சாய்ந்தமருது வைத்தியசாலையினை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமுமில்லை: சுகாதார அமைச்சு

சாய்ந்தமருது வைத்தியசாலையினை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமுமில்லை: சுகாதார அமைச்சு

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையினை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சு இன்று (29) புதன்கிழமை தெரிவித்தது.

கொரோனா சிகிச்சை நிலையமாக மாறும் சாய்ந்தமருது வைத்தியசாலை எனும் தலைப்பில் நேற்று (28) செவ்வாய்க்கிழமை கல்முனை பிராந்தியத்திலுள்ள இணையத்தளங்கள், பேஸ்புக் பக்கங்கள் மற்றம் வட்அப் ஊடாக செய்திகள் வெளியாகியிருந்தன.

சுகாதார துறையுடன் தொடர்புடைய எந்தவொரு அரச அதிகாரியினையும் மேற்கொள்காட்டாது இந்த செய்தி வெளியாகியிருந்தது. இதனை அடுத்து பிரதேச மக்கள் மத்தியில் அச்ச உணர்வொன்று தோன்றியமை குறிப்பிடத்தக்கது.

"இவ்வைத்தியசாலையினை இராணுவத்தினர் பொறுப்பேற்பார்கள் எனவும் சிகிச்சை அளிப்பதற்குரியவாறு வைத்தியசாலையினை தயார்படுத்துமாறும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிக்கு சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் இன்று (28) செவ்வாய்க்கிழமை மதியம் தொலைபேசி ஊடாக அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அறிய முடிகிறது"  எனவும் குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் உண்மைத் தன்மையினை அறியும் நோக்கில் விடியல் இணையத்தளம் சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகளுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி லால் பனாப்பிடியவினை தொடர்புகொண்டு வினவினோம்.

இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,

"சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையினை கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலையமாக மாற்றுவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளவில்லை.

தற்போது, காத்தான்குடி தள வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகின்றது. இந்த வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கக்கூடிய நோயாளர்கள் அனுமதிக்கப்பட்ட பின்னர் அப்பிராந்தியத்திலுள்ள மற்றுமொரு வைத்தியசாலையினை சுகாதார அமைச்சு பொறுப்பேற்கும்.

எனினும், இதுவரை எந்தவொரு வைத்தியசாலையினையும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலையமாக மாற்றுவதற்கு தீர்மானிக்கவில்லை.

எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக அப்பிராந்தியத்தில் முழுமையாக பயன்படுத்தப்படாத  பிரதேச வைத்தியசாலைகளை சிபாரிசு செய்யுமாறு பிராந்திய சுகாதார துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்" என்றார்.

இந்த விடயம் தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணனை தொடர்புகொண்டு வினவிய போது, "இந்த விடயம் தொடர்பில் தனக்கு சுகாதார அமைச்சினால் இதுவரை எந்தவித அறிவிப்பும் உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்படவில்லை" என்றார்.