சுதந்திரம் பெற்றதில் இருந்து இலங்கை - இந்திய உறவுகள்

சுதந்திரம் பெற்றதில் இருந்து இலங்கை - இந்திய உறவுகள்

P. K. பாலச்சந்திரன்

இப்போது இந்திய - இலங்கை உறவுகள் சந்தேகத்திற்கு இடமின்றி சிறந்த நிலையில் உள்ளன, நிதியியல் ரீதியாக நலிவடைந்த தெற்கு அண்டை நாட்டிற்கு இந்தியாவின் சரியான நேரத்திலான மற்றும் தாராளமான உதவிக்கு நன்றி.

ஆனால் கடந்த 75 வருடங்கள் அல்லது அதற்கும் மேலாக இருதரப்பு உறவுகள் பெரும் பிரச்சினையில் இருந்தன. எனவே, இப்போதைய  மில்லியன் டொலர் கேள்வி என்னவென்றால்: நடந்துகொண்டிருக்கும் நிதியியல் நெருக்கடியின் போதான இந்தியாவின் உதவியானது உறவை நிலைப்படுத்தி, மாற்றத்திற்கான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லுமா?

"இந்திய மேலாதிக்கம்" தொடர்பில் இலங்கையில் எப்பொழுதும் ஓர் அடிப்படையான அச்சம் இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒரு விடயமாகும். இதற்குக் காரணம் இந்தியாவின் மிகப்பெரிய அளவு, அதன் புவிசார் அரசியல் அபிலாஷைகள் மற்றும் இலங்கையின் உள்விவகாரங்களில் அதன் தொடர்ச்சியான ஈடுபாடு என்பனவாகும்.

இலங்கையில் உள்ள இரண்டு சமூகங்களான, இந்திய வம்சாவளித் தமிழர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டுடன் இன ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இணைந்துள்ளனர்.

சோழர் காலத்தில் இந்தியாவில் தமிழ் நாட்டில் இருந்து பல படையெடுப்புகள் நடைபெற்றிருப்பதால் இலங்கையில் உள்ள பெரும்பான்மை சமூகமான சிங்களவர்களுக்கு இந்தியா மீது அதீதமான அச்சம் உள்ளது.

1987ல் இலங்கைத் தமிழர்களின் சுயாட்சி விடயத்தை வலுப்படுத்துவதற்கான இந்திய அரசியல் - இராணுவத் தலையீடு மறைந்த அச்சத்தை வெளிக் கொண்டு வந்தது.

இந்திய மேலாதிக்கம் பற்றிய அச்சம் அவநம்பிக்கையை உருவாக்கியுள்ளதுடன், இது மறுபுறத்தில், இந்தியாவின் எதிரிகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவை இலங்கை பயன்படுத்த வகையேற்படுத்தியதுடன், புது டெல்லிக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியது.

இதனுடனிணைந்து 2010ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் புவிசார் அரசியல் போட்டியாளரான சீனாவின் விரிவடைந்து வரும் தடம், இந்தியாவின் கவலைகள் பல மடங்கு அதிகரித்திருப்பதைக் காணலாம்.

எவ்வாறாயினும், கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் போது, பிரதமர் மோடியின் “அண்டை நாடுகளுக்கு முதலில்” என்ற கொள்கையின் கீழ் முனைப்பாகவும் தாராளமாகவும் உதவி செய்ததன் மூலமாக இந்தியா இலங்கையில் தனது நிலையையும் கௌரவத்தையும் கணிசமாக உயர்த்தியது.

இலங்கையில் நெருக்கடியான காலங்களில் "முதலில் பதிலளித்தவர்" என்ற தனக்கென ஒதுக்கப்பட்ட வகிபாகத்தை அது நிறைவேற்றியது. இந்தியா முதலில் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியை வழங்கியதுடன் IMF இன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை (EFF) பெறுவதற்கு தேவையான நிதி உத்தரவாதங்களை வழங்குவதாக IMF க்கு கூறியது.

விருப்புடன் அவ்வாறு செய்ததன் மூலமாக, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் தனது EXIM வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசத்தை தருவதாக மட்டும் கூறிய சீனாவிற்கு ஒருபடி மேலாக இந்தியா செயலாற்றியது.

எவ்வாறாயினும், சீனாவின் நிதி உத்தரவாதம் போதுமானதாக இல்லை என்பதாலும், சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான மறுசீரமைப்பு மற்றும் நிதி சீர்திருத்த இலக்குகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டியிருப்பதாலும் சர்வதேச நாணய நிதியத்தின் EFF இன்னும் வெகு தொலைவிலேயே உள்ளது.

இதற்கிடையில், சீனாவை ஸ்தம்பிக்க செய்வதற்கு இந்தியா பல்வேறு வழிகளில் இலங்கைக்கு தொடர்ந்து உதவி வருகிறது. சக்தி மற்றும் மருந்துகள் தொடர்பான துறைகளில் இந்தியா மிகவும் தேவையான உட்கட்டமைப்பு செயற்திட்டங்களை வழங்கியுள்ளது.

இது இந்திய தனியார் துறை முதலீடுகளை வழங்குவதுடன் அதனுடன் செல்வதற்கான வணிக நட்புறவான சூழலை எதிர்பார்த்துள்ளது. வெளிநாட்டு மூலதனம் ஏகாதிபத்தியத்தின் ஒரு அங்கமாகப் பார்க்கப்படுவதால், இலங்கை வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு இடமளிக்கவில்லை.

பதட்டங்களின் வரலாறு

இந்தியாவும் இலங்கையும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தபோதும், தீவின் பொருளாதாரத்தின் பிரதானமான தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் இந்தியத் தொழிலாளர்கள் அதிக அளவில் இருப்பது தொடர்பாக பேரரசின் இரு பகுதிகளும் மோதலில் ஈடுபட்டன.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 900,000 முதல் ஒரு மில்லியன் வரையான மக்கள் பெருந்தோட்டத் துறையில் இருப்பதன் அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகள் குறித்து அன்றைய இலங்கைத் தலைவர்கள் அஞ்சினார்கள்.

தொழிலாளர்கள் தங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்த கோரிக்கைகளை பிரிட்டிஷ் தோட்டக்காரர்கள் மற்றும் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் மற்றும் இந்தியாவில் உள்ள தேசியவாதிகள் ஆகியோர் எதிர்த்தனர்.

இந்தியாவும் இலங்கையும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சுதந்திரத்தை கோரும் போதும், சுதந்திரத்திற்குப் பிறகும், டி.எஸ். சேனநாயக்கா போன்ற தலைவர்கள், ஆசியாவின் ஆதிக்க சக்தியாக ஆவதற்கு அல்லது இந்திய வம்சாவளி தமிழர்களைப் பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியா இலங்கைத் தீவின் மீது "படையெடுப்பு" செய்யும் என்று அஞ்சினார்கள்.

சேனநாயக்க 1948 இல் சுதந்திரத்திற்கு முன்னதாக 1947 இல் ஐக்கிய இராச்சியத்துடன் ஒரு பாதுகாப்பு உடன்படிக்கையை கோரிப் பெற்றார். சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கை அரசாங்கம் உடனடியாக உரிமையைப் பறித்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் இந்தியர்களை நாடற்றவர்களாக ஆக்கியது. இது இந்தியாவுடனான பதற்றத்தை அதிகரித்தது, ஆனால் "இந்தியப் படையெடுப்பு" ஒருபோதும் நடைபெறவில்லை.

1964ஆம் ஆண்டு வரை குடியுரிமைப் பிரச்சினை நீடித்ததுடன், சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதுடன் இப்பிரச்சினை பகுதியளவில் தீர்க்கப்பட்டது. 525,000 இந்திய வம்சாவளித் தமிழர்கள் (IOT) இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதுடன் 300,000 பேர் இலங்கையால் உள்வாங்கப்பட்டனர்.

எவ்வாறாயினும், 2003ஆம் ஆண்டளவில், உள்நாட்டு அரசியல் தேவைகள் காரணமாக, இந்திய வம்சாவளி தமிழர்கள் அனைவருக்கும் இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டதுடன், இது இந்திய - இலங்கை உறவுகளில் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.

1971 இல் மக்கள் விடுதலை முன்னணி (JVP) கிளர்ச்சியை ஆரம்பித்தபோது, சிறிமா பண்டாரநாயக்க அரசாங்கத்திற்கு உதவுவதற்காக இந்தியா ஹெலிகொப்டர்களை அனுப்பியது. ஆனால் கிழக்கு பாகிஸ்தானில் சுதந்திரப் போராட்டம் தொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் போரில் ஈடுபட்டபோது, கொழும்பில் பாகிஸ்தானிய இராணுவ விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப அனுமதித்து சிறிமா இந்தியாவை எரிச்சலூட்டினார்.

1970களின் நடுப்பகுதியில், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நடுவில் அமைந்துள்ள கச்சத்தீவு மீதான இறையாண்மை பற்றிய சர்ச்சை எழுந்தது. மிகவும் கடினமான பேச்சுவார்த்தைகளின் பின்னராக இந்தியா கச்சதீவை இலங்கைக்கு வழங்கியது.

ஆனால் 1983 காலப் பகுதியளவில், வடக்கு - கிழக்கு தமிழர்களின் சுயாட்சி அல்லது சுதந்திரத்திற்கான போராட்டத்தின் காரணமாக, இந்திய-இலங்கை உறவுகள் மீண்டும் மோசமடைந்தன. 1983 தமிழர் விரோதக் கலவரம், தமிழ்நாட்டிற்குள் தமிழ் அகதிகளின் வருகை மற்றும் தமிழ் ஆயுதப் போராட்டத்தின் எழுச்சி, தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கொழும்பிற்கு அழுத்தம் கொடுப்பதற்காக போராட்டத்தை வெளிப்படையாகவும் இரகசியமாகவும் ஆதரிக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு ஏற்பட்டது.

ஆனால் இந்தியாவும் தமிழ் தேசியவாதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் அமைதியான தீர்வைக் காண மத்தியஸ்தம் செய்தது.

ஆனால் 1987 இன் இந்திய - இலங்கை ஒப்பந்தம், இந்திய அமைதி காக்கும் படையை (IPKF) அனுப்பியதுடன் 1987 இல் மாகாணங்களுக்கு சில அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் வகையிலான இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தம் (13A) இலங்கையில் மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்தது. இன்றுவரை, 13A போதிய அளவு அமுல்படுத்தப்படவில்லை என்பதுடன் இந்திய-இலங்கை உறவுகளில் எரிச்சலூட்டும் வகையில் உள்ளது.

ஜனாதிபதி ஆர். பிரேமதாசா IPKFக்கு அணிவகுக்கின்ற உத்தரவுகளை வழங்கியதுடன் 1990 இல் இலங்கையை விட்டு வெளியேறியதுடன் இந்திய-இலங்கை உறவுகள் ஸ்தம்பித்தன. எவ்வாறாயினும், 1991 இல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதன் விளைவாக இந்திய -இலங்கைக்கு இடையில் ஒரு வகையான புரிதல் ஏற்பட்டது.

2005-2006 இல் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளை முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்தபோது, இந்தியா தனது பலத்தை ராஜபக்ஷவுக்குப் பின்னால் இருந்து வழங்கி விடுதலைப் புலிகளை நசுக்க உதவியது.

ஆனால் போருக்குப் பிறகு ராஜபக்ச 13A இனை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்தியாவின் உதவி வழங்கப்பட்டது. ராஜபக்ச "13A +" என்று பெரும் வாக்குறுதி அளித்தார். ஆனால் பின்னர் நிராகரித்தார்.

எனவே, இலங்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் போர்க்குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டபோது, இலங்கைக்கு எரிச்சலூட்டும் வகையில் இந்தியா நடுநிலை வகித்தது. இலங்கையில் உள்ள அபிப்பிராயங்கள் கொழும்பை ஆதரித்த பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு சாதகமாக ஆரம்பித்தன.

2010ல் ராஜபக்ஷ இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது, இலங்கைக்கு மிக அவசியமாகத் தேவைப்படும் உட்கட்டமைப்புகளை உருவாக்க உதவுமாறு சீனாவை அழைத்தார். சீனா அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையத்தை நிர்மாணித்ததுடன், கொழும்பு துறைமுக நகரத்திற்கான நிலத்தை அமைத்ததுடன் கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் முனையத்தை அமைத்தது.

எவ்வாறாயினும், கொழும்பில் உள்ள கொள்கலன் முனையத்தைத் தவிர, விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் துறைமுக நகரம் ஆகியவை வெள்ளை யானைகளாக நிரூபணமானதால் கடன் நெருக்கடிக்கு பங்களித்தன. அந்நிய செலாவணியின் கடுமையான பற்றாக்குறை இலங்கையர்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு தங்கியிருந்த இறக்குமதியில் பாரிய குறைப்புக்கு வழிவகுத்தது.

இலங்கைக்கு மேலும் கடனையும், கொள்வனவாளர்களின் கடனையும் மட்டுமே வழங்கி, இலங்கையின் வீழ்ச்சியை சீனா பார்த்துக் கொண்டது. பெய்ஜிங் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் கோரியது. ஆனால் இந்தியா 4.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள கடன்கள் மற்றும் உதவிகளுடன் அடியெடுத்து வைத்தது.

இது எரிபொருள், உணவு மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை விரைவாக அனுப்பியது. 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் EFF இனைப் பெறுவதற்கு கொழும்பை தகுதியுடையதாக்க IMF க்கு தேவையான நிதி உத்தரவாதங்களையும் இந்தியா இலங்கைக்கு வழங்கியது.

தொடரும் தடைகள்

இந்திய முதலீடுகள் தொடர்பாக இலங்கையர்களுக்கு சில தொடர்ச்சியான குறைபாடுகள் உள்ளன. சீனர்களுடன் ஒப்பிடுகையில், இந்தியர்கள் செயற்திட்டங்களை மெதுவாக நிறைவேற்றுவதாக அவர்கள் முறைப்பாடு கூறுகின்றனர். சீனாவின் முதலீடுகள் இந்தியாவுக்கு அருகில் உள்ள வடக்கு மாகாணத்திற்கு வெளியே இருக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிபந்தனைக்கு இலங்கையர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள தீவுகளில் ABD-யின் நிதியுதவியுடனான மூன்று சீன எரிசக்தித் திட்டங்கள் இந்திய அழுத்தத்தின் காரணமாக பாதுகாப்பைக் காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டன.

இந்தியாவும் தன் பங்கிற்கு, இலங்கை துறைமுகங்களுக்கு சீன "உளவு" கப்பல்கள் வருகை தருவது குறித்து மிகவும் உணர்திறன் கொண்டுள்ளது. இந்தியாவை சுற்றி வளைக்க சீனா விரும்புவதாக இந்தியா சந்தேகிக்கின்றது. இந்து சமுத்திரத்திலும் அமெரிக்கா தலைமையிலான குவாட் படையிலும் இலங்கை தனது பாதுகாப்பு எல்லையின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது.

ஆனால் இலங்கை புவிசார் அரசியல் போட்டிகளிலிருந்து விலகி இருக்க விரும்புகிறது. கடன்கள் மற்றும் மானியங்களுக்குப் பதிலாக வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை இந்தியா விரும்பும் அதே வேளையில், இலங்கையர்கள் குறைந்த விலை இந்தியப் பொருட்களால் மிகைநிரம்பலும் இந்திய பணியாளர்களின் வருகையால் உட்புகுதலும் ஏற்படும் என்ற அச்சத்தில் இந்த ஒப்பந்தங்கள் குறித்து எச்சரிக்கையாக உள்ளனர்.

விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) மற்றும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) ஆகியவற்றில் கையெழுத்திடுவதற்கான இந்தியாவின் முயற்சிகள் முடங்கியதற்கு இதுவே காரணமாகும்.

1997 இல் இந்தியாவுடனான அநீதியானன FTA ஒப்பந்தம் தொடர்பாக இலங்கையர்கள் இன்னமும் முணுமுணுத்துக் கொண்டிருந்தபோதிலும் இந்தியாவுக்கான இலங்கை ஏற்றுமதி அதிகரித்துள்ளதுள்ளதால் FTA க்கு குறிப்பிடத்தக்க நன்றி கூறுகின்றது.

எவ்வாறாயினும், தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, விக்கிரமசிங்க அரசாங்கம் தற்போது இந்தியாவுடன் ETCA பற்றி பேசுகிறது. ஆனால் கடந்த கால அனுபவத்தைப் பொறுத்தவரை, இந்திய (மற்றும் பிற வெளிநாடுகள்) முதலீடுகள் இலங்கை தொழில்முனைவோர், தொழிற்சங்கங்கள் மற்றும் தேசியவாதிகளின் எதிர்ப்பிற்கு எதிராக செயற்படக்கூடும்.

கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனையத்தை நிர்மாணிப்பதற்கான இந்தியா மற்றும் ஜப்பானுடனான ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியமை ஒரு உதாரணமாகும். அண்மையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, விக்கிரமசிங்க அரசாங்கத்தால் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு “சட்டப்பூர்வத்தன்மை இல்லை” என்பதனால் தமது அரசாங்கம் அதற்குக் கீழ்ப்படியாது என்று கூறி அதற்கான பணிகளில் குழப்பத்தை ஏற்படுத்தினார்.

இலங்கைக்கு எதிரான இந்தியாவின் கவனம் பெருகிய முறையில் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் சார்பானதாக இருந்தாலும், 13A சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலமாக தமிழ் பேசும் வடக்கு மற்றும் கிழக்கிற்கு அதிகாரப் பகிர்வு போன்ற உள்நாட்டு அரசியல் பிரச்சினைகளில் அது ஆர்வத்தை இழக்கவில்லை.

இந்தியாவை மகிழ்விக்கும் வகையில் ஜனாதிபதி விக்கிரமசிங்க நீண்டகாலமாக நிலவி வரும் இந்தப் பிரச்சினை குறித்து தமிழ் கட்சிகளுடன் பேசி வருகிறார். ஆனால் அவர் ஏற்கனவே JVP மற்றும் பௌத்த மதகுருமார்களின் எதிர்ப்பை எதிர்கொண்டு தனது திட்டங்களை அபாயத்தில் ஆழ்த்தியுள்ளார்.

P.K. பாலச்சந்திரன் கொழும்பில் உள்ள ஒரு சுயாதீன ஊடகவியலாளரென்பதுடன் பல ஆண்டுகளாக பல்வேறு செய்தி இணையதளங்கள் மற்றும் நாளிதழ்களில் தெற்காசிய விவகாரங்கள் குறித்து எழுதுகிறார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் எக்னாமிஸ்ட் ஆகியவற்றிற்கு கொழும்பு மற்றும் சென்னையில் இருந்து அறிக்கை அளித்துள்ளார். இலங்கையில் டெய்லி மிரர் மற்றும் சிலோன் டுடே ஆகிய பத்திரிக்கைகளில் வாராந்த பத்தி ஒன்றை எழுதுகின்றார்.