முஸ்லிம் சேவையை தடை செய்யும் படி ஞானசார தேரர் கூறினாரா?
இலங்கை தேசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையினை தடை செய்யும்படி, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில், ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம்
Kalmunai today news என்ற பேஸ்புக் பக்கத்தில் "முஸ்லிம் சேவை தேசிய ஒலிபரப்பினை தடைசெய்ய வேண்டும் - ஞானசார தேரர்" எனும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒரு பிரிவாக செயற்பட்டு வருகின்ற முஸ்லிம் தேசிய ஒளிபரப்பினை தடைசெய்யக்கோரி பொதுபல சேனா அமைப்பு, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இன்று (21) திங்கட்கிழமை கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த அமைப்பைச் சேர்ந்த பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர், கொழும்பிலுள்ள ஊடக அமைச்சிற்கு விரைந்து இந்த முறைப்பாட்டை வழங்கியிருக்கின்றார்.
அதன் பின் ஊடகங்களுக்கு பேசிய அவர், வஹாப்வாத, இக்குவான் இனவாதப் பிரிவு என பல்வேறு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்கள் இலங்கையிலும் செயற்பட்டு முஸ்லிம் மக்களை திசை திருப்புவதாக நாங்கள் அடிக்கடி கூறிவந்தோம்.
ஆனாலும், அதனை பலரும் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெறும்வரை நம்பவில்லை. ஆனால் இன்று அந்த செயற்பாடுகள் அரச ஊடகங்களைப் பயன்படுத்தி இடம்பெறுகின்றன.
அதனை அரசாங்கம் விரைந்து தடுக்க வேண்டும். அரசிலுள்ள சில அதிகாரிகள் முஸ்லிம் பிரிவுகளிலிருந்து பணம் உட்பட பல்வேறு இலஞ்சங்களைப் பெறுவதால் இதனை தடைசெய்ய முடியவில்லை. இனியும் அவ்வாறு இருக்கக்கூடாது. விரைந்து இந்த முஸ்லிம் ஒலிபரப்பினை தடைசெய்ய வேண்டும் என்று கூறினார்.
-YazhNews” என இம் மாதம் 21 ஆம் திகதி (21.12.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. பலரும் இதன் உண்மை தன்மையினை கண்டறியாமல் பகிர்ந்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
இது தொடர்பாக நாம் பொதுபலசேனா அமைப்பின் ஊடக பேச்சாளரை தொடர்புக்கொண்டு வினவியபோது, "ஞானசார தேரர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தில் ஒலிபரப்பாகும் முஸ்லிம் நிகழ்ச்சியில் இதற்கு முன்னதாகவும் தற்போதும் தீவிரவாத கொள்கைகளை பரப்புவதற்கான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும், அதன் தொடர்பாக கண்காணித்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை நேரில் சந்தித்து கடிதம் கொடுத்துள்ளதாக" தெரிவித்தார்.
அதில் குறித்த சேவையினை தடை செய்யுமாறு அவர் தெரிவிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து நாம் மேலும் மேற்கொண்ட சோதனையின் போது, ஊடக அமைச்சில் வைத்து குறித்த கடிதத்தினை அமைச்சரிடம் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கலகொட அத்தே ஞானசார தேரர் கருத்து தெரிவிக்கு வீடியோ எமக்கு கிடைக்கப்பெற்றது.
அதை நாம் ஆய்வுசெய்த வேளையில், குறித்த நிகழ்ச்சிகளில் தீவிரவாத கொள்கைகளை பரப்புபவர்களின் பெயர் பட்டியலை அமைச்சரிடம் கையளித்துள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் விசாரனை முன்னெடுக்க நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு தாம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், குறித்த நிகழ்ச்சியினை நடத்துவதற்கு புதிய நபர்களை சேவையில் அமர்த்துமாறு தாம் தெரிவித்துள்ளதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.
குறித்த வீடியோவில் கலகொட அத்தே ஞானசார தேரர் முஸ்லிம் சேவையினை தடை செய்யுமாறு தெரிவித்திருக்கவில்லை. அதில் தீவிரவாத கொள்கையினை பரப்புபவர்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும், புதிய நபர்களை குறித்த சேவையில் அமர்ந்துமாறு அவர் தெரிவித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
நாம் மேற்கொண்ட தேடலில் முஸ்லிம் சேசையை தேசிய ஒலிபரப்பு தடைசெய்ய ஞானசார தேரர் தெரிவித்தார் என பரவும் செய்தி போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94779595972) தொடர்புகொள்ளுங்கள்.
Comments (0)
Facebook Comments (0)