பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையின் 8 மாடி கட்டிடத் தொகுதி விரைவில் மருத்துவ சேவையில் சேர்க்கப்படும்
பத்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்னும் நிறைவுபெறாத பொரளை ஆயுர்வேத தேசிய மருத்துவமனையின் புதிய கட்டிடத் தொகுதிக்கு புதிய நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு இறுதிக்குள் இதன் கட்டுமானப் பணிகளை முடித்து, கட்டிடத் தொகுதியை தற்போதுள்ள சேவைகளில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் ஏற்கனவே 450 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியிருந்தது.
மேலும் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபாவினை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தப் புதிய கட்டிடத் தொகுதியின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்வதற்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கண்காணிப்பு விஐயத்தை மேற்கொண்டார்.
இந்தப் புதிய எட்டு மாடிக் கட்டிட வளாகத்தில் 340 நோயாளர்களுக்கான படுக்கை வசதிகள், அறுவை சிகிச்சை அறைகள், மருந்து உற்பத்தி வசதிகள், பஞ்சகர்மா அலகுகள் மற்றும் யோகா பயிற்சி அலகுகள் உட்பட கட்டண சிகிச்சைக்கான உயர்தர வசதிகளுடன் கூடிய அறைகளின் எண்ணிக்கை 82 ஆகும்.
இந்தப் புதிய கட்டிட வளாகம், யாழ்ப்பாணம், கிழக்கு, கொழும்பு மற்றும் யக்கல பல்கலைக்கழகங்களில் இருந்து ஆயுர்வேதம், சித்த மற்றும் யுனானி மருத்துவம் பயிலும் 600 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சிக்கான வசதிகளையும் வழங்கும் வசதிகளை கொண்டுள்ளது.
1929ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பொரளை ஆயுர்வேத தேசிய மருத்துவமனையில் தற்போது 216 படுக்கை வசதிகள் உள்ளன. இது 11 வார்டுகளைக் கொண்டுள்ளது மற்றும் கட்டண அறைகளையும் கொண்டுள்ளது.
இந்த மருத்துவமனை ஆண்டுதோறும் 150,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு வெளிநோயாளி சேவைகளையும், ஆண்டுதோறும் 3,500க்கும் மேற்பட்ட மக்களுக்கு உள்நோயாளி சேவைகளையும் வழங்கும்.
இதுவே நாட்டிலுள்ள ஒரே ஆயுர்வேத தேசிய மருத்துவமனையாகும். புதிய கட்டிட வளாகத்திலிருந்து சேவைகள் ஒருங்கிணைக்கப்படுவதால், கூடுதல் சேவைகளைப் பெற வருபவர்களின் எண்ணிக்கை சுமார் 20% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் வரும் ஆண்டில் 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள இந்த நேரத்தில், இந்த சுற்றுலாப் பயணிகள் கடற்கரையிலோ அல்லது ஹோட்டலிலோ ஓய்வெடுப்பற்கு வாய்ப்புகளை வழங்குவதற்கு மாறாக இந்த மருத்துவமனைகளின் மேம்படுத்தபட்ட சேவையூடாக அந்நியச் செலாவணியை ஈட்டும் இடமாக மாற்ற முடியும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
ஆயுர்வேத ஆணையர் நாயகம் டாக்டர் தம்மிக அபேகுணவர்தன, மருத்துவமனை பணிப்பாளர் டாக்டர் பராக்ரகம ஹேமச்சந்திர, பிரதிப் பணிப்பாளர் டாக்டர் வசந்த பத்மகுமார, நிர்வாக அதிகாரி மயோமி பெரேரா, ஆயுர்வேத நிபுணர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Comments (0)
Facebook Comments (0)