190 ரூபா பெறுமதியான RTI தகவலை வழங்க 340 ரூபாவினை செலவளித்த கிழக்கு ஆளுநர் செயலகம்
றிப்தி அலி
கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தினால் தொடர்ச்சியாக வீண் செலவுகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில் தகவலொன்றினை வழங்குவதற்கு 190 ரூபாவினை வசூலித்து விட்டு 340 ரூபாவினை கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் செலளித்துள்ளது.
தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தரவிற்கமைய தகலறியும் கோரிக்கைக்கு இறுவெட்டின் ஊடாக பதில் வழங்குவதற்காக 190 ரூபாவினை கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் கோரியிருந்தது.
எனினும், இந்த இறுவெட்டினை தபாலில் அனுப்புவதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் 340 ரூபாவினை செலவளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் காலப் பகுதியில் Panel of Experts on Social Injustice எனும் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இக்குழுவினால் கிழக்கு மாகாண ஆளுநருக்கு சமர்ப்பிக்கப்பட்ட இறுதி அறிக்கையின் இலத்திரனியல் பிரதியினை (Soft Copy) மின்னஞ்சல் ஊடாக வழங்குமாறு கோரி கடந்த 13.10.2022ஆம் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு தகவல் விண்ணப்பமொன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கு தகவல் அதிகாரியினால் உரிய காலப் பகுதிக்குள் பதில் வழங்காமையினால், ஆளுநர் செயலகத்தின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரியான ஆளுநரின் செயலாளரிடம் கடந்த 18.11.2022ஆம் திகதி மேன்முறையீடு மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு 25.11.2022ஆம் திகதி பதிலளித்த கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் தகவல் அதிகாரியான க. சுதாகரன், குறித்த அறிக்கையின் மென் பிரதியினை ஆளுநர் செயலகத்திற்கு நேரில் சமூகமளித்து அதற்கான பணத்தினைச் செலுத்தி இறுவெட்டினை பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்திருந்தார்.
எனினும், குறித்த அறிவிப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்ட காலப் பகுதிக்குள் இடம்பெறவில்லை. இதற்கு எதிராக 13.12.2022ஆம் திகதி தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் மேன்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேன் முறையீடு தொடர்பான விசாரணை கடந்த 23.03.2023ஆம் திகதி தகவலறியும் ஆணைக்குழுவில் இடம்பெற்றது. தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட தகவல் கோரிக்கை விதிகளின் பிரகாரம் (விதி இலக்கம் 04 (iv)) குறித்த தகவலை 28.04.2023ஆம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு இதன்போது உத்தரவிட்டது.
இதனையடுத்து, குறித்த நிபுணர் குழுவின் அறிக்கைகள் அடங்கிய இறுவெட்டினை பெறுவதற்கு 190 ரூபாவினை செலுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் தகவல் அதிகாரியும் நிர்வாக உத்தியோகத்தருமான க.சுதாகரன் 28.04.2023ஆம் திகதி அறிவித்திருந்தார்.
குறித்த அறிவிப்பு மே 9ஆம் திகதி பதிவுத் தபாலிலும், மே 10ஆம் திகதி மின்னஞ்சல் ஊடாகவும், அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பதிவுத் தபாலிற்காக கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தினால் 110 ரூபா செலவளிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் செயலகத்தினால் குறிப்பிடப்பட்ட குறித்த தொகைப் பணத்தினை இலங்கை வங்கியின் திருகோணமலை பிரதான கிளையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கணக்கில் வைப்புச் செய்யப்பட்ட பின்னர், குறித்த இறுவெட்டு தபாலில் அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த தபாலுக்காக ஆளுநர் செயலகத்தினால் 230 ரூபா நிதி செலவு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய 190 ரூபா பெறுமதியான இறுவெட்டினை வழங்குவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் 340 ரூபா செலவளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மின்னஞ்சல் ஊடாக இலவசமாக வழங்கப்பட வேண்டிய இந்த அறிக்கைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செயலத்தினால் சுமார் 340 ரூபா மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்லாமல், இந்த தகவலை வழங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு மேலான கால இழுத்தடிப்பும் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த நிபுணர் குழுவிற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நிதி தொடர்பான விடயத்தினை ஆளுநர் செயலகம் இதுவரை வெளியிடவில்லை.
யசபால நாணயக்கார தலைமையிலான இந்த நிபுணர் குழுவின் உறுப்பினர்களாக கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் விரிவுரையாளர் பேராசிரியர் லலிதசிரி குணருவான், ஹீலன் மீஹஸ்முல்லா, சட்டத்தரணி பீ.டி.ஏ. ஹசன் மற்றும் பொறியிலாளர் எஸ். மோகன்ராஜ் ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக செயற்பட்டுள்ளனர்.
இந்த குழுவிற்கு காணி நிர்வாக விடயங்கள், உள்ளக முரண்பாடுகளுடனான காணிப் பிரச்சினை, தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம், சமயங்களுக்கு இடையிலான முரண்பாடுகள், புதிய காணி கோரிக்கை, சுனாமி நஷ்டஈடு, வேலைவாய்ப்பு மற்றும் பதவியுயர்வு கோரிக்கை, எல்லை மீள்நிர்ணயம், சங்கங்களின் கோரிக்கை என 1,387 முறைப்பாடுகள் இந்த நிபுணர் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதில் 42 முறைப்பாடுகளுக்கான கோப்புகள் கண்டுபிடிக்கவில்லை. அத்துடன் 1,220 முறைப்பாடுகள் தொடர்பான கோப்புகள் பார்வையிடப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், 125 முறைப்பாடுகள் தொடர்பான கோப்புகள் பார்வையிடப்படவில்லை.
கோப்புகள் பார்வையிடப்பட்டவற்றில் 363 முறைப்பாடுகளுக்காக இந்த நிபுணர் குழு பிரதேச செயலக மட்டத்திலான விஜயங்களை மேற்கொண்டிருந்தது. இதில் 60 சதவீதமான முறைப்பாடுகளுக்கு எந்தவித தீர்வினையும் இந்த நிபுணர் குழுவினால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.
எவ்வாறாயினும், கிழக்கு மாகாண புதிய ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டதை அடுத்து, இந்த நிபுணர் குழுவின் அறிக்கை தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது என ஆளுநர் செயலகத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
Comments (0)
Facebook Comments (0)