'கட்டுக்கதைக்கு இரையாகாமல்,சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றலுக்குத் தீவிரம் காட்டுங்கள்'
நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 12-19 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களுக்கு முன்னுரிமை...
கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில், நாளை (24) முதல் தடுப்பூசி ஏற்றல்…
தடுப்பூசி ஏற்றப்படும் அனைத்துச் சிறுவர்களும், சிறுவர் நோயியல் விசேட வைத்திய நிபுணர்களால் கண்காணிக்கப்படுவர்…
வைத்தியசாலைகளுக்குள் மாத்திரமே தடுப்பூசி ஏற்றல்…
தடுப்பூசி தொடர்பில் உறுதிபடுத்தப்பட்ட தகவல்களை மாத்திரம் பரிமாறிக் கொள்ளுங்கள்…
சிக்கல்கள் இருப்பின், விசேட நிபுணர்களைத் தொடர்புகொள்ளுங்கள் - ஊடகங்களிடம் விசேட கோரிக்கை
கட்டுக்கதைகளுக்கு இரையாகாமல், தமது பிள்ளைகளுக்குத் தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காது செயற்படுமாறு, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், விசேட வைத்திய நிபுணர்கள் கோரிக்கை விடுத்தனர்.
விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரைகளுக்கமையவே, உலகிலும் எமது நாட்டிலும், தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அதனால், அது விடயத்தில் வீண் அச்சங்கொள்ளத் தேவையில்லை என்றும் சுட்டிக்காட்டிய அவர்கள், சரியான புரிதலுடனும் அக்கறையுடனும், வெற்றிகரமான பயனை அடைந்துகொள்ளுமாறும் தெரிவித்தனர்.
ஜனாதிபதி ஊடக மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகச் சந்திப்பு, இன்று (23) முற்பகல், வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது. இதன்போது, சிறுவர் நோயியல் விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட குழுவொன்று இதில் கலந்துகொண்டு, “சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றல்” தொடர்பில் கருத்துரைத்தது.
கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில், நாளை (24) முதல், நாள்பட்ட நோய்களையுடைய சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கவுள்ளன என்று தெரிவித்த சிறுவர் நோயியல் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் அநுருத்த பாதெனிய, அறிவாற்றல் குறைந்த, நீரிழிவு, நரம்பியல் நோய்கள், சிறுநீரகப் பாதிப்பு, இதய நோய், தலசீமியா, சிறுநீர் மற்றும் உணவுக்குழாய்ப் பாதிப்புகள் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களை, இந்தத் தடுப்பூசி ஏற்றலுக்காக அழைத்து வருமாறு, பெற்றோருக்கு அழைப்பு விடுத்தார்.
குறித்த சிறுவர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்படும் சிகிச்சையகங்களுக்கு (க்ளினிக்) வருகை தருவதால், அங்குள்ள விசேட வைத்திய நிபுணரின் பரிந்துரைக்கமைய, பெற்றோரின் அனுமதியுடன், அந்தச் சிறுவர்களுக்கான தடுப்பூசிகளை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும், டொக்டர் பாதெனிய குறிப்பிட்டார்.
எதிர்வரும் நாட்களில், நாட்டின் அனைத்து மாகாண, மாவட்ட மற்றும் ஆதார வைத்தியசாலைகளிலும், சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றலுக்குரிய திட்டமிடல்கள், விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரைகளுக்கமைய மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று, சிறுவர் நோயியல் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் குழாம் தெரிவித்தது.
சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றலானது, மூன்று படிமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி, 12 – 19 வயதுக்கிடைப்பட்ட நாள்பட்ட நோய்களுடைய சிறுவர்களுக்கு முதற்கட்டத் தடுப்பூசி ஏற்றல் இடம்பெறும்.
15 – 19 வயதுக்கிடைப்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கு, அடுத்தகட்டமாகத் தடுப்பூசி ஏற்றப்படும். இந்நடவடிக்கை, வெகு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. அத்துடன், 12 – 15 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டம், மூன்றாவது படிமுறையாக, விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றவுடன் ஆரம்பிக்கப்படவுள்ளது என, வைத்திய நிபுணர்கள் தெரிவித்தனர்.
தடுப்பூசி ஏற்றப்படும் சிறுவர்கள் தொடர்பில், விசேட வைத்திய குழுவொன்றினால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சிறுவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் அவதானிக்கப்படும். வீடுகளுக்குச் சென்ற பின்னர் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமாயின், அதற்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்படும் என்று, விசேட வைத்திய நிபுணர் அநுருத்த பாதெனிய தெரிவித்தார்.
தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தை, வைத்தியசாலைகளுக்குள் மாத்திரம் முன்னெடுக்கவும் ஃபைசர் தடுப்பூசியை மாத்திரம் சிறுவர்களுக்கு ஏற்றவும், விசேட வைத்திய நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
தடுப்பூசி ஏற்றல் தொடர்பில், விசேட நிபுணர்கள் அல்லாத நபர்களால் ஊடகங்களில் முன்வைக்கப்படும் கருத்துகள் தொடர்பில் வருத்தம் தெரிவித்த தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் நிறுவனத்தின் தலைவரும் விசேட வைத்திய நிபுணருமான பிரசன்ன குணசேன, சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் தொடர்பான செய்திகளை வெளியிடும் போது, சிறுவர் நோயியல் விசேட வைத்திய நிபுணர்கள், அதனோடு தொடர்புடைய நிறுவனங்கள், விசேட சேவைகளை வழங்கும் விசேட நிபுணர்களிடம் கேட்டு, அந்தத் தகவல்களை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர் மாத்திரம், அந்தத் தகவல்களை ஊடகங்களில் வெளியிடுமாறு, ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டார்.
வைரஸை விட வேகமாக, கட்டுக்கதைகள் பரவுகின்றன என்றும் சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறான கட்டுக்கதைகள், பாரிய விளைவுகளை ஏற்படுத்துமென்றும் சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் என்பது, எமது சமூகத்தில் மிகவும் உணர்ச்சிமயப்பட்ட விடயமென்றும், அதனால், வைத்தியர்களைப் போன்றே ஊடகங்களும், மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டுமென்று சுட்டிக்காட்டினார்.
இணையவழிக் கல்வியின் ஊடாக, சிறுவர்களின் வெளித்திறன் அபிவிருத்திக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது எனச் சுட்டிக்காட்டிய சிறுவர் நோயியல் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் பூஜித்த விக்கிரமசிங்க, பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டாலும், அறிவாற்றல் குறைந்த பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புவது குறித்து பெற்றோர் அச்சம் கொண்டுள்ளதாகவும் இதனால், கல்வியைப் பெறுவதற்கு உள்ள சம உரிமை, அச்சிறுவர்களுக்குக் கிடைக்காமல் போகுமென்றும், அவ்வாறான நிலைமையை, தடுப்பூசி ஏற்றலின் ஊடாகத் தவிர்த்துக்கொள்ள முடியுமென்றும் கூறினார்.
சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றலில், உலகின் ஏனைய நாடுகள் எடுத்துக்காட்டாக விளங்குகின்றனவா என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விசேட வைத்திய நிபுணர்கள், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜேர்மன், சுவிட்சர்லாந்து, நோர்வே, இங்கிலாந்து போன்ற நாடுகளில், இந்த வயதுப் பிரிவையுடைய சிறுவர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றன எனக் குறிப்பிட்டனர்.
தெற்காசியாவில், அபிவிருத்தியடைந்த சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் இலங்கை, தடுப்பூசி ஏற்றலில் விசேட அனுபவத்தைக் கொண்டிருப்பதாகவும் அதனால் அச்சமின்றியும் சந்தேகமின்றியும், தடுப்பூசி ஏற்றிக்கொள்ள முன்வருமாறு, வடமேல் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் சம்பத் இந்திக குமார, பெற்றோர்களிடம் தெரிவித்தார்.
Comments (0)
Facebook Comments (0)