1,000 இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானில் உயர் கல்விக்கான புலமைப்பரிசில்
1,000 இலங்கை மாணவர்கள் பாகிஸ்தானில் உயர் கல்வியினை மேற்கொள்வதற்கு அந்நாட்டு அரசாங்கத்தினால் புலமைப்பிரிசில் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை – பாகிஸ்தான் உயர் கல்வி செயற்திட்டத்தின் கீழ் இந்த அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.
ஐந்து வருட காலத்தினைக் கொண்ட இந்த புலமைப்பரிசிலின் ஊடாக பொறியியல், சமூக விஞ்ஞானம் மற்றும் இயற்கை விஞ்ஞானம் ஆகிய துறைகளில் பட்டப் படிப்பு, பட்ட பின் படிப்பு மற்றும் கலாநிதி கற்கைகள் ஆகியவற்றினை மேற்கொள்ள முடியும்.
விரிவுரை கட்டணம், தங்குமிட கட்டணம், மாணவர் கொடுப்பணவு, ஒரு தடவைக்கான விமானக் கட்டணம் ஆகியன இந்த புலமைப்பரிசிலின் கீழ் வழங்கப்படவுள்ளது. இந்த புலமைப்பிரிசில் திட்டத்தின் கீழ் அதிக பெண் மாணவர்கள் தெரிவுசெய்யப்படுவர்.
இவர்கள் பாகிஸ்தானின் உயர் தர பல்கலைக்கழங்களில் கல்வி கற்பர். இந்த புலமைப்பரிசில் தொடர்பான தகவல்களை இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முஹம்மத் சாத் கதாக் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இன்று (26) வெள்ளிக்கிழமை தெளிவுபடுத்தினார்.
இவர்கள் இருவருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. கொழும்பில் வீதி நூலகங்ள் உருவாக்கும் பாகிஸ்தானின் செயற்திட்டம் தொடர்பில் பிரதமருக்கு பாக். உயர் ஸ்தானிகர் விளக்கமளித்தார்.
இதனை வரவேற்ற பிரதமர், நாட்டின் ஏனைய மாகாணங்களில் நடமாடும் நூலகம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்தார். இதன் ஊடாக கல்வி வளங்களை பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கும் மாணவர்கள் நன்மையடைவர் என பிரதமர் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவினை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் இந்த சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் 'எப்போதும் இலங்கைக்கு உதவத் தயார்' என பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் இந்த சந்திப்பில் தெரிவித்தார்.
Comments (0)
Facebook Comments (0)