காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதி கிடைப்பது எப்போது?

காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகளுக்கு நீதி கிடைப்பது எப்போது?

ஆஷிக் வதூத்

"இராப் பொழுதொன்றில் எனது அப்பாவை வெள்ளை வானில் கடத்திச் சென்றதாக எனது அம்மா கூறினாள். அந்நாளிலிருந்து ஒவ்வொரு இராப் பொழுது வருகின்ற போதும் எனது அப்பாவை கூட்டிக்கொண்டு சென்றவர்கள் வீட்டில் கொண்டுவந்து விடுவார்கள் எனும் ஏக்கத்தில் வாசல்முற்றத்தில் காத்துக் கொண்டிருக்கிறேன்"  என்கிறாள் நிஷா.

திருகோணமலை கணேஷா நகரைச் சேர்ந்த நிஷாவிற்கு தற்போது வயது பதினெட்டு ஆகிறது. நிஷாவின் அப்பா  கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது  கடத்திச் செல்லப்பட்டார்.

நிஷாவைப் போல இன்னும்  பல நூற்றுக்கணக்காண குழந்தைகள் மற்றும் கணவன் மனைவிகளும் இவ்வாறு  காணாமல் போன தங்களுடைய குடும்ப உறவினர்களுக்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களது பிரச்சினையானது வடக்கு கிழக்கில் கடந்த 30 வருடங்களாக இலங்கையில் யுத்தம் நடைபெற்று முடிந்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் தொடர்பான எவ்வித முடிவோ, தகவலோ இற்றை வரைக்கும் கிடைக்கப்பெறவில்லை.

இவர்களது குடும்ப உறவினர்கள் இவர்களுக்காக தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டோர் விடயமானது ஜ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு வரை சென்றுள்ளது. வருடாந்தம் ஜெனீவாவில் நடைபெறும் ஜ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இவ்விவகாரம் விவாதிக்கப்படுகின்ற போதிலும் இதுவரை எந்தவித ஆக்கபூர்வமாண தீர்வுகளும் எட்டப்படவில்லை.

"இலங்கையில் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 04ஆம் திகதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால்  அன்றைய தினத்தை நாம்  சுதந்திர  தினமாக கருதுவதில்லை ஏனெனில் காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் மீளக் கிடைக்கும் வரைக்கும்  சுதந்திர தினத்தினை நாங்கள் கரிநாளாக புறக்கணித்து கறுப்பு பட்டி அணிந்து உணவுத்தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம்.

தொடர்ச்சியாக எங்கள் உறவுகளை நாங்கள் தேடிக்கொண்டிருக்கின்றோம். பல ஆண்டுகளாக  வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறோம். எதிர்வரும் ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வில் இலங்கை அரசிற்கு எந்த கால நீடிப்பும் கொடுக்காமல் எங்களுக்கான நீதியினை விரைவில் பெற்றுத் தரவேண்டும். காணாமல் போன பிள்ளைகளை தேடிய பெற்றோர்கள்  தற்போது வயது சென்று இறந்து கொண்டும் போகின்றார்கள்" என வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் தலைவி ம.ஈஸ்வரி தனது கருத்தை தெரிவித்தார்

இதேவேளை காணாமல் போனோரின் உறவினரும் சமூக செயற்பாட்டாளருமான எஸ்.பஞ்சலிங்கம் கருத்து வெளியிடுகையில் "அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் விடயத்தில் அக்கறையுடன் செயற்பட்டு இவர்களுக்கான உரிய நீதியை விரைவில் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்  அனேகமானவர்கள் இலங்கையிலேயே இருக்கின்றார்கள். இவர்களுக்கான   நீதி இது வரைக்கும் கிடைக்கப்பெறவில்லை. இந்த நாட்டில் சட்ட ஒழுங்கு ஒன்று காணப்படுகின்றது.

அதற்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இவர்களுக்கான நீதியை பெற்றுகொள்வதற்காக தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவ்விடயம் தொடர்பாக அரசு நீதியினை நிலை நாட்டவேண்டும். உண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இருக்கிறார்களா இல்லையா என உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவாவது சரி இவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும்" என்றார்.

தெற்கில் சிங்கள இளைஞர்களின் ஆயதக் கிளர்சியின் போதும்,வடக்கு கிழக்கில் யுத்தம் இடம் பெற்ற காலத்தின் போதும் ஆயிரக்கணக்காண இளைஞர் யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் கணிசமானோர் அரச படைகளாலும் தமிழ் ஆயுதக் குழுக்களாலும் கடத்தி காணமல் ஆக்கப்பட்டதாக பரவலாக குற்றம் சாட்டப்படுகின்றது.

இத்தகைய குற்றசெயல்களை விசாரிக்க கடந்த கால அரசாங்கங்களால் பல ஆணைக்குழுக்ளும் பொறிமுறைகளும் நிறுவப்பட்டன. எனினும் குறித்த ஆணைக்குழுக்கள் தமது கடமையினை சரிவர மேற்கொள்ளவில்லை என அதைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை 1996 இல் வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கையின் படி 1980-96 காலப் பகுதியில் இலங்கையில் 11,513 பேர் காணமல் போய் உள்ளனர். இது உலகில் ஈராக்குக்கு அடுத்த படியான இரண்டாம் நிலை ஆகும். 1999 ஆசிய மனிதவுரிமை ஆணையகத்தின் அறிக்கை ஒன்றின் படி, அப்போது காணமல் ஆக்கப்பட்டவர்களின் 16,742 முறைப்பாடுகளுக்கு எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத வழக்குகள் இருக்கின்றன.

அதன் பிறகு நடத்தப்பட்ட ஆள்கடத்தல்களும் காணாமல் போதல்களும் இந்த எண்ணிக்கையை ஆயிரக்கணக்கில் அதிகரித்திருக்கும். இவ்வாறு கடத்தப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் இலங்கைத் தமிழர்கள் ஆவர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் உருவாக்கப்பட்டது (OMP).

இந்த அலுவலகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு 2018 ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று காணாமற்போன அல்லது காணாமல் ஆக்கப்பட்டோரின் 650 குடும்ப உறுப்பினர்களின் பங்குபற்றுதலோடு நடைபெற்றது. இலங்கையில் நல்லிணக்கத்தை எட்டுவதற்கு காணாமற்போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஆட்களின் குடும்பங்களுக்கு நீதியை பெற்றுக் கொடுத்தல்; எனும் குறிக்கோளின் அடிப்படையிலேயே இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டது.

காணாமல் போனோர்களை உறுதிப்படுத்தி அவர்களுக்கான சான்றிதல்களை பெற்றுக் கொடுத்தல், காணாமல் போனோர்களின் குடும்பங்களுக்கான சேவைகளையும் நலன்களையும் வழங்குவது ஆகியனவும் இந்த அலுவலகத்தின் பணிகளாகும்.

முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணாமற்போன அல்லது காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய முறைப்பாடுகளை தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சிடம் கையளிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். இதற்கமைய தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் OMP அலுவலகத்திடம் 14,641 விண்ணப்பங்களைக் கையளித்தது.

இவ்விண்ணப்பங்களை அடிப்படையாகக் கொண்டு காணமல்போனோர் மற்றும் காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பட்டியல் ஒன்றை OMP உருவாக்கியுள்ளது. இப்பட்டியலை அதன் இணையத்தளத்தில் அணுக முடியும். இது எதிர்கால விசாரணையின் போது உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும் புதிய அரசாங்கம் காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் செயற்பாடுகளை தொடர்வதற்கான விருப்பத்தை வெளிப்படுத்துவதாக தெரியவில்லை. எதிர்காலத்தில் இந்த அலுவலகமும் கைவிடப்படுவதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன.
 
இதேவேளை அரசாங்கங்களின் மேற்படி செயற்பாடுகள் அனைத்தும்  வெறும் கண்துடைப்பே என காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் திருகோணமலை மாவட்ட தலைவி ஆஷா நாகேந்திரன் தனது கருத்தை கூறுகையில் "சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் வித்தை போன்று இலங்கை அரசாங்கத்தால் எங்களை ஏமாற்ற முடியாது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வு நடைபெறும் போது சர்வதேச சமூகத்தை சமாதானப்படுத்த இலங்கை அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாயைதான் காணாமல் போனவர்களுக்கான ஒரு அலுவலகமாகும். இதன் மூலமாக எமக்கு உதவுவது போன்று காட்டிக் கொள்வது சர்வதேச சமூகத்தினை ஏமாற்றுவதற்கான முயற்சியே" என்றும் அவர் தெரிவித்தார்.

பத்து வருட காலமாக போராடியும் இலங்கை அரசாங்கம் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் எதுவித பதிலும் வழங்காத  நிலையில் சர்வதேசமாவது  நியாயமான பதிலை கூற வேண்டும் எனக் கோரியே ஒருவருடத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தை தாம் நடாத்தி வருவதாகவும் ஆஷாநாகேந்திரன் குறிப்பிட்டார்.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்து வரும் சமூக ஆர்வளரும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான த.சசிதரன் கருத்து தெரிவிக்கையில் "வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தரவுகள் சரியான முறையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்படவில்லை.

இதனை அண்மையில் நடந்த ஜ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் அறிந்து கொள்ள முடிந்தது. இத்தரவுகளை சர்வதேசம் வரைக்கும் கொண்டு செல்வதற்கான போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தயாராக உள்ளோம்" என அவர் மேலும் கூறினார்.

அண்மையில் வட மாகாண சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியாளர்களுக்கான இணைய வழிக் கலந்துரையாடலில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறை வேற்றுப்பணிப்பாளர் யஸ்மின் சூக்கா கருத்து வெளியிடுகையில்  "இலங்கை அரசாங்கமானது கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்களை உள்நாட்டில் விசாரணைக்கு உட்படுத்தி வழக்குத் தொடர்வதற்கான முதன்மையான பொறுப்பினைக் கொண்டிருக்கின்ற அதேவேளையில் அதனைச் செய்ய இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது என்பதனை ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானம் ஏற்றுக்கொள்கிறது.

இலங்கையானது பொறுப்புக்கூறலைச் செய்வதற்கான விருப்பத்தைக் கொண்டிருக்காமையே சர்வதேச சமூகம் அவ்விடயத்தை கையிலெடுத்திருப்பதற்கான முக்கிய காரணமாகும். கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி வேறு வழியில்லாமல் இராணுவத்திடம் சரணடைந்த 280 பேர்களின் புகைப்படங்களும் அவர்கள் தொடர்பான விபரங்களும் ITJP இன் இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் காணாமல்போனோர் அலுவலகம் தனது விசாரணைகளை ஆரம்பிக்கும்போது இவர்களின் நிலைப்பாடு குறித்தும் கவனத்திற்கொள்ள வேண்டும் என நாம் காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளோம்.

அத்துடன் காணாமல்போனோரின் உறவுகளின் சாட்சியங்களை நாம் பெறும்போது அவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். காணாமல்போனோர் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான புறக்கணிப்பு போக்கை கடைப்பிடிக்குமானால் இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்வதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்போம்" என்றார்.

இவ்வாறு இலங்கையில் காணாமல்போனோர்  தொடர்பான விவகாரமானது கடந்த ஒரு தசாப்பத்திற்கும் மேலாக தீர்வு காணப்படாத ஒரு சர்சசையாகவே தொடர்கிறது. ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களும் இதற்கு தீர்வு காண்பதில் இதய சுத்தியுடன் செயற்படுவதாக தெரியவில்லை. இதற்கென கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட உள்நாட்டு பொறிமுறைகளும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

ஐ.நா உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் சர்வதேச பொறிமுறை ஒன்றின் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கின்ற போதிலும் அதற்கு இலங்கை அரசாங்கம் உடன்பட மறுக்கின்றுது. இவ்வாறான சிக்கலுக்கு மத்தியிலேயே நிஷா போன்ற நூற்றுக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏக்கங்களுடன் தீர்வுக்காக காத்திருக்கின்றனர்.

இவர்களுக்கு சரியான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டும். இதற்கான அழுத்தங்களை தமிழ் அரசியல் தலைமைகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டளர்களும் அரசுக்கு வழங்க முன்வர வேண்டும்.