ஒத்துழைப்பிற்கான பகுதிகளை வெளிநாட்டு அமைச்சர் மற்றும் இந்தோனேசியத் தூதுவர் அடையாளம் காணல்
இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை இலங்கையும் இந்தோனேசியாவும் 1952 இல் முறையாக ஸ்தாபிப்பதற்கு முன்பிருந்தே நீண்ட கால வரலாற்று மற்றும் கலாசார உறவுகளின் அடிப்படையில் பல பொதுவான நலன்கள் மற்றும் இலக்குகளை பகிர்ந்து கொண்டன என்பதை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் எடுத்துரைத்தார்.
இலங்கைக்கான இந்தோனேசியக் குடியரசின் தூதுவர் டெவி குஸ்டினா டோபிங், வெளிநாட்டு அமைச்சரை 2022 ஜனவரி 24, திங்கட்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தார்.
2021 டிசம்பர் 21ஆந் திகதி ஜனாதிபதியிடம் தனது நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த பின்னர் வெளிநாட்டு அமைச்சருடனான முதலாவது சந்திப்பு இதுவாகும். 2021 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பக்க அமர்வுகளில் இந்தோனேசிய வெளிநாட்டு அமைச்சர் ரெட்னோ எல்.பி. மர்சுடியுடனான சந்திப்பை நினைவு கூர்ந்த அமைச்சர், இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவை சி.ஓ.பி.26 இல் சந்தித்தமை மற்றும் அவர் பதவியேற்பதற்கு முன்பிருந்தான இரு நாடுகளுக்கும் இடையிலான சிறந்த அன்பான உறவுகளைக் குறிப்பிட்டார்.
இரு நாடுகளும் அணிசேரா இயக்கத்தில் அங்கத்துவம் பெற்ற காலகட்டம் மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் நிலையான அபிவிருத்தி உள்ளிட்ட சமூகப் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய கண்ணோட்டத்தைப் பகிர்ந்துகொண்டதுடன், சர்வதேச அரங்கில் உலகளாவிய முன்னுரிமைகளை இரு நாடுகளும் பகிர்ந்து கொண்டதாக அமைச்சர் பீரிஸ் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இந்து சமுத்திரம் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் அபிவிருத்தியின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதோடு, இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தில் இலங்கையின் தலைமைத்துவம் மற்றும் பொதுநலவாய நீல சாசன சாம்பியனாக முன்னணிப் பங்கு வகிக்கின்றமை மற்றும் சதுப்புநில பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளில் அதன் பணிகள் மற்றும் நிலையான நைதரசன் முகாமைத்துவத்திற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்தல் ஆகியன குறித்து விளக்கினார்.
வெளிநாட்டு அமைச்சரும் தூதுவரும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச அரங்குகளில் நெருக்கமான ஒத்துழைப்பு, மற்றும் இரு நாடுகளினதும் பரஸ்பர உறுப்புரிமை வேட்புரிமைகளை ஆதரித்தல் மற்றும் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துதல் போன்ற பரந்த அளவிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு விருப்பம் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 2022 இல் குறிக்கப்படவுள்ள இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 70வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், தமது தலைவர்களின் உயர்மட்டத் தொடர்புகளை மாத்திரமன்றி, மக்களிடையேயான தொடர்புகளை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தோனேசிய வெளிநாட்டு அமைச்சரின் விஜயத்துடன் இரு நாட்டு உறவுகளின் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது மிகவும் பொருத்தமானது எனக் குறிப்பிட்ட வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இந்தோனேசியாவின் வெளிநாட்டு அமைச்சருக்கு அன்பான அழைப்பையும் விடுத்தார்.
கொழும்பில் நடைபெறவுள்ள இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் மூன்றாவது அமர்வை விரைவில் கூட்டுதல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்தி, பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் ஜனாதிபதி விடோடோவின் இலங்கை விஜயத்தைப் பின்தொடர்ந்து கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் மற்றும் இருதரப்பு பொருளாதாரத் துறையில் பயன்படுத்தப்படாத ஆற்றலைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் ஆகியன குறித்தும் இருவரும் கலந்துரையாடினர்.
நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல் மற்றும் மக்களின் சமூகப் பொருளாதார அபிவிருத்தி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடனான ஈடுபாடு ஆகியவற்றில் இலங்கையின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் பீரிஸ் தூதுவருக்கு விளக்கமளித்தார்,
எனினும் தேவையற்ற மற்றும் ஊடுருவும் சில ஐ.நா. வழிமுறைகளால் நாடுகளைத் தேர்ந்தெடுத்து தனிமைப்படுத்துவது குறித்து எதிர்ப்பு வெளியிட்டார். பொருளாதார இராஜதந்திரத்திற்கு இலங்கை முன்னுரிமை அளித்து வருவதாகவும், குறிப்பாக தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களை அதிகரித்து வருவதாகவும், இரு தரப்பினரும் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தூதுவர் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு எதிர்பார்த்ததுடன், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறையில் நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் பங்காளித்துவத்திற்கான சாத்தியக்கூறுகளை குறிப்பிட்ட அதே வேளை, சில இந்தோனேசிய தொழில்துறையின் ஆர்வத்தையும், இலங்கையில் சாத்தியமான திட்டங்கள் மற்றும் வணிக சமூகம் மற்றும் வர்த்தக சபைகளுடன் நெருக்கமான உறவுகள், அவர்களது பரஸ்பர நலனுக்காக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான உறவுகள் மற்றும் பகுதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சாத்தியமான நிகழ்வுகள் மற்றும் செயற்பாடுகள் ஆகியன குறித்து குறிப்பிட்டார்.
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுதல் மற்றும் புலனாய்வுப் பகிர்வு உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க சாத்தியக்கூறுகளைக் குறிப்பிட்ட வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், ஆண்டுதோறும் சுமார் 60,000 கப்பல்கள் இந்து சமுத்திரத்தைக் கடந்து செல்வதுடன், உலகின் மூன்றில் ஒரு பங்கு எண்ணெயும் இப்பகுதியின் வழியாகச் செல்வதாக சுட்டிக்காட்டி, கடல்சார் முகவர்கள், தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு முகவர் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நெருக்கமான தொடர்புகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் உயர்மட்ட விஜயங்கள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பரஸ்பர நலனுக்காக வலுப்படுத்துவதற்காக 70வது ஆண்டு நிறைவை பயன்படுத்துவதற்கு அவர்கள் எதிர்பார்த்தனர்.
Comments (0)
Facebook Comments (0)