தைப் பொங்கலை முன்னிட்டு நடத்தப்பட்ட ஜல்லிக் கட்டுக்கு 18 இலட்சம் ரூபா செலவு

தைப் பொங்கலை முன்னிட்டு நடத்தப்பட்ட ஜல்லிக் கட்டுக்கு 18 இலட்சம் ரூபா செலவு

றிப்தி அலி

தைப் பொங்கல் பண்டிகையினையொட்டி கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜல்லிக் கட்டு நிகழ்விற்கு 18 இலட்சத்து 43 ஆயிரத்து 80 ரூபா செலவளிக்கப்பட்டுள்ள விடயம் தகவலறியும் கோரிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளது.

'அனுசரணை' எனும் பெயரில் மூன்றாம் தரப்பினரிடமிருந்து இந்த நிதித் தொகை பெறப்பட்டதாக ஆளுநர் செயலக தகவல் அதிகாரியான கே. சுதாகரன் தெரிவித்தார்.

இதற்கமைய, மக்கள் வங்கியினால் 10 இலட்சம் ரூபாவும் இலங்கை வங்கி 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண தைப் பொங்கல் கலாசார விழா மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றது. இதில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக் கட்டு திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பிரதேசத்தில் ஜனவரி 6ஆம் திகதி  இடம்பெற்றது.

தமிழ் நாட்டின் ஜல்லிகட்டு பாதுகாப்பு நலச் சங்க உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்தப் போட்டியில் 200க்கும் அதிகமான காளை மாடுகள் பங்பேற்றிருந்தன.

இலங்கையில் வழக்கொழிந்த மீட்டெடுக்கும் நோக்கில் இந்த முறை அரச விழாவாக நடத்தப்பட்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

எனினும், ஜல்லிக்கட்டுக்காக அரசாங்கத்தினால் எந்தவொரு ரூபாவும் செலவளிக்கப்படாத விடயம் தகவலறியும் கோரிக்கையின் ஊடாகத் தெரியவந்துள்ளது.

இதேவேளை, சுமார் ஒரு வாரம் இடம்பெற்ற கிழக்கு மாகாண தைப் பொங்கல் கலாசார விழாவில் படகோட்டம், சிலம்பம் போட்டி, கடற்கரை கபடி, பாடசாலை மாணவர்களை ஒன்று சேர்த்து 1008 பொங்கல் பானைகள், 1500 பரத நாட்டிய கலைஞர்கள், 500 கோலங்கள் போன்ற பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

இவற்றுக்கு செலவளிக்கப்பட்ட நிதித் தொகை தொடர்பான விபரங்களை வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செயலத்திடம் தகவலறியும் சட்டத்தின் கீழ் கோரிய போதிலும் அது தொடர்பான தகவல் எதுவும் வழங்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.