அதிகார மோதலின் உச்சத்தில் அமைச்சர் நசீரும் ஆளுநர் செந்திலும்
றிப்தி அலி
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அதிகார துஷ்பிரயோங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முறையிடவுள்ளேன் என சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இந்த அதிகாரத் துஷ்பிரயோகம் காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கிழக்கு மாகாணத்தினை பிரதிநித்துவப்படுத்துகின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான முக்கிய சந்திப்பொன்றினை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநரின் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான சில முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
கடந்த ஒருரிரு வாரங்களாக சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டிற்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் பாரிய கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்திலுள்ள கனிய வளங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் சில அதிரடி உத்தரவுகளை கிழக்கு ஆளுநர் அண்மையில் மேற்கொண்டிருந்தார்.
இதனையடுத்தே குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நசீர் அஹமட்டிற்கும் ஆளுநருக்கும் இடையில் முரண்பாடு தோன்றியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.
கிழக்கு மாகாணத்திலுள்ள கனிய மணல் மற்றும் கைத்தொழில் சார் கனிய வளங்கள் தொடர்பான முன்மொழிவுகளை செயற்படுத்துவதை உடனடியாக இடைநிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.பி மதநாயக்க கடந்த ஜுன் 16ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.
அது மாத்திரமல்லாமல், கனிய மணல் மற்றும் கைத்தொழில் சார் கனிய வளங்களுடன் தொடர்புடைய காணிகைளை விடுவிக்க வேண்டாம் எனவும் ஆளுநரின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் ஆளுநர் செயலகத்திலுள்ள மாகாண கனிய மதிப்பீட்டுக் குழுவினால் மதீப்பீடு செய்யப்பட்டு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவிற்கு முன்மொழிவுகள் அனுப்பப்படும் வரை இந்த தடையுத்தரவு தொடரும் எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரான ஆளுநரின் அறிவுறுத்தலுகமைய மேற்கொள்ளப்பட்ட இந்த உத்தரவு தொடர்பான அறிவித்தல், மாகாணத்திலுள்ள அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
எனினும், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளரினால் அனுப்பப்பட்ட மேற்படி கடித்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட உத்தரவு அரசியலமைப்பினை நேரடியாக மீறும் செயல் என புவிச்சரிதவியல் அளவை சுரங்கவியல் பணியகம் அறிவித்துள்ளது.
"கனிய வளங்கள் தொடர்பில் எந்தவொரு உத்தரவினையும் ஆளுநர் செயலகத்தினால் வழங்க முடியாது. இது தொடர்பில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது" என இப்பணியகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் பட்டய புவிச்சரிதவியல் நிபுணர் அஜித் பிரேம தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.பி மதநாயக்கவிற்கு புவிச் சரிதவியல் அளவை சுரங்கவியல் பணியகத்தின் பதில் பணிப்பாளரினால் கடந்த 7ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்டுள்ள அவசரக் கடித்திலேயே இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பிரதிகள் - ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர், சுற்றாடல் அமைச்சின் செயலாளர், உள்நாட்டலுவல்கள், பொது நிர்வாகம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாணத்திலுள்ள மாவட்டங்களின் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, 'கனிய மணல் மற்றும் மண் அகழ்வுகள்' எனும் தலைப்பிலான விசேட கூட்டமொன்றுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கடந்த 7ஆம் திகதி அழைப்பு விடுத்துள்ளார்.
மாகாணத்திலுள்ள பிரதேச செயலாளர்களுக்கும், புவிச்சரிதவியல் அளவை சுரங்கவியல் பணியகத்தின் பிராந்திய பொறியியலாளர்களுக்குமே இந்த கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த ஐந்து வருடங்களில் வழங்கப்பட்ட கனிய மற்றும் மண் அகழ்விற்கான அனுமதிப்பத்திரங்கள் மற்றும் அனுமதி வழங்கப்படாமல் நிலுவையிலுள்ள விண்ணப்பங்கள் போன்றவற்றின் தகவல்களையும் இக்கூட்டத்திற்கு கொண்டுவருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
எனினும், "துறையுடன் சம்பந்தப்பட்ட அமைச்சரின் அனுமதி பெறப்பட்ட பின்னரே இக்கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும்" என கிழக்கு மாகாணத்திலுள்ள புவிச் சரிதவியல் அளவை சுரங்கவியல் பணியகத்தின் பிராந்திய பொறியியலாளர்கள் மூவரும் தனித் தனி கடிதங்களின் ஊடாக ஆளுநரின் செயலாளருக்கு கடந்த ஜுலை 7ஆம் திகதி அறிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரியாக செயற்பட்ட எம்.எம். கலாவுதீன், ஆளுநர் செந்தில் தொண்டமானின் அறிவுறுத்தலுக்கமைய, இறக்கமாம் பிரதேசத்திற்கு இடமாற்றப்பட்ட விடயம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்னும் ஓரிரு வருடங்களில் ஓய்வுபெறவுள்ள கலாவுதீன், சுற்றுநிரூபத்தினை மீறி வெளி மாவட்டமொன்றிற்கு இடமாற்றப்பட்ட விடயமும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் குறித்த இடமாற்றத்தினை உடனடியாக ரத்துச் செய்வது என தீர்மானம் இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர் நசீர் அஹமட்,
"கிழக்கு மாகாணம் என்பது செந்தில் தொண்டமானின் அப்பாவினதோ அல்லது அவரினதோ சொத்து கிடையாது. அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டால் கிழக்கிலே இறங்கவிடக்கூடாது.
மலையகத்தில் செய்வது போன்று அதிகாரிகளை சும்மா கூப்பிட்டு வைத்துக் கொண்டு கணக்கெடுக்காமல் ஆட்சி செய்கின்ற விடயங்கள் எல்லாம் இங்கு சரிவராது. கிழக்கு மாகாணத்தில் இந்த விளையாட்டுக்களுக்கு இடம் கிடையாது.
நானும், முதலமைச்சராக இருந்தவன். ஆனால் அரசியல் பழிவாங்கல் நோக்கில் இப்படியான இடமாற்றங்களை வழங்கியது கிடையாது. எங்களது கல்வி வலயத்திலுள்ள கல்வி அதிகாரிகளின் இடமாற்ற விடயங்களில் கிழக்கு மாகாண ஆளுநர் தலையிடக்கூடாது.
கோட்டக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றம் வலயக் கல்விப் பணிப்பாளரின் அதிகாரத்துக்கு உட்பட்ட விடயம். ஆளுநர் சொல்லுகின்றார் என்பதற்காக இவ்வாறு எல்லாவற்றையும் வலயக் கல்விப் பணிப்பாளர் செய்ய முடியாது.
இது தொடர்பாக விரிவான அறிககையை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவுக்கு மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் வழங்க வேண்டும். தற்போதுள்ள கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் திஸாநாயாக்காவை இரவோடு இரவாக அன்று நான் மாற்றினேன்.
ஏனென்றால் இந்த செயலாளர் கிழக்கு மாகாண கல்வியை முழுக்க முழக்க அழித்தவர். மாகாண கல்விச் செயலாளரின் இந்த நடவடிக்கைகளுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் இடம் கொடுக்கக்கூடாது" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)