1,000 இலங்கையர்களுக்கு உயர் கல்வி புலமைப்பரிசில் வழங்க பாக். இணக்கம்; உயர் ஸ்தானிகர்
இலங்கை மாணவர்கள் 1,000 பேர் பாகிஸ்தானில் உயர் கல்வியினை மேற்கொள்வதற்கான அல்லாமா இக்பால் புலமைப்பரிசிலினை வழங்க அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது என பாகிஸ்தானிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் என்.எம்.சஹீட் தெரிவித்தார்.
இந்த புலமைப்பரிசில் திட்டம் அடுத்த ஐந்து வருடங்களிற்கு அமுல்படுத்தப்பட்டவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்கான கட்டணம், விரிவுரைக் கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவு, கற்கை கொடுப்பனவு மற்றும் விமான டிக்கட் ஆகியன இந்த புலமைப்பிரிசில் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என உயர் ஸ்தானிகர் கூறினார்.
இது தொடர்பில் இலங்கை – பாகிஸ்தான் உயர் கல்வி ஒத்துழைப்பு திட்டத்தின் செயற்திட்ட முகாமையாளார் கலாநிதி அர்ஷத் பசீருடனான முக்கிய சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை மேலும் மேம்படுத்தும் நோக்கிலும் கலாசரம் பாரம்பரியம் தொடர்பில் இரு நாட்டு மாணவர்கள் மத்தியில் நல்ல புரிந்துணர்வினை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றது என உயர் ஸ்தானிகர் சஹீட் கூறினார்.
இதில் பெண் மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
தற்போது கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் வருடாந்தம் சுமார் 20 – 30 இலங்கை மாணவர்கள் பாகிஸ்தானில் உயர் கல்வி கற்பதற்கான புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-றிப்தி அலி-
Comments (0)
Facebook Comments (0)