கொவிடை காரணம் காட்டி பள்ளிகளின் இமாம்கள் முஅத்தின்கள் பணி நீக்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை
ஏ.ஆர்.ஏ.பரீல்
கொவிட் 19 நிலைமையை காரணம் காட்டி நாடளாவிய ரீதியில் பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம்கள், முஅத்தின்கள் மற்றும் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இவர்களில் அதிகமானோர் கொவிட் 19 நிலைமை காரணமாக சம்பளம் வழங்க முடியாது என்று காரணம் காட்டியே பள்ளிவாசல் நிர்வாகிகளினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரபை தொடர்பு கொண்டு வினவியபோது அவர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
“சம்பளம் வழங்க முடியாது எனத்தெரிவித்து பலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இவ்வாறான முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு பலர் தயக்கம் கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.
இவ்வாறு பள்ளிவாசல்களின் பணியாளர்களை பணியிலிருந்தும் நீக்குவது சட்டவிரோதமாகும். பள்ளிவாசல் நிர்வாகங்களினால் இவ்வாறு பள்ளிவாசல்களின் பணியாளர்களை வேலையிலிருந்தும் நீக்க முடியாது. இது சட்டவிரோதமானதாகும். இவ்வாறான நிர்வாகங்களுக்கு எதிராக தொழிற்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை திணைக்களத்தின் கள உத்தியோகத்தர்கள் மாவட்ட ரீதியில் பரிசீலித்து வருகின்றார்கள். முறைப்பாடுகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்த பின்பு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இமாம்கள், முஅத்தின்கள், ஏனைய பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் தொடர்ந்தும் கிடைத்து வருகின்றன. பள்ளிவாசலொன்றில் 40 வருடகாலம் முஅத்தினாக கடமைபுரிந்த ஒருவர் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இவ்விவகாரம் தொடர்பில் ‘விடிவெள்ளி’ இலங்கை இமாம்கள் மன்றத்தின் தலைவர் மௌலவி பெளசுல் அமீரைத் தொடர்பு கொண்டு வினவிய போது அவர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
“சம்பளம் வழங்க முடியாது என்று காரணம் காட்டி தாம் வேலையிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக சுமார் 35 பேர் முறையிட்டிருக்கிறார்கள். பல இமாம்கள், முஅத்தின்கள் விடுமுறையில் தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ள நிலையில் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை காரணமாக மீண்டும் வேலைக்கு வர முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
இவ்வாறானவர்களும் பள்ளிவாசல் நிர்வாகங்களால் வேலையிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்கள். சில பள்ளிவாசல் நிர்வாகங்கள் கொவிட் 19 ஐ காரணம் காட்டி மாதாந்தம் அரைவாசி சம்பளத்தையே வழங்கி வருகின்றன. எனவே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் வக்பு சபையும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
Vidivelli
Comments (0)
Facebook Comments (0)