பாராளுமன்றத்திற்கு முஸ்லிம் உறுப்பினர்களை உள்ளீர்ப்பது எவ்வாறு?
ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் வரைபடம் இலங்கையில் சிறுபான்மையினருக்கும், பெரும்பான்மையினருக்கும் இடையிலான வேறுபாட்டின் உச்சகட்டத்தை காட்டுவதாக அமைதுள்ளது.
அடுத்தகட்டமாக நியமிக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையில், அமைச்சுப் பதவிகள் முஸ்லிகளுக்கு வழங்காமை, முஸ்லிம்கள் ஆதரவளித்த ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ரணில் மற்றும் சஜித் ஆகியோருக்கிடையிலான தலைமைத்துவப் போராட்டம் என்பன முஸ்லிம்களுக்கு மத்தியில் ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தியமை மட்டுமல்லாது, குறிப்பாக முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸின் அடுத்தகட்ட அரசியல் நகர்வை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்பதைத் தீர்மானிக்க முடியாத ஓர் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் நாட்டிற்கு இனக்கட்சிகள் தேவையா? வட கிழக்கிற்கு வெளியே முஸ்லிம் கட்சிகள் பொதுத்தேர்தலில் போட்டியிட வேண்டுமா? முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைய வேண்டுமா? என்று பல கேள்விகள் முஸ்லிம் சமூகத்திற்குள் எழுந்த வண்ணமுள்ளன.
இந்நிலையில் தற்போது ஆட்சியமைத்துள்ள பொதுஜன பெரமுன முஸ்லிம்கள் விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டில் உள்ளது. முதலாவது, தமது அரசாங்கத்துடன் முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர்களை இணைத்துக் கொள்வதில்லை. இரண்டாவது முஸ்லிம் சமூகத்தை பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பயணிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அரசியல் நிலைப்பாட்டிற்கான காரணம், அரசியல் சட்டத் திருத்தமொன்றை அல்லது யாப்பு மாற்றமொன்றை ஏற்படுத்த பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை எடுப்பாதாகும். அதாவது, தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் எவருக்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லை.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெரும் நோக்குடன் அவர்கள் முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றால் அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற 52% வாக்குகளில் 40% பேரினவாத சிந்தனையூடாகப் பெறப்பட்ட வாக்குகள் குறைந்துவிடும். எனவே குறித்த வாக்குகளை தக்க வைத்துக்கொள்ள ஹக்கீம் மற்றும் ரிஷாத் விடயத்தில் எதிரான போக்கை கைக்கொள்ள வேண்டும்.
பொதுஜன பெரமுன தற்போது ஆட்சி அமைத்தாலும், பொதுத் தேர்தலின்பின் தொடர்ந்தும் பிரதமர் பதவியை தக்கவைத்துக் கொள்ளவும். தமக்குப் பொருத்தமான முறையில் சட்ட திருத்தம் அல்லது யாப்பு மாற்றத்தை செய்ய பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெறவேண்டும். அதற்காக தற்போதுள்ள 52% ஐ 60% ஆக அதிகரித்துக் கொள்ள முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையின வாக்குகளை பெறவேண்டும். எனவேதான், முஸ்லிம் சமூகத்தை தங்களுடன் இணைந்து பயணிக்குமாறு பொதுஜன பெரமுனாவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை அரசில் மாத்திரமல்ல, இந்திய அரசிலும் பேரினவாதிகள் எழுச்சி பெற்றுள்ளனர். இதன் அடையாளங்களாக இந்தியாவில் பாபர் மசூதி தீர்ப்பு, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் என சட்டரீதியாக சிறுபான்மைக்கு எதிரான போராட்டங்கள் அரங்கேறிய வண்ணமுள்ளன. இவ்வாறாக சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஒரு சட்டரீதியான போராட்டம் தற்போது இலங்கையில் ஏற்படுவதற்கான அறிகுறிகள் உருவாகியுள்ளன.
இதன் ஓர் அங்கமே பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரரால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள 2019.12.18 ஆம் திகதி வெளியான தனியார் சட்டமூல வர்த்தமானி அறிவித்தல்படி 1951 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க விவாக, விவாகரத்து சட்டத்தை ரத்தாக்கும் சட்டமூலம். குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் அங்கீகரித்து, அரசு சட்டமாக ஏற்றுக்கொண்டால் இலங்கை முஸ்லிம்களின் சிறப்புரிமையாக இருந்த முஸ்லிம் தனியார் சட்டம் இல்லாமலாகிவிடும். இது இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படவுள்ள ஓர் அநீதியாகும்.
இவ்வாறு தமிழ், சிங்கள சிறுபான்மைக்கு எதிராக சட்ட திருத்தம் அல்லது யாப்பு மாற்றங்கள் அல்லது சட்டத்தை ரத்து செய்தலூடாக அநீதிகள் இழைக்காமலிருப்பதற்கு ஏற்ற வகையில் தமது அரசியல் பயணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இலங்கையில் பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்ற மூன்றிலிரண்டு ஆதரவு பெற வேண்டும். இலங்கையில் சிறுபான்மைக்கு எதிராக அநீதியான சட்டங்கள் சமர்ப்பித்து அதற்கு இன ரீதியாக பெரும்பான்மையினர் ஆதரவளித்தால் சிறுபான்மையினரின் இருப்பு சின்னா பின்னமாகிவிடும். இது நாம் இலங்கையர் என்பதற்குப் பதிலாக இன ரீதியாக சிந்தித்து செயற்பட்டதன் ஓர் விளைவாகும்.
இந்நிலையில் நாம் தொடர்ந்தும் இன அரசியலில் தனித்துப் பயணித்தால் பேரினவாத அரசியல் முறுகல் நிலையடையும். இது இலங்கையன் என்ற அடிப்படையில் இன, மதங்களை தாண்டி நாட்டின் குடிமக்களை வீழ்ச்சியடையச் செய்யும்.
எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள பேரினவாத சிந்தனையை மழுங்கடிக்கச் செய்யும் விதமாக வட, கிழக்கிற்கு வெளியே முஸ்லிம்கள் பெரும்பான்மையுடன் இணைந்து செயற்படத்தான் வேண்டும். இதன் ஓர் அங்கமாக இலங்கை முஸ்லிம்கள், தற்போதைய சூழ்நிலையில் அடுத்த பொதுத்தேர்தலில் பெரும்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பொதுஜன பெரமுன கட்சியுடாக வட கிழக்கிற்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் குறைந்தபட்சம் ஒவ்வொரு வேட்பாளரையாவது களமிறக்க வேண்டும்.
ஆனால், நாம் பொதுத்தேர்தலுக்குபின் எதிர்பார்க்கின்ற அரசால் முன்வைக்கின்ற அனைத்து வேலைத்திட்டங்கள், சட்டங்களுக்கு “ஆமா. சாமி” என்று கை தூக்கிவிட்டு இன்னொரு தேர்தல் வரும் போது, “நம்மை அரசாங்கம் ஏமாற்றிவிட்டது. மன்னித்து விடுங்கள்” என்று சமூகத்திடம் மன்னிப்புக் கேட்கும் தலைவர்களையல்ல. மாறாக, ஒவ்வொரு திட்டங்களையும் தீர விசாரித்து பொருத்தமான தீர்வுகளை முன்வைக்கும் ஆளுமையுள்ள தலைவர்களையே நாம் தெரிவுசெய்ய வேண்டும்.
இதன் நோக்கம் இணைந்து செயற்படுவதன் ஊடாக பேரினவாத சிந்தனையை மழுங்கடிப்பதும் சமூகத்திற்கு புதிய அரசியல் தலைவர்களை உருவாக்குவதாகும். இதற்காக முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்துடன் ஒன்றிணைவது பொருத்தமில்லை. ஏனெனில், முஸ்லிம் கட்சிகள் தற்போதைய ஜனாதிபதிக்கு ஜனாதிபதித் தேர்தலின்போது ஆதரவளிக்காமை அக்கட்சி வாக்காளர்களின் மனங்களில் ஒரு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இணைவது பொருத்தமில்லை. மேலும் அது எதிர்க்கட்சியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 20% –- 30% இடைப்பட்ட பௌத்த வாக்காளர்களின் மனங்களில் தவறான எண்ணங்களை ஏற்படுத்தும். அதாவது, முஸ்லிம்கள் எதிர்க்கட்சி அரசியல் செய்யும் ஆளுமையற்றவர்கள், அமைச்சுப் பதவி மோகம் கொண்டவர்கள். போன்ற தவறான எண்ணங்களை ஏற்படுத்திவிடும்.
இலங்கையில் முஸ்லிம்களை பொறுத்தவரையில் இனவாதக் கட்சிகளுக்குள்ளும், ஆட்சி அமைக்கும் இரு கட்சிகளில் ஓர் கட்சிக்கு மாத்திரம் சார்ந்து நிற்கும் போக்குடன் செயற்படுகின்றனர். அவ்வாறில்லாமல் இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் பிரிந்து ஆதரவை வெளிப்படுத்தினால்தான் எக்கட்சி ஆட்சியமைத்தாலும் தலைநிமிர்ந்து நிற்கலாம்.
எனவே, சிறந்த சேவையாளர்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் இனவாதக் கட்சிகளூடாக தேர்தலில் களமிறக்காமல் பேரினவாதக் கட்சிகள் ஊடாக களமிறக்கி முஸ்லிம்களுக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதி செய்துகொள்வோம். இதற்காக முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் மாவட்டங்களில் இருவரை களமிறக்கி முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யவும் வேண்டாம்.
மதம் என்ற ரீதியில் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து, நாடென்ற அடிப்படையில் பெரும்பான்மையுடன் சோரம் போகாமல், கைகோர்த்து அபிவிருத்திக்கான அரசியலை முன்னெடுப்போம்.
-இப்னு அஸாத்-
Comments (0)
Facebook Comments (0)