ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தினை கடற்றொழில் அமைச்சிடம் ஒப்படைக்க நடவடிக்கை

  ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தினை கடற்றொழில் அமைச்சிடம் ஒப்படைக்க நடவடிக்கை

றிப்தி அலி

ஒலுவில் துறைமுகத்திலுள்ள மீன்பிடி துறைமுகத்தினை  கடற்றொழில் அமைச்சிடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள விடயம் தகவல் அறியும் விண்ணப்பத்தின் ஊடாக தெரியவந்தது

இந்த துறைமுகம் தொடர்பில்  துறைமுக அதிகார சபைக்கு மேற்கொள்ளப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு அதிகார சபையின் தகவல் அதிகாரியான கெப்டன் ஹர்ஷ வீரசுரிய வழங்கிய பதிலிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒலுவில் துறைமுகத்திலுள்ள மீன்பிடி துறைமுகத்திற்கு சொந்தமான பல பகுதிகள் கடற்றொழில் அமைச்சிடம் கையளிக்கவும்  அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கெப்டன் ஹர்ஷ கூறினார்.  

இதேவேளை, கடந்த  வருடம் செப்டம்பர் 13ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே குறித்த மீன்பிடி துறைமுகத்தினை  தனது அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இதற்கமைய, இத்துறைமுகத்தினை கையளிப்பதற்கு சம்மதம் தெரிவிக்கும் கடிதமும் இலங்கை துறைமுக அதிகார சபையினால் கடற்றொழில் அமைச்சிற்கு கடந்த வாரம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மிக விரைவில் இந்த மீன்பிடி துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டார். இதனால், அப்பிரதேசத்திலுள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் நன்மை அடைவர் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த  துறைமுகத்திற்குள் படகுகள் பிரவேசிக்கும் வாயில் பூரணமாக மண்ணினால் மூடப்பட்டுள்ளமையினால் கடந்த 2018.09.23ஆம் திகதி முதல் மீன்பிடி துறைமுக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.