புனர்வாழ்வளிப்பதுடன் அப்பாவிகள் உடன் விடுவிக்கப்படவும் வேண்டும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் கடும் போக்குத் தன்மையை தளர்த்துவதற்கான நடவடிக்கைகளும் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதற்காக சுயாதீனமான முஸ்லிம் புத்திஜீவிகளின் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது என்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டிஆரச்சி தெரிவித்திருக்கிறார்.
தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை புனர்வாழ்வுக்கு தெரிவுசெய்யும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கான சட்ட ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கென தெரிவு செய்யப்பட்டவர்களை பயங்கரவாத விசாரணைப்பிரிவும் குற்றவியல் விசாரணைப் பிரிவும் இணைந்து, சட்ட ஏற்பாடுகள் ஊடாக புனர்வாழ்வுத் திட்டத்துக்கு இடமாற்றம் செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"உள்ளூரைச் சேர்ந்த எந்த கட்சியையும் அரசியலையும் சேராத சுயாதீனமான முஸ்லிம் புத்திஜீவிகள் மூலம் புனர்வாழ்வளிக்கப்படும். புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் பின்பு சமூகத்துக்குள் விடுவிக்கப்படுவார்கள். இது முற்று முழுவதும் புதிய புனர்வாழ்வளிக்கும் திட்டமாகும்.
இது தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டது போன்ற திட்டமல்ல. தனிநாடு கோரிக்கையை முன்வைத்து தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் போரிட்டார்கள். போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்பு அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டார்கள்.
இந்த திட்டத்திலிருந்தும் முஸ்லிம் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்களை புனர்வாழ்வளிக்கும் திட்டம் வேறுபட்டதாகும்" என்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டிஆரச்சி தெரிவித்திருக்கிறார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற வகையில் இதுவரை 700 க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். இவர்களில் மாவனல்லை சிலை உடைப்பு மற்றும் வனாத்தவில்லு வெடி பொருட்கள் மீட்பு ஆகிய இரு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் மீது மாத்திரமே இதுவரை வழக்குத் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் மீது வழக்குத் தொடர மேலும் பல மாதங்கள் எடுக்கும் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையிலேயே குறிப்பிட்ட ஒரு தொகையினரை புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதில் சட்ட ரீதியான சில சிக்கல்கள் உள்ள போதிலும் காலம் காலமாக சிறையில் இருப்பதை விட புனர்வாழ்வு பெற்றேனும் தமது உறவுகள் வீடு வந்து சேர்ந்துவிட வேண்டும் என்பதே தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது குடும்பத்தவர்களது எதிர்பார்ப்பாகவுள்ளது.
இதற்கப்பால் இதுவரை முஸ்லிம் சமூகத்தின் பல முக்கியஸ்தர்களும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது விசாரணைகளை துரிதப்படுத்தி விடுதலை செய்வதற்கான எந்தவித நகர்வுகளையும் காண முடியவில்லை.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் மீண்டும் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரும் முன்னர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவரே.
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலியும் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஏலவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் 2020 ஏப்ரல் முதலும், கவிஞரும் ஜாமிஆ நளீமியா மாணவருமான அஹ்னாப் ஜெஸீம் 2020 மே முதலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கப்பால் 11 அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஜனநாயக ரீதியாக தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த அமைப்புகளே அதிகமாகும். இவற்றில் சிலவற்றின் பிரதான வேலைத்திட்டம் சமூக நலன் நடவடிக்கைகளேயாகும்.
உரிய காரணங்கள் எதுவுமின்றி இந்த அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக இவர்கள் மூலம் கல்வி உள்ளிட்ட உதவிகளை பெற்று வந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இப்போது அதனை தமது அரசியல் நலன்களைப் பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்துவதானது வெட்கத்துக்குரியதாகும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கும் மிகப் பெரும் அநீதியுமாகும். அந்த வகையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தைப் பயன்படுத்தி நாடகமாடுவதை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதுடன் அப்பாவி முஸ்லிம் சமூகத்தை தொடர்ந்தும் நெருக்கடிக்குள்ளாக்குவதையும் கைவிட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
ஆசிரியர் தலையங்கம்
விடிவெள்ளி
Comments (0)
Facebook Comments (0)