RTI தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை TISL வரவேற்பு
பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்கள் தொடர்பாக கோரப்பட்ட தகவல்களை வெளியிடுமாறு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தரவினை வலியுறுத்தும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானத்தை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் வரவேற்கிறது.
சாமர சம்பத் எதிர் இலங்கை பாராளுமன்றம் தொடர்பான விவகாரத்தில், 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2018ம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் குறித்த பிரகடனங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பாராளுமன்றம் உடனடியாக வெளியிட வேண்டும் என 2021ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு (RTI) உத்தரவிட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத் தன்மையின் அவசியத்தினை கருத்திற்கொண்டு கோரப்பட்ட தகவல்கள், அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை எனவும் பொதுநலனை அடிப்படையாக கொண்டவை எனவும் ஆணைக்குழு அறிவித்தது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களை பாராளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிப்பது 1975ஆம் ஆண்டின் சொத்து மற்றும் பொறுப்புக்களை பிரகடனப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் ஓர் சட்டப்பூர்வமான கடமை என்பதும் இங்கு கவனிக்கப்பட்டது.
ஆகவே பாராளுமன்ற உறுப்பினர்களின் அவ்வாறான சட்டப்பூர்வ கடமை தொடர்பிலான தகவல்களை கோரும் கோரிக்கைக்கு கட்டாயம் பதிலளிக்கப்பட வேண்டும் என ஆணைக்குழு அறிவித்தது.
சொத்து மற்றும் பொறுப்புக்களை பிரகனப்படுத்தல் சட்டமானது 2016ம் ஆண்டின் 12ம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை விட மிஞ்சியது அல்லது மேம்பட்டது எனும் காரணங்கள் உள்ளடங்கலாக தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து பாராளுமன்றமானது 15 காரணங்களுக்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
2023 பெப்ரவரி மாதம் 28ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றமானது RTI ஆணைக்குழுவின் உத்தரவினை உறுதி செய்தது. இங்கு குறிப்பிடத்தக்க ஓர் விடயம் யாதெனில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகள்/ஏற்பாடுகள் சொத்து மற்றும் பொறுப்புக்களை பிரகனப்படுத்தல் சட்ட விதிகள்/ஏற்பாடுகளை விட மேலோங்கியுள்ளது என மேல்முறையீட்டு நீதிமன்றம் சந்தேகத்திற்கு இடமின்றி கருதுகிறது.
ஊழலுக்கு எதிராகப் போராடும் நோக்கத்திற்காகவே இலங்கையில் சொத்து மற்றும் பொறுப்புக்களை பிரகனப்படுத்தல் சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பனவும் இயற்றப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றத்தின் தீர்ப்பு மேலும் எடுத்துக்காட்டுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டமானது இலங்கையின் அரசியலமைப்பு 14A உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலை அணுகுவதற்கான உரிமையினை அடையாளப்படுத்துவதனால் ஊழலை எதிர்ப்பதற்கும் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லாட்சியை மேம்படுத்துவதன் மூலமும் பொதுவாழ்வில் முழுமையாக பங்கேற்க நாட்டின் பிரஜைகளுக்கு அவகாசமாளிக்கிறது.
மேலும், சொத்து மற்றும் பொறுப்புக்களை பிரகனப்படுத்தல் சட்டமும் ஊழலை எதிர்த்துப் போராடுவதை நோக்காக கொண்டுள்ளது. இச்சட்டமானது பொருத்தமான நபர்களை அவ்வப்போது தங்களது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்துகிறது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது. அவ்வாறான மக்கள் பிரதிநிதிகள் எல்லா நேரங்களிலும் நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு ஏனையோர் பின்பற்றக்கூடிய முன்மாதிரிகளாக திகழ்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகார சபைகள் சட்டத்தின்படி செயல்படுகின்றனவா என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்வது அவசியம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தங்களது சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை பெற்றுக்கொள்வது தான் அந்தத் தகவலைப் பெறுவதற்கான ஒரே வழியாகும்.
பொது அதிகார சபைகள் தகவல்களை வழங்க மறுக்கும் முன், கோரப்படுகின்ற தகவலின் "பொது நலனின்" முக்கியத்துவம் தொடர்பில் கருத்தில் கொள்ளுமாறு குறித்த தீர்ப்பு மேலும் வலியுறுத்துகிறது.
இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஆறு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதிநிதிகளின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களின் வெளிப்படைத்தன்மை தொடர்பிலான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானத்தை TISL நிறுவனம் வரவேற்கிறது.
Comments (0)
Facebook Comments (0)