அதாஉல்லா உட்பட 4 முஸ்லிம் எம்.பிக்கள் இம்ரான் கானுடனான சந்திப்பில் பங்கேற்கவில்லை

அதாஉல்லா உட்பட 4 முஸ்லிம் எம்.பிக்கள் இம்ரான் கானுடனான சந்திப்பில் பங்கேற்கவில்லை

தேசிய காங்கிரஸின் தலைவரும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா உள்ளிட்ட நான்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான இன்றைய சந்திப்பில் பங்கேற்கவில்லை எனத் நம்பத்தகுந்த வட்டாரங்கள் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.

குறித்த சந்திப்பில் ஆளும் கட்சியினைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், மர்ஜான் பளீல் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரைக்கார் ஆகியோரும் பங்கேற்கவில்லை.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வருகை தந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானினை சந்திப்பதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

எனினும் குறித்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதுடன், பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையிலேயே குறித்த சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று (24) புதன்கிழமை காலை திடீரென முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கும் இடையிலான சந்திப்பினை கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிராலயம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த சந்திப்பில் இம்ரான் கானுடன் வருகை தந்த அமைச்சர் அலி சப்ரி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், ஏ.எச்.எம்.ஹலீம், ஹாபிஸ் நஸீர் அஹமட், எம்.எஸ். தௌபீக், எச்.எம்.எம்.ஹரீஸ், அலி சப்ரி ரஹீம், எம்.எம்.முஷாரப், இஷாக் ரஹ்மான், முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மஹ்ரூப் ஆகிய முஸ்லிம் எம்.பிக்கள் கலந்துகொண்டனர்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கும் இடையிலான சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் கபீர் காசீம் ஆகியோர் கலந்துகொண்டமையினால் இந்த சந்திப்பில் அவர்கள் கலந்துகொள்ளவில்லை.

இவ்வாறான நிலையில் ஆளும் கட்சியினைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாஉல்லா,  காதர் மஸ்தான், மர்ஜான் பளீல் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரைக்கார் ஆகியோர் மாத்திரம்  பங்கேற்கவில்லை.

இந்த சந்திப்பில் இவர்கள் பங்கேற்காமை தொடர்பில் அறிந்துகொள்ள பலமுறை முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை.