விழிப்புலனற்றோர் வங்கிக் கணக்கு வைத்திருக்க தடையேதுமில்லை
றிப்தி அலி
உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் விழிப்புலனற்றோர் வங்கிக் கணக்கு திறப்பதற்கோ அல்லது பாராமரிப்பதற்கோ இலங்கை மத்திய வங்கியினால் எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்ற விடயம் தகவல் அறியும் விண்ணப்பத்தின் ஊடாக தெரியவந்தது.
விழிப்புலனற்றோர் வங்கிக் கணக்கு திறப்பதற்கு சில வங்கிகளினால் மறுக்கப்படுவதாக விழிப்புலனற்றவர்களுக்கான கிறீன் பிளவர் ஸ்ரீலங்கா அமைப்பு எமது கவனத்திற்கு கொண்டுவந்தது.
இந்த விடயம் தொடர்பில் ஆராயும் நோக்கில் இலங்கை மத்திய வங்கிக்கு மேற்கொள்ளப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு அதன் பிரதி ஆளுநரும் தகவல் அதிகாரியுமான கே.எம்.எம். சிறிவர்த்தனவினால் கடந்த நவம்பர் 15ஆம் திகதி வழங்கப்பட்ட பதிலிலேயே மேற்கண்ட விடயம் வெளியாகியது.
அத்துடன் விழிப்புலனற்றோர் வங்கிக் கணக்கு திறத்தல் மற்றும் பாராமரித்தல் ஆகியவற்று தடை விதிக்கும் வகையில் எந்தவித ஒழுங்குமுறையும் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு வழங்கப்படவில்லை என மத்திய வங்கி தெரிவித்தது.
2011ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் 7ஆம் பிரிவின் கீழ் கடந்த 2011.10.05ஆம் திகதி வெளியிடப்பட்ட உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கான சாசனத்தில் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டது.
இதேவேளை, முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் குறைந்த நிதி அறிவுகொண்ட வாடிக்கையாளர்கள் ஆகிய தரப்பினருக்கு வங்கிச் சேவைகளை வழங்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு இலங்கையிலுள்ள அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என மத்திய வங்கி மேலும் தெரிவித்தது.
Comments (0)
Facebook Comments (0)