பேசா விசாக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது எப்படி என்று தெரியுமா?
றிப்தி அலி
சவூதி அரேபிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு இந்த வருடம் வழங்கப்பட்ட 35 பேசாக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள விடயம் தகவல் கோரிக்கையின் ஊடாக தெரிய வந்துள்ளது.
"நடைமுறையில் உள்ள படியும், கடந்த வருடங்களைப் போன்றும் பேசா விசாக்கள், புத்தசாசன, மத விவகார மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் அறிவுறுத்தலின் படி பகிர்ந்தளிக்கப்பட்டது" என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தகவல் அதிகாரியான உதவிப் பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹமட் தெரிவித்தார்.
இதற்கமைய, களுத்துறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்கு தலா 10 என்ற அடிப்படையிலும் கம்பஹா மாவட்டத்திற்கு மூன்றும் ஹஜ் குழுவின் உறுப்பினர்களுக்கு மூன்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு ஆறும், ஹஜ் முகவர்கள் சங்கத்திற்கு ஒன்றும் என்ற அடிப்படையில் இந்த பேசா விசாக்கள் இந்த வருடம் பகிர்ந்தளிக்கப்பட்டதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.
இதற்கு மேலதிகமாக கண்டி மாவட்டத்திற்கு ஒன்றும், அனுராதபுர மாவட்டத்தின் ஹொரவப்பொத்தனையினைச் சேர்ந்த 'அரசாங்க அதிகாரி' தர கடவுச்சீட்டினை கொண்ட ஒருவருக்கும் இந்த பேசா விசாக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக வழங்கப்பட்ட 35 பேசா விசாக்களில் 25 விசாக்கள் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் அரசியல்வாதிகளின் சிபாரிசின் மூலம் வழங்கப்பட்டுள்ளமை இதன் மூலம் தெரியவந்துள்ளது.
Comments (0)
Facebook Comments (0)