பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்த அரசு முயற்சி; 4 பல்கலைகளுக்கு உப வேந்தர் நியமனம் இல்லை
றிப்தி அலி
நாட்டிலுள்ள பல்கலைக்கழக நிர்வாகங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சியில் தற்போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இறங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள் தேசிய மக்கள் சக்தியின் கீழ் காணப்படுகின்ற நிலையிலேயே பல்கலைக்கழகங்களின் நிர்வாகங்களையும் தங்களின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முன்னைய அரசாங்கங்களின் காலப் பகுதியில் நியமிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பேரவை உறுப்பினர்களை நீக்கிவிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழங்களும் புதிய பேரவை உறுப்பினர்களை நியமிக்க கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய பேரவை உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை தற்போது வெற்றிடமாகியுள்ள பல்கலைக்கழகங்களின் உப வேந்தர் பதவிகளுக்கு எவரையும் நியமிப்பதில்லை என்றும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனால், தென் கிழக்கு மற்றும் ரஜரட்டை ஆகிய பல்கலைக்கழகங்களின் உப வேந்தர் பதவிகளுக்காக முன்மொழியப்பட்ட பெயர்கள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவினால் ஏற்கனவே நிராகிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இந்த பல்கலைக்கழகங்களின் உப வேந்தர் பதவிகளுக்காக புதிய விண்ணப்பங்களை கோருமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பதவிக்காக முன்மொழியப்பட்ட பெயர்கள் தொடர்பில் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், குறித்த மூன்று பல்கலைக்கழகங்களின் நிர்வாகங்கள் தற்போது பதில் உப வேந்தர்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்கு வந்த பின்னர், ருகுணு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் நீக்கப்பட்டு, தகுதிவாய்ந்த அதிகாரியொருவரின் கீழ் அப்பல்கலைக்கழகம் கொண்டுவரப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள 17 பல்கலைக்கழகங்களில் நான்கு பல்கலைக்கழகங்கள் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக உப வேந்தரின்றி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருரிரு மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகாரிக்கும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
Comments (0)
Facebook Comments (0)