"RTI Officer எங்களது வைத்தியசாலையில் இல்லை"
றிப்தி அலி
"RTI Officer என்று அழைக்கப்படும் தகவல் அதிகாரி எங்களது வைத்தியசாலையில் இல்லை" என பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அறிவித்துள்ளார்.
பிராந்திய ஊடகவியலாளரும், ஆர்.டி.ஐ செயற்பாட்டாளருமான எம்.எஸ் சம்சுல் ஹுதாவினால் பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவலறியும் விண்ணப்பத்திற்கே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தகவலறியும் உரிமைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்குப் பயனளிக்கும் நோக்கத்திற்காக ஒவ்வொரு பகிரங்க அதிகார சபையும், குறித்த சட்டம் நடைமுறைக்கு வந்த திகதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தகவல் அதிகாரியும், குறித்தளிக்கப்பட்ட அதிகாரியும் நியமிக்கப்பட வேண்டும்" என 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 23 (1) (அ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் குறித்த சட்டம் நடைமுறைக்கு வந்து சுமார் ஏழு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், பகிரங்க அதிகார சபையான பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு இதுவரை தகவல் அதிகாரி நியமிக்கப்பட்டாமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
அத்துடன் இந்த விடயம் தகவலறியும் உரிமைச் சட்டத்தினை மீறும் செயற்பாடொன்றாகும். இதேவேளை, ஒரு பகிரங்க அதிகார சபைக்கு தகவல் அலுவலகர் நியமிக்கப்படும் வரை குறித்த பகிரங்க அதிகார சபையின் தலைவர் அல்லது பிரதான நிறைவேற்று அதிகாரி தகவல் அலுவலகராக கருதப்படுவார் எனவும் இச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு இதுவரை தகவல் அதிகாரி நியமிக்கப்படாவிட்டால், குறித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் - பதவி வழியாக தகவல் அதிகாரியாக செயற்பட வேண்டும்.
இவ்வாறான நிலையில், பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் தகவல் அதிகாரியாக செயற்பட வேண்டிய வைத்திய அத்தியட்சகரே, "குறித்த வைத்தியசாலைக்கு RTI Officer இல்லை" என்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொத்துவில் வைத்தியசாலையிலுள்ள சுகாதார உதவியாளர்கள் தொடர்பான தகவல்களைப் பெறும் நோக்கில் பிராந்திய ஊடகவியலாளரும், ஆர்.டி.ஐ செயற்பாட்டாளருமான எம்.எஸ் சம்சுல் ஹுதாவினால் கடந்த டிசம்பர் 13ஆம் திகதி பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு பதிவுத் தபாலின் ஊடாக தகவலறியும் விண்ணப்பமொன்று சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த தகவல் கோரிக்கைக்கு 14 வேலை நாட்களுக்குள் பதில் வழங்கப்பட வேண்டும் என 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 25 (1)ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இரண்டு மாதங்கள் கழித்தும் குறித்த தகவல் கோரிக்கைக்கு எந்தவித பதிலும் பொத்துவில் ஆதார வைத்தியசாலையினால் வழங்கப்படவில்லை.
இதனால், கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி குறித்த வைத்தியசாலைக்கு RTI-10 விண்ணப்பத்தின் ஊடாக மேன் முறையீடு மேற்கொள்ளப்பட்டது.
எனினும், குறித்த மேன் முறையீட்டின் பதிவுத் தபாலை பொத்துவில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பெற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பியுள்ளார்.
அது மாத்திரமல்லாமல், "RTI Officer எங்களது வைத்தியசாலையில் இல்லை" என்றும் திருப்பி அனுப்பப்பட்ட மேன் முறையீட்டு கடிதத்தின் உறையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)