150 மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப் பரிசில்கள்
கல்வி பொதுத் தராதர (உயர் தர) பிரிவில் கல்வி கற்கும் 150 மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன.
இந்த பயனாளிகள் 25 மாவட்டங்களிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இந்த புலமைப்பரிசில்கள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன.
கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பலம்வாய்ந்த பிரிட்டிஷ்காரருக்கு எதிராக கடந்த நூற்றாண்டில் அஹிம்சையை ஆயுதமாக பயன்படுத்தி மகாத்மா காந்தி எவ்வாறு போராடினார் என்பதையும் தனது போதனைகளுக்கு அமைவாகவ வாழ்ந்து காட்டிய மகாத்மா காந்தியின் பெருமைகளையும் அமைச்சர் ஜி எல் பீரிஸ் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் அண்மையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு தான் மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது கிடைக்கப்பெற்றிருந்த அனுபவங்களையும், குறிப்பாக பல்வேறு சமூகங்கள் எவ்வாறு வேறுபாடுகளின்றி வாழ்கின்றன போன்ற விடயங்களையும் அவர் இங்கு பகிர்ந்திருந்தார்.
அத்துடன் மாணவர்கள் தாம் வளரும் பருவத்தில் இவ்வாறான கொள்கைகளை எப்பொழுதும் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு பல்வேறு விடயங்களிலும் உதவிகளை வழங்கிவரும் இந்திய அரசாங்கத்திற்கும் அமைச்சர் நன்றியினை தெரிவித்திருந்தார்.
மாணவர்களின் சாதனைகளை பாராட்டிய இந்திய உயர் ஸ்தானிகர், இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் அதேபோல கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயமும் எந்தச் சந்தர்ப்பத்திலும் மாணவர்களுடன் இணைந்திருக்குமென மாணவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் உறுதியளித்திருந்தார்.
புத்தபெருமான் மற்றும் மகாத்மா காந்தி இடையிலான ஒற்றுமையை இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டியிருந்த அவர், மிக வேகமாக வளர்ந்து வரும் இந்த உலகில் மகாத்மா காந்தியின் சிந்தனைகள் இன்னமும் பின்பற்றப்படுவதனையும் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியா மற்றும் இலங்கை இடையில் மிகவும் நெருக்கமான கலாசார உறவுகள் காணப்படுவதனை நினைவூட்டியிருந்த உயர் ஸ்தானிகர், கல்வி மற்றும் தொழில் துறையில் பரந்த சந்தர்ப்பங்களை கொண்டிருக்கும் இந்தியாவில் காணப்படும் சகல வாய்ப்புக்களையும் இலங்கை மாணவர்கள் பயன்படுத்த வேண்டுமெனவும் ஆலோசனை வழங்கியிருந்தார்.
எதிர்காலத்தில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் பலத்திற்கான சிறந்த மூலவளமாக இலங்கை மாணவர்கள் காணப்படுவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
மகாத்மா காந்தி புலமைப்பரிசில் மட்டுமல்லாது பொறியியல், தொழில்நுட்பம், கலை, விஞ்ஞானம், துணை மருத்துவ கற்கைநெறிகள், சுதேசிய மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வருடாந்தம் 750 புலமைப் பரிசில்களை கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வழங்கி வருகின்றது.
'ஸ்ரடி இன் இந்தியா' என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மிகவும் பிரசித்தமான இந்திய கல்வி நிலையங்களில் இலங்கை மாணவர்களுக்காக ஆயிரக்கணக்கான ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் ஏனைய கல்வி உதவிகள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளமான www.hcicolombo.gov.in என்ற முகவரிக்கு விஜயம் செய்யவும்.
Comments (0)
Facebook Comments (0)