பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன ஊடாக முஸ்லிம் பிரதிநித்துவம் சாத்தியமா?
றிப்தி அலி
எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் இந்த தேர்தலுக்கு தற்போது தயாராகி வருகின்றன.
இந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது.
இதனால் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் மத்தியிலேயே பாரிய போட்டி இந்த தேர்தலில் காணப்படும். கடந்த நவம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியினை அடுத்து நாட்டில் தற்போது ஸ்திரமற்ற அரசாங்கமொன்றே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்படுகின்றது.
பாராளுமன்ற தேர்தலினை அடுத்து இந்த அரசாங்கத்தினை பலம் பெருந்திய அரசாங்கமாக மாற்றுவதற்கான நடவடிக்கையினை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போதிருந்தே முன்னெடுத்துள்ளது. இதற்கமைய பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தினை பொதுத் தேர்தலில் வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது அவர்களின் ஆதரவாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுவே அவர்களது பாராளுமன்ற தேர்தல் பிரசார மேடைகளில் பிரதான பேசுபொருளாகவும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தினை பெறுவதற்கு சிறுபான்மையின மக்களின் ஆதரவு இன்றியமையாததொன்றாகும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழ்ந்த வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய மாவட்டங்களில் மாத்திரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாரிய தோல்வியினை எதிர்நோக்கினார்.
அது மாத்திரமன்றி, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவின்மையினால் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் உருவாக்கப்பட்ட அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமலுள்ளது.
இலங்கை வாழ் முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சியினை ஆதரித்து வருகின்ற நிலையில் இந்த பாராளுமன்ற தேர்தலில் எப்படியாவது முஸ்லிம்களின் அதிகமான வாக்குகளை கைப்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் தற்போது களமிறங்கியுள்ளனர்.
இதற்கான பொறுப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மிகவும் நெருக்கமானவரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியிடம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பிற்பாடு அரசாங்க வங்கியொன்றி தலைவர் பதவியொன்று வழங்கப்பட்ட போது அதனை அவர் நிராகரித்திருந்தார்.
இந்த நிலையில் அடுத்த பாராளுமன்ற தேர்தலின் பிற்பாடு இவர் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் முஸ்லிம் வாக்குகளை கவரும் நோக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, முஸ்லிம் பிரதேசங்களை நோக்கி தற்போது படையெடுத்துள்ளார்.
குறிப்பாக கடந்த வார இறுதியில் குருநாகல் மாவட்டத்திற்கு சென்ற இவர், அங்குள்ள முஸ்லிம் பட்டதாரிகளை சந்தித்து கலந்துரையாடினார். அதேபோன்று இந்த வார இறுதியில் கிழக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயமொன்றினை மேற்கொள்கின்றார்.
இந்த நிலையில் முஸ்லிம்கள் வாழும் அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களை களமிறக்க அக்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். இதற்கமைய கொழும்பு, கண்டி, குருநாகல், புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி, களுத்துறை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் வேட்பாளர்களை களமிறக்க நவடடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, குருநாகல் மாவட்டத்தில் ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், கொழும்பு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் பிரபல தொழிலதிபர் முஹம்மத் ஹாஜி, களுத்துறை மாவட்டத்தில் மர்ஜான் பழீல், கம்பஹா மாவட்டத்தில் அம்ஹர் மௌலவி, புத்தளம் மாவட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.றியாஸ், கண்டி மாவட்டத்தில் தொழிலதிபர்களான பாரிஸ் ஹாஜி, புர்ஹான் ஹாஜி மற்றும் அக்குறனை பிரதேச சபை தவிசாளர் இஷ்திஹாம், அம்பாறையில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமயில் மூவர், திருகோணமலை மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீதுடன் இணைந்து இன்னும் சிலர், வன்னி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மற்றம் எஹியா பாய் என பலர் நாடளாவிய ரீதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் களமிறங்க தயாராகி வருகின்றனர்.
எனினும், இவர்களது வெற்றி வாய்ப்பு என்பது கேள்விக்குரியான நிலையிலுள்ளது. இதற்கு பிரதான காரணம், சிங்கள பௌத்த வாக்குகளை அடிப்படையாகக் கொண்ட கட்சியே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவாகும். இதனால் இந்த கட்சியின் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலில் முன்னணியில் உள்ளவர்களும் சிங்களவர்களே.
அதேபோன்று கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் தற்கொலை தாக்குதலில் பின்னரான நிலையில் சிங்களவர்கள் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்களா என்ற கேள்வியொன்றும் தற்போது எழுந்துள்ளது. இவ்வாறான நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் களமிறங்கும் முஸ்லிம் வேட்பாளர்களின் வெற்றியினை உறுதிப்படுத்தும் பாரிய பொறுப்பு முஸ்லிம் சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் கட்சிகளிலும் சரி, பெரும்பான்மை கட்சிகளிலும் சரி போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் மத்தியில் ஒற்றுமை என்ற ஒரு விடயத்தினை ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது. தேர்தல் நெருங்கும் போது முஸ்லிம் வேட்பாளர்கள் மத்தியில் விருப்பு வாக்கு போட்டி ஏற்படுவது வழமையாகும்.
இவ்வாறானா நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஒரு மாவட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறங்கப்படும் பட்சத்தில் அவர்களின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குரியாவே உள்ளது.
குறிப்பாக கண்டி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சர்ர்பில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்ய வாய்ப்புள்ளது. இதில் ஹெகலிய ரம்புக்வெல்ல, லொஹான் ரத்வத்த, திலும் அமுனுகம, சரத் ஏக்கநாயக்க, மஹிந்தானந்த அலுத்கமகே, எஸ்.பி.திசாநாயக்க, ஆனந்த அளுத்கமகே மற்றும் அனுராத ஜயரத்ன ஆகிய எட்டு முன்னணி வேட்பாளர் உள்ள நிலையில் முஸ்லிம் வேட்பாளரொருரின் வெற்றியினை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்?
இந்த ஆட்சியில் கண்டி மாவட்டத்திற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி வழங்காமையினால் மேற்குறிப்பிட்டவர்கள் விருப்பு வாக்கு பட்டியலில் முதல் இடத்தினை பெற்று மாவட்டத்திற்கான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியினை பெற முயற்சிக்கின்றனர்.
இதனால் இவர்கள் மத்தியிலும் விருப்பு வாக்கு போட்டி கடுமையாக நிலவும். இதற்காக இவர்கள் தற்போதிருந்தே முஸ்லிம் வாக்குகளை கவருவதற்காக நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கண்டி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சர்ர்பில் இரண்டு அல்லது மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறங்கப்பட்டால் எவ்வாறு வெற்றி பெற முடியும். இது போன்ற நிலையே ஏனைய மாவட்டங்களிலும் காணப்படுகின்றன.
குறிப்பாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக அம்பாறை, திருகோணமலை மட்டக்களப்பு மற்றும் வன்னி ஆகிய மாவட்டங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கப்படும் முஸ்லிம் வாக்குகளின் ஊடாக மாற்று இனத்தவர்கள் பாராளுமன்றம் செல்வர் என்ற கதையாடலொன்று பரவலாக காணப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சிக்கான முஸ்லிம் வாக்குகளை அதிகரிக்கும் நோக்கில் மாவட்டமொன்றில் ஒன்று மேலதிகமான வேட்பாளர்களை அக்கட்சி நிறுத்த முடியும். இதன் ஊடாக முஸ்லிம் பிரதிநிதித்துவத்தினை பெற முடியுமா என்ற பாரிய கேள்வி இன்று எழுந்துள்ளது.
இந்த கேள்வியின் ஊடாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு கிடைக்கவிருந்த வாக்குகள் வேறு கட்சிகளை நோக்கி நகரவும் வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலுள்ள முஸ்லிம் முக்கியஸ்தர்கள் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இதன் ஊடாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு முஸ்லிம் வேட்பாளரை களமிறக்க நடவடிக்கை எடுப்பதுடன் குறித்த மாவட்டத்திலுள்ள முஸ்லிம் முக்கியஸ்தர்கள் குறித்த வேட்பாளரின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். அவ்வாறில்லாத பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு என்பது பகல் கனவாகவே காணப்படும்.
Comments (0)
Facebook Comments (0)