களும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையிலேயே முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக ராஜபக்ஷ குடும்பத்திற்கு ஆதரவு வழங்குகின்றமை அவர்களுக்கு வாக்களித்த மக்களினை தர்மசங்கடத்திற்குள்ளாகியுள்ளது. மேற்குறிப்பிட்ட ஏழு அரசியல்வாதிகளில் இருவரைத் தவிர ஏனைய அனைவரும் 10 வருடங்களுக்கு மேல் மக்கள் பிரதிநிதிகளாக காணப்பபடுகின்றனர்.
எனினும் இவர்களினால் வாக்களித்த மக்களிற்கோ சமூகத்திற்கோ இதுவரை எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை. மாறாக, குறித்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் சுயலாபங்களை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளையே தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜபக்ஷ அரசாங்கத்தினை இன்று வீட்டுக்கு அனுப்புவதற்காக அவர்களுக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களே முன்வந்துள்ளதைப் போன்று, முஸ்லிம் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப முஸ்லிம் சமூகமும் தயாராக வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பிரதேசவாதம் எனும் குறுகிய மனநிலை காரணமாக தத்தம் ஊருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி அவசியம் என்ற கொள்ளை முஸ்லிம் ஊர்களிலிருந்து இல்லாமலாக்கப்பட்ட வேண்டும். இந்த நிலைப்பாட்டினை திட்டமிட்டு உருவாக்கியோர் அரசியல்வாதிகள் என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை.
இதனால், கொள்ளையற்ற முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம் கட்சிகளும் ஒரங்கட்டபட்டு இவர்களின் போலி அரசியலுக்கு சிறந்த பாடம் கற்பிக்க வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. எனினும் அதற்கு வன்முறைதான் வழியல்ல. மாறாக பொருத்தமானவர்களைக் கொண்டு இவர்களது இடம் நிரப்பப்பட வேண்டும். இதற்காக புத்திஜீவிகள் முன்வர வேண்டும்.
Comments (0)
Facebook Comments (0)