'கொவிட்-19 இன் காரணமாக தாமதமான மனித உரிமை செயற்பாடுகளைவழமை போன்று முன்னெடுக்கத் தயார்'
றாசிக் நபாயிஸ்
கொவிட்-19 பரவல் காரணமாக தாமதமாக முன்னெடுக்கப்பட்ட மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளை வழமை போன்று முன்னெடுக்கத் தயாராக உள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்தியத்தின் புதிய இணைப்பாளர் ஏ.சி அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 20 வருடமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளராக செயல்பட்டு வந்த இவர், தற்போது தனது கடமையை கல்முனை மனித உரிமைகள் பிராந்திய அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"கொரோனா தொற்று பரவலானது இப்பகுதியில் சற்று தணிந்து வரும் நிலையில் மீண்டும் மக்கள் ஆரம்பத்தில் இப்பிராந்திய அலுவலத்தில் பெற்று வந்த மனித உரிமைகள் தொடர்பான சேவைகளை மிக விரைவில் பெற்றுக் கொடுப்பதற்கு பொதுமக்களுக்கு அழைப்புவிடுக்கின்றேன்.
பொதுமக்களின் முறைப்பாடுகள் அடிப்படை உரிமைகள், நிர்வாகம் மற்றும் நிறைவேற்றுத்துறையில் மீறப்படுவதாக இருந்தால் அது சம்பந்தமான புலனாய்வு விசாரணைகளைச் செய்து அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து கொடுப்பது எங்களது பணியாக இருக்கிறது.
தற்போதைய சூழ்நிலையில் மனித உரிமைகள் தொடர்பில் விசாரணைகள் என்ற விடயம் சற்று தாமதமாக நடைபெற்றாலும் அது தொடர்பான புலனாய்வு விடயங்களை நாங்கள் வேகமாக முன்னெடுத்து வருகிறோம்.
பொதுமக்களுக்கு ஏற்படும் எந்தவிதமான உரிமை மீறல் பிரச்சினையாக இருந்தாலும் அதாவது அரச அதிகாரிகள் மூலம் ஏற்படும் பிரச்சினையாக இருந்தாலும் எமது ஆணைக்குழுவில் அது தொடர்பான முறைப்பாடுகள் செய்யப்பட்டால் அதற்கான தீர்வையும் மிக விரைவாக பெற்றுத்தர முனைப்புடன் செயற்பட இருக்கின்றோம்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரத்திற்கு அமைவாக அதாவது 1996ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் தொடர்பான சுயாதீனமான ஆணைக்குழுவின் சட்டத்துக்கு அமைவாக மனித உரிமைகளை மேம்படுத்தி முன்னின்று முனைப்புடன் உழைக்கவே இப்பிரதேசத்துக்கு வந்திருக்கின்றேன்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)