MMC தொடர்பான அறிக்கையினை நிராகரிக்கிறது அமெரிக்கா

MMC தொடர்பான அறிக்கையினை நிராகரிக்கிறது அமெரிக்கா

அமெரிக்காவின் Millennium Challenge Corporation எனப்படும் MCC திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட 480 மில்லியன் டொலர் நிதியில் இதுவரை எந்தவொரு தொகையும் வழங்கப்படவில்லை என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் நேற்று அறிவித்தது.

"இலங்கை அரசாங்கத்தினால் அமெரிக்காவிடமிருந்து வேண்டுகோள் விடுத்த 480 மில்லியன் டொலர் நிதி தொடர்ந்தும் அரசியல் மயப்படுத்தப்படுவதும், அது தொடர்பில் தவறான தகவல்கள் வெளியாவதும் ஏமாற்றமளிக்கின்றது" என இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பொது விவகார அதிகாரி டேவிட் மக்குயர் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் MCC தொடர்பில் மீளாய்வு அறிக்கையொன்றினை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றினை நியமிக்கப்பதற்கு கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியது.

இதற்கமைய கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் லலிதசிறி குணருவன தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவொன்று கடந்த ஜனவரி மாதம் 01ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது.

இந்த குழுவின் இறுதி அறிக்கை கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. "2017ஆம், 2018ஆம் ஆண்டுகளில் MCC ஒப்பந்தம் இரண்டு கட்டங்களாக கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், அதற்காக 10 மில்லியன் டொலர் பெறப்பட்டுள்ளதாக" மறு ஆய்வுக் குழுவின் தலைவர் பேராசிரியர் லலிதசிறி குணருவன் இதன்போது தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஊடக அறிக்கை வெளியிட்டிருந்தது.

"அத்துடன் இதற்கான கணக்கு விபரங்கள் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை" என அவர் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடத்திருந்தது.

இந்த நிலையில், குறித்த மீளாய்வுக் குழுவின் அறிக்கையில் வெளியாகியுள்ள தகவல் தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பொது விவகார அதிகாரி டேவிட் மக்குயரை விடியல் இணையத்தள Fact Checking குழுவினர் வினவினர். இதற்கு அவர் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம், தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவொன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய கடனற்ற $480Mn நிதியுதவின் கீழ் MCC நன்கொடையின் எந்த பணமும் அரசினால் மாற்றப்படவோ அல்லது செலவிடப்படவோ இல்லை. நிதியுதவியை தொடரலாமா என்பது குறித்த அரசின் முடிவை நிலுவையில் வைத்து ஆயத்த நடவடிக்கைகளுக்கான நிதி ரத்து செய்யப்பட்டோ அல்லது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டோ உள்ளது.

— U.S. Embassy Colombo (@USEmbSL) June 26, 2020

 

அமெரிக்க அரசின் @MCCgov இருதரப்பு நன்கொடை முகவரமைப்புகளில் உலகளவில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. தரவு வெளிப்படைத்தன்மை, நியாயமான & போட்டிமிக்க கொள்முதல், வறுமை குறைப்பு திட்டங்களின் தீவிர கண்காணிப்பு, மதிப்பீட்டுக்கான MCCஇன் உறுதியை அதன் உறுதியான செயலாக்கம் பிரதிபலிக்கிறது.

— U.S. Embassy Colombo (@USEmbSL) June 26, 2020

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"இலங்கை முதன் முதலில் 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலேயே MCC உதவித் தொகைக்கான வேண்டுகோளை விடுத்தது. அமெரிக்கா சர்வதேச அளவில் 30 நாடுகளுடன் 37 தடவை இதே மாதிரியான விடயங்களை உள்ளடக்கிய ஆஊஊ உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

இரண்டாவது நன்கொடைக்கு தகுதிபெற்ற அனைத்து நாடுகளும் அதனை கோரியுள்ளன. இதில் ஆசிய நாடுகளும் உள்ளடங்கியுள்ளன. அமெரிக்காவின் முகவர் அமைப்புகளில் வெளிப்படை தன்மை விடயத்தில் எம்.சி.சி முதலாவதாக காணப்படுகின்றது. சர்வதேச அளவிலும் அவ்வாறானதாக காணப்படுகின்றது.

வலிமையான இறைமையுள்ள அனைவரையும் உள்ளடக்கிய இலங்கைக்கான ஆதரவே அமெரிக்க இலங்கை உறவுகளிற்கு அடிப்படை. இந்த நோக்கத்தை மனதில் வைத்து அமெரிக்கா கடந்த 70 வருடங்களில் இலங்கைக்கு இரண்டு பில்லியன் டொலர் நன்கொடையை வழங்கியுள்ளது.

அமெரிக்க மக்கள் வழங்கும் இந்த நன்கொடையை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது இலங்கை அரசாங்கத்தின் கரங்களில் உள்ளது. உத்தேச திட்டத்தின் அடிப்படையில் இதுவரையில் இலங்கைக்கு அமெரிக்கா எந்த நிதியையும் வழங்கவில்லை, இலங்கை அரசாங்கம் எதனையும் செலவிடவுமில்லை" என்றார்.

தொடர்புடைய செய்தி:

MCC தொடர்பான மீளாய்வு அறிக்கையை மக்கள் பார்வைக்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு