இட்டுகம நிதியில் மாயமான 180 கோடி ரூபா
றிப்தி அலி
'இட்டுகம (செய்கடமை)' என்று அழைக்கப்படும் கொவிட் 19 – சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு கிடைக்கப் பெற்ற நிதித் தொகையில் 180 கோடி ரூபா காணாமல் போயுள்ள விடயம் தற்போது தெரியவந்துள்ளது.
இந்த நிதியத்திலிருந்து 180 கோடி ரூபா சுகாதார அமைச்சின் பட்டியலுக்கான சரியான தீர்ப்பனவிற்காக (settlement of accrued bills to Health Ministry) ஒதுக்கப்பட்டுள்ளதாக கடந்த ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்தது.
எனினும், குறித்த தொகை நிதி இதுவரை கிடைக்கவில்லை என சுகாதார அமைச்சிற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவலறியும் உரிமை கோரிக்கைக்கான பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் பிரதம நிதி அதிகாரியான தாரக்கவினை தொடர்புகொண்டு வினவிய போது, "இந்த விடயம் தொடர்பில் எதுவும் கூற முடியாது" என்றார்.
அத்துடன் குறித்த நிதி தொடர்பில் மேலதிக தகவல் எதுவும் தேவை என்றால் ஜனாதிபதி செயலகத்திற்கு தகவலறியும் விண்ணப்பமொன்றை சமர்ப்பிக்குமாறும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிதியத்தின் செயலாளராக ஜனாதிபதி செயலகத்தின் பிரதம நிதி அதிகாரியே பதவி வழியாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, "இட்டுகம நிதியத்திலிருந்து சுகாதார அமைச்சிற்கு 15 கோடி 16 இலட்சத்து 95 ஆயிரத்து 759 ரூபாவும் 56 சதம் மாத்திரமே கிடைக்கப்பெற்றது" என அமைச்சின் பிரதம நிதி அதிகாரியான (தரம் - 01) திருமதி டீ.சி. விக்ரமசேன தெரிவித்தார்.
இது கிடைக்கப் பெற்ற மொத்த நன்கொடையில் ஏழு சதவீதம் மாத்திரமேயாகும். 'காசோலை மூலம் ஐந்து கட்டங்களாக கிடைக்கப் பெற்ற இந்த நிதி, மூன்று தேவைகளுக்காக சுகாதார அமைச்சினால் பயன்படுத்தப்பட்டது' எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தேசிய தடுப்பூசித் திட்டத்திற்கு 4 கோடி 15 இலட்சத்து 45 ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்;பது ரூபா செலவளிக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் முன்னர் தெரிவித்திருந்தது.
எனினும், குறித்த தொகை நிதி, கொவிட் - 19னுடன் தொடர்புடைய எழுதுபொருட்கள் அச்சிடுவதற்காகவே பயன்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
அரச அச்சகத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட எழுதுபொருட்கள் அச்சிடல் பணிக்கு 4 கோடி 7 இலட்சத்து 39 ஆயிரத்து 450 ரூபா மற்றும் எண்பத்தைந்து சதம் செலவளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒதுக்கப்பட்ட நிதியில் 8 இலட்சத்து 6 ஆயிரத்து 529 ரூபா மற்றும் பதினைந்து சதம் தற்போது மிகுதியாகவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.
பீ.சீ.ஆர். பரிசோதனைக்காக கிடைக்கப் பெற்ற நிதியில் 60 இலட்சம் ரூபா மருத்துவ ஆராய்சி நிறுவனத்திற்கும், 25 இலட்சம் ரூபா பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும், 3 கோடி 41 இலட்சத்து 5 ஆயிரத்து 812 ரூபா மருத்துவ விநியோகப் பிரிவிற்கும் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட நிதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பி.சீ.ஆர் பரிசோதனைக் கூடத்திற்கு தேவையான அவசர கொள்வனவுகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 2020ஆம் ஆண்டின் ஜுலை முதல் செப்டம்பர் வரையான காலப் பகுதியில் தேசிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட 'ஒரு புதிய இயல்பை நோக்கி' எனும் சமூக சந்தைப்படுத்தல் பிரசாரத்திற்கு 2 கோடி 43 இலட்சத்து 64 ஆயிரத்து 800 ரூபா சுகாதார அமைச்சினால் செலவளிக்கப்பட்டுள்ளது.
இதில் 18 இலட்சத்து 4ஆயிரத்து 800 ரூபா பெறுமதி சேர்க்கப்பட்ட வரியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரசாரம் Triad எனும் நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் நான்கு பேரைக் கொண்ட அமைச்சின் ஆலோசனை விலைமனுகோரல் குழுவினாலேயே இந்த நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டது.
இந்த பிரசாரத்திற்காக மூன்று நிறுவனங்கள் விலைமனுக் கோரல் சமர்ப்பித்திருந்த நிலையில் குறைவான விலைமனுகோரல் சமர்ப்பித்தமையினாலேயே Triad தெரிவுசெய்யப்பட்டதாக அமைச்சின் ஆலோசனை விலைமனுகோரல் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 'ஒரு புதிய இயல்பை நோக்கி' எனும் சமூக சந்தைப்படுத்தல் பிரசாரத்திற்கான விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிடுவதற்கு Ogilvy Media எனும் நிறுவனத்திற்கு 4 கோடி 31 இலட்சத்து 79 ஆயிரத்து 167 ரூபா மற்றும் 56 சதம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை மற்றும் டிஜிடல் மீடியா ஆகியவற்றில் 29.09.2020 தொடக்கம் 10.11.2020 வரையான ஆறு வார காலப் பகுதியில் குறித்த விளம்பரங்கள் வெளியிடப்பட வேண்டியிருந்தது.
சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் ஏழு பேரை உள்ளடக்கிய அமைச்சின் ஆலோசனை விலைமனுகோரல் குழுவினால் குறிப்பிடப்பட்ட தொகையினை விட 20 ஆயிரத்து 832 ரூபா மற்றும் 34 சதம் குறைவான தொகையினை இந்த செயற்றிட்டத்திற்காக முன்மொழிந்தமையினாலேயே Ogilvy Media தெரிவு செய்யப்பட்டதாக குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தேசிய கணக்காய்வு அலுவலகத்தினாலேயே இட்டுகம நிதியத்தின் கணக்காய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கின்றது. எனினும், இந்த கணக்காய்விற்கான 88 ஆயிரத்து 800 ரூபா நிதியத்தின் நிதியிலிருந்தே வழங்கப்பட்டுள்ளது.
இந்நிதியத்தின் முகாமைத்துவ குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட '1990 – சுவசெரிய' அம்பியுலன்ஸ் சேவைக்கு 408.43 மில்லியன் ரூபா பெறுமதியில் 60 அம்பியுலன்ஸ் வண்டிகளை கொள்வனவு செய்தல் மற்றும் கொவிட் தொற்றினால் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு கல்விப் புலமைப்பரிசில்;களை வழங்கல் போன்ற செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், 2020 ஏப்ரல் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நிதியத்திற்கு முதல் ஒரு வருட காலப் பகுதியினுள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய பாராளுமன்ற அங்கீகாரமானது இறுதியாக கணக்காய்வு மேற்கொள்ளப்பட்ட 2022 ஜுலை 18ஆம் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால், நிதியத்திற்கு கிடைக்கும் நன்கொடைகளுக்கு 2021 நவம்பர் 30ஆம் திகதி வரையிலும் வரியிலிருந்து விலக்களிப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்த்தவாறு இந்த நிதியத்தினால் செலவீனங்கள் மேற்கொள்ளப்படாமையின் காரணமாக இந்நிதியத்தின் நிதிச் சொத்துக்கள் 07 நாட்கள், 31 நாட்கள், 03 மாதங்கள், 06 மாதங்கள் மற்றும் 01 வருடங்கள் என நிலையான வைப்புகளில் வைப்புச் செய்யப்பட்டு நிதியத்தின் நிதிச்; சொத்துக்களை அதிகரிக்கப்பட்ட விடயம் கணக்காய்வு அறிக்கையின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)