ஈஸ்டர் படுகொலை: அரசியல் சதியின் ஒரு பகுதி: பேராயர் மல்கம் ஆண்டகை ஜெனீவாவில் தெரிவிப்பு
குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல், நீதிக்காகக் குரல் கொடுப்பவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தலையிட வேண்டும் என்று, இலங்கையின் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது சாதாரண அமர்விலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை பேராயர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் முற்றிலும் ஒரு சில இஸ்லாமிய தீவிரவாதிகளின் செயல் என்பதுதான் முதல் அபிப்பிராயம் என்ற போதும், இந்த படுகொலை பெரும் அரசியல் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதை அடுத்தடுத்த விசாரணைகள் சுட்டிக்காட்டுகின்றன என்றும் பேராயர் குறிப்பிட்டார்.
பலமுறை கோரிக்கை விடுத்த போதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கு இலங்கையின் தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டது என்று தெரிவித்துள்ள அவர், ஈஸ்டர் படுகொலை ஒரு மாபெரும் அரசியல் சதியின் ஒரு பகுதியாகும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கும், பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கும் பதிலாக, நீதிக்காகக் குரல் கொடுப்பவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
தாக்குதல் நடந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரும் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று உண்மையில் என்ன நடந்தது என்பது இன்னும் இருளில் உள்ளது என்றும் பேராயர் குறிப்பிட்டார்.
Comments (0)
Facebook Comments (0)