தரவு பாதுகாப்பு மசோதாவின் பாரதூரமான விடயங்கள் தீர்க்கப்படாத வரை நிறைவேற்றப்படக்கூடாது: TISL
2022 மார்ச் மாதம் 9ஆம் திகதி - தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மசோதா மீதான இரண்டாவது வாசிப்பு இடம்பெறவுள்ளது
தற்போதைய ஏற்பாடுகளுடன் காணப்படும் மசோதா மீதான முக்கிய மூன்று பாரதூரமான சிக்கல்கள்
குறித்த பாரதூரமான சிக்கல்கள் அடையாளம் கண்டு தீர்வு காணும் வரை சட்டத்தை நிறைவேற்றுவதில் அவசரப்பட வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு
தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மசோதா மீதான இரண்டாவது வாசிப்பு நாளை (09) புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. செய்முறைப்படுத்துனர் அல்லது கட்டுப்பாட்டாளர்களிடம் உள்ள தரவுகளை அடையாளம் கண்டு வலுப்படுத்துவதன் மூலம் தனிப்பட்ட தரவின் செயலாக்கத்தை ஒழுங்குபடுத்துதல் என்பது இந்த மசோதாவின் நோக்கமாகும்.
எவ்வாறாயினும், இம்மசோதாவானது தற்போது இருக்கும் வடிவிலேயே சட்டமாக்கப்பட்டால், சில உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மீதான தாக்கங்கள் உட்பட மேலும் முக்கிய மூன்று பகுதிகள் குறித்து ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் தனது ஆழமான கரிசனையினை வெளிப்படுத்துகிறது.
குறிப்பாக தகவல்கள் மக்களால் பயன்படுத்துவதற்கும் அவர்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்கும் ஒரு கருவியாக மாறிவரும் இன்றைய சூழலில் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்ட கட்டமைப்பை உருவாக்குதல் என்பது மனித உரிமைகளை பாதுகாப்பதில் ஓர் முக்கிய அடைவாகும். இருப்பினும்,
இந்த மசோதா தொடர்பில் TISL நிறுவனத்தின் முக்கிய மூன்று முன்மொழிவுகள் காணப்படுகிறது:
1. ஊடகத்துறை மீதான தாக்கம் - இம்மசோதாவானது தரவு செய்முறைப்படுத்தலில் "ஊடகவியலாளர்களின் நோக்கத்திற்காக" மற்றும்/அல்லது ஊடக சுதந்திரத்தினை பயன்படுத்துதல், கருத்துச் சுதந்திரம் போன்ற விடயங்களை அங்கீகரிக்கவில்லை.
அதாவது, ஒலிபரப்பு ஊடகம் உள்ளிட்ட ஊடகங்கள், தங்களது ஊடக நடவடிக்கைகளுக்காக பிறரின் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவதில் இம்மசோதாவானது தரவுக் கட்டுப்பாட்டாளராகவும் செய்முறைப்படுத்துனராகவும் மாறுவதனால், ஊடக அறிக்கையிடலின் போது தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துவதிலிருந்து கட்டுப்படுத்தப்படுகிறது.
ஆகவே ஊடக அறிக்கையிடலின் நோக்கங்களுக்காக தகவல்களை அணுகுவததையும் வெளியிடுவதையும் தேவையற்ற வகையில் கட்டுப்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்யும் அடிப்படையில் சட்டரீதியான நிபந்தனையாக "ஊடகவியலாளர்களின் நோக்கத்திற்காக" எனும் பகுதி அடையாளம் காணப்பட வேண்டும் என TISL நிறுவனம் பரிந்துரைக்கிறது.
2. தரவு பாதுகாப்பு அதிகார சபையானது பரந்த அதிகாரங்களை கொண்டதும் சுயாதீனமற்றதும் ஆகும் - இந்த மசோதாவானது தரவு பாதுகாப்பு அதிகார சபையினை ஓர் "அரச கட்டுப்பாட்டு" அமைப்பாகவே சித்தரிக்கிறது. அரசியல் ரீதியான தலையீடு அல்லது அதன் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகளை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிகளுக்கு எதிரான போதுமான அதிகாரம் குறித்த அதிகார சபைக்கு இல்லை.
மேலும், தரவு பாதுகாப்பு அதிகார சபையானது சுயாதீனமற்ற மற்றும் நீதித் துறைசாரா அமைப்பாக இருந்த போதிலும் தரவுகளை பெறுவதற்கான மூலகங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள மற்றும் அதிகார சபையின் உத்தரவுகளுக்கு இணங்கத் தவறும் தரவு கட்டுப்பாட்டாளர்களுக்கும் தரவு செய்முறைப்படுத்துனர்களுக்கும் 10 மில்லியன் ரூபா வரை தண்டனை விதிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது பொதுவாக மக்களின் உரிமைகளில் தாக்கங்களை ஏற்படுத்துவதுடன், ஊடகங்கள் மற்றும் ஊடகவியலார்களின் மூலகங்கள்/ ஆதாரங்கள் தொடர்பிலான தகவல்களை அதிகார சபை கோரவும் இது வழிவகுக்கும். எனவே குறித்த சட்டத்தின் நோக்கங்களுக்காக ஓர் சுயாதீன தரவு பாதுகாப்பு அதிகார சபை அமையப்பெற வேண்டும் என TISL நிறுவனம் பரிந்துரைக்கிறது.
3. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மீதான தாக்கம் - மசோதாவின் தற்போதைய ஏற்பாடுகளுக்கு அமைவாக, ஏதேனும் முரண்பாடுகளின் போது தகவல் அறியும் உரிமைச் சட்டம் உட்பட வேறு எழுதப்பட்ட சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு மேலாக குறித்த மசோதாவின் ஏற்பாடுகள் மேலோங்கி காணப்படும்.
குறிப்பாக நடைமுறையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை வலுவிழக்க வழிவகுக்கும். ஆகவே, தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பிலான முரண்பாடுகளை தவிர்க்க ஓர் திட்டவட்டமான விதிவிலக்கைச் சேர்க்க TISL நிறுவனம் பரிந்துரைக்கிறது.
முன்னதாக 2022 மற்றும் 2021 இல், TISL நிறுவனமானது தொழில்நுட்பம் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் அனைத்து (225) பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் இந்த கரிசனையினை எழுப்பியது.
2019ஆம் ஆண்டு வரையப்பட்ட தனிப்பட்ட தரவு பாதுகாப்பு கட்டமைப்பின் வரைபானது தற்போதைய மசோதாவை மேம்படுத்தக்கூடிய இரண்டு முக்கிய விடயங்களை கொண்டுள்ளது.
தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்போடு பொதுநலன் சமநிலைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டின் கட்டமைப்பின் முன்னுரையானது குறிப்பாக இலங்கையின் அரசியலமைப்பானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை ஓர் முக்கியமான உரிமையாக குறிப்பிடுகிறது.
2019 ஆம் ஆண்டின் வரைபு மசோதாவை அமுல்படுத்தும் அரச கட்டுப்பாட்டு அதிகார சபைக்கு மூன்று உறுப்பினர்களை நியமிக்க பொது விண்ணப்ப படிமுறை ஊடாக அழைப்பு விடுத்தது. இந்த நடவடிக்கையானது அதிகார சபை சுயமாக இயங்குவதை உறுதி செய்யும் முக்கிய விடயமாகும்.
சிறந்த பொது நலனுக்காக தற்போது நடைமுறையிலுள்ள உரிமைகள் மற்றும் ஏற்பாடுகளுடன் தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்தை இணக்கமாக உருவாக்குவது மிகவும் முக்கியமானது என்பதனால் TISL நிறுவனமானது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு என்பவற்றிடம் குறித்த கரிசனைகள் முறையாக அடையாளப்படுத்தப்பட்டு தீர்க்கப்படும் வரை இச்சட்டத்தை இயற்ற அவசரப்பட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறது.
இவ்விடயம் தொடர்பாக TISL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நதிஷானி பெரேரா குறிப்பிடுகையில்,
"தற்போதைய வடிவில் குறித்த மசோதாவானது இயற்றப்படுமானால் தரவு பாதுகாப்பு சட்டமூலம் ஆனது இன்னும் துஷ்பிரயோகம் அல்லது தவறாக பயன்படுத்த கூடிய ஓர் சட்ட மூலமாக மாறக்கூடும். இந்த மசோதாவானது ஊடகங்கள் மற்றும் முறைக்கேடுகளை வெளிப்படுத்தும் நபர்கள் (Whistleblowers) மத்தியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்த பயன்படுத்தப்படலாம், மேலும் இது இலங்கையின் ஜனநாயகத்திற்கு பேரிடியாகவும் அமையும்" என அவர் குறிப்பிட்டார்.
Comments (0)
Facebook Comments (0)