SLBC தலைவரின் பிரத்தியேகச் செயலாளர் எனக் கூறி பித்தலாட்டம்; அப்படியொரு பதவியே அங்கில்லையாம்
- தம்பி -
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) தலைவர் ஹட்சன் சமரசிங்கவின் பிரத்தியேகச் செயலாளர் எனக் கூறிக் கொண்டு, வீரசிங்கம் ஜெய்சங்கர் என்பவர் அந்தக் கூட்டுத்தானத்தின் நிருவாகத்தில் தலையீடு செய்து வரும் நிலையில், "SLBC இல் அப்படியொரு பதவியொன்று இல்லை" என்று அந்தக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தகவல் அறிவியும் உரிமைச் சட்டத்தின் கீழ், SLBCக்கு விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலி சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்துக்கு, அந்த நிறுவனத்தின் தகவல் உத்தியோகத்தரும், உதவிப் பணிப்பாளருமான இந்திர நவகமுவ ஒப்பமிட்டு அனுப்பிவைத்துள்ள பதிலில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
வீரசிங்கம் ஜெய்சங்கர் என்பவர் தன்னை - இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவரின் பிரத்தியேகச் செயலாளர் எனக் கூறிக்கொள்வதையும், சில ஊடகங்களிலும் அவரை அவ்வாறு குறிப்பிட்டு செய்திகள் வெளியாகியமையினையும் அவதானிக்க முடிந்தது.
அதேவேளை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலி நிகழ்ச்சிகளிலும் ஜெய்சங்கள் என்பவர் தன்னை, அந்த நிறுவனத் தலைவரின் பிரத்தியேகச் செயலாளர் என கூறியமையும், நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் கூட, அவரை - அவ்வாறானதொரு பதவியைக் குறிப்பிட்டே அழைத்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை ஒலிரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் மீது அதிகாரம் செலுத்தும் வகையில் வீரசிங்கம் ஜெய்சங்கர் என்பவர் பேசியும் நடந்தும் வருவதாகவும் அங்கிருந்து அறியக் கிடைக்கிறது.
இவ்வாறான நிலையிலேயே, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவரின் பிரத்தியேகச் செயலாளர் எனும் பதவியொன்று உள்ளதா? அந்தப் பதவியை யார் வகிக்கின்றார்? எனவும் விவரங்களைக் கோரி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு விண்ணப்பமொன்றினை ஊடகவியலாளர் றிப்தி அலி அனுப்பி வைத்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் அனுப்பப்பட்ட கடிதத்தில்;
"இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலே அவ்வாறானதொரு பதவியெதுவும் கிடையாது என்றும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அவ்வாறான எந்தவொரு நபருக்கும் சம்பளம் வழங்கப்படுவதில்லை" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)