வீழ்ச்சிப் பாதையில் பாடசாலை கல்வி

வீழ்ச்சிப் பாதையில் பாடசாலை கல்வி

-எஸ்.என்.எம்.சுஹைல்-

“க.பொத. உயர்தர பரீட்சைக்கு தோற்ற வேண்டிய மாணவன். திறமையானவன் இப்போது மேல் மாகாணத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் வேலை செய்கிறார். திறமையான அந்த மாணவன் பாடசாலையில் மிக ஆர்வத்துடன் கல்வி பயில்வான். வறுமைகோட்டுக்கு கீழ் வாழும் அவனது குடும்பத்தினர் நாடு முடக்கப்பட்டுள்ளதால் அவனது குடும்பம் கடுமையாக பாதிக்கப்படுள்ளது.

அவனது குடும்பம் வாழ்வாதாரத்தை இழந்துள்ளது. வீட்டிலேயே முடிங்கிக் கிடந்த அந்த இலகிய மனம்கொண்ட அந்த மாணவனால் குடும்ப கஷ்டத்தை பொருத்துக்கொள்ள முடியவில்லை.

எங்கிருந்தாலும் இணையத்தின் ஊடாக கற்க முடியும் என்ற நிலை இருப்பதால் அவன் தொழிற்சாலையொன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளான்" என கண்டி, தெல்தோட்டை - எனசல்கொல்ல மத்திய கல்லூரியில் புவியியல் கற்பிக்கும் ஆசிரியர் திருமதி எம்.ஐ.கே. மஹ்மூரா கூறுகின்றார்.

இவ்வாறு தனது ஆதங்கத்தை தொடர்ந்து கூறும் ஆசிரியை “அந்த மாணவனின் பெயர் விபரத்தை என்னால் கூற முடியாது. ஆனாலும், அவன் படிப்பை இடைநடுவில் விட்டுவிட்டு தொழிலுக்கு செல்லவில்லை. காலையில் நான் வகுப்பு நடத்துவேன். அதன் காணொளியை வட்ஸ்அப் மூலமாக அந்த மாணவனுக்கு அனுப்பி வைப்பேன்.

வேலை முடித்துவிட்டு விடுதிக்கு வந்து இரவில் குறித்த மாணவன் அந்த காணொளிகளை கொண்டு படிப்பான். சந்தேகங்கள் இருந்தால் வட்ஸ்அப்பில் குரல் பதிவை இட்டிருப்பான். நள்ளிரவு 12 மணி தாண்டியே அந்த குரல் பதிவுகள் வந்திருக்கும்”. அப்படி சொல்லி பெரு மூச்சு விட்டார் மஹ்மூரா ஆசிரியை.

கொரோனாவின் கோரப்பிடி மாணவர்களின் கல்வியை பாதிக்கச் செய்திருக்கிறது. நாடு முடக்கப்பட்டமை நடுத்தர, மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதித்து வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது.

கணவனின் தொழில் மற்றும் பிள்ளைகளின் படிப்புக்காக மத்திய மாகாணத்திலிருந்து தலைநகருக்கு குடிபெயர்ந்திருக்கின்றனர் திருமதி. எஸ். பர்வினின் குடும்பத்தினர். ஐந்து பிள்ளைகளின் தாயான அவரின் மூத்த மகள் உயர் தர விஞ்ஞான பிரிவில் கற்கிறார்.

இன்னுமொருவர் பெண் பிள்ளை  சாதாரன தரத்திலும் கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கற்கின்றனர். மூத்த மகன் பிரபல ஆண்கள் பாடசாலையில் 9ஆம் தரத்திலும் இரண்டாவது மகன் அதே பாடசாலையில் 5ஆம் தரத்திலும் கற்கின்றனர்.

கடைசி பிள்ளை இந்த வருட ஆரம்பத்தில் முன்பள்ளிக்குச் சேர்ந்தாலும் இரண் வாரங்கள்தான் பாலர் பாடசாலைக்கு சென்றதாக கூறுகிறார் பர்வின்,

“ஆசிரியர் சம்பள போராட்டத்தால் கடந்த சில மாதங்களாக பிள்ளைகளுக்கு இணைய வழி கற்கைகளும் நடைபெறுவது மிகக் குறைவு. எனது மூன்று பிள்ளைகளும் பிரதான ஒரு வருட காலத்திற்குள் தோற்ற இருப்பதால் இவ்வருடம் ஒக்டோபர் முதல் அடுத்த வருட ஒக்டோபர் வரையிலான ஒரு வருட காலம் எமக்கு மிக முக்கியமான ஆண்டு.

என்றாலும் இன்றைய காலச் சூழ்நிலை எம்மை பெரும் பீதியைதான் தருகின்றது. அரச உத்தியோகம் செய்யும் எனது கணவனின் ஒற்றை வருமானத்துடன் மிக இருக்கமானதாக எமது நாட்கள் கழிகின்றன" என்றார்.

அத்தோடு, “மூத்த பிள்ளை வகுப்பில் இருந்து கற்பதானாலேயே கல்வியை உள்வாங்கிக் கொள்ளும் விருப்பை உடையவள், அவரால் இணைய வழி மற்றும் தொலைக்காட்சி, வானொலியில் ஒலி, ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை பார்த்து அவரால் கற்க முடியாது.

இரண்டாவது மகள் சுயமாக கற்கும் திறணுடையவள், என்றாலும் இணையவழி கற்பித்தல் பாதிக்கப்பட்டமையால் பெரும் சிரமமாக இருக்கிறது. ஐந்தாம் தரத்தில் கற்கும் மகனை வீட்டுக்குள் வைத்து படிப்பிக்கும் போது புற சூழல் அவருக்கு கற்பிப்பதில் அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றன.

இரண்டாம் பிள்ளைக்கு ஆசிரியர் போராட்டத்திற்கு முன்பும் பெரிதாக இணைய வழி கற்பித்தல் நடைபெறவே இல்லை. கொழும்புச் சூழல் பிள்ளைகளுக்கு ஓய்வாக வெளியில் கொஞ்ச நேரம் இருப்பதற்கே இடவசதிகள் இன்மையாலும் வீட்டுக்குள்ளேயே மதக் கணக்கில் முடங்கியிருப்பதாலும் பிள்ளைகள் பெரும் மன சோர்வுக்கு ஆளாகியிருக்கின்றனர்” என தன் நிலைமையை ஒரு பெற்றோராக படபடவென கூறி முடித்தார் 40 வயது மதிக்கத்தக்க அந்த தாய்.

“எனது பெற்றோர் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருந்தனர். முடக்கநிலை காரணமாக இந்த துரதிஸ்டம் ஏற்பட்டது. இணையவழி கல்வியை கற்ற கையடக்கத் தொலைபேசி வசதிகளோ, மடிக்கணனி வசதிகளே முழுமையாக இல்லை. அதனை வாங்கித் தருவதற்கும் பெற்றோருக்கு போதுமான வசதி இல்லை.

எங்களிடம் ஒரேயொரு என்ரோய்ட் தெலைபேசி இருக்கிறது. அது பழைய பதிப்பு என்பதால் 3G  Covarageக்கு தான் பாவிக்க முடியும். தற்போது 4G Covarage மாத்திரமிருப்பதால் எந்த செயலியும் இயங்குவதில்லை.

இருக்கின்ற நிலைமைக்கு பெற்றோருக்கு புதிய பதிப்புடனான தொலைபேசியொன்றை பெற்றுத் தருவதென்பது கஷ்டமானதாகும்” என பொகவந்தலாவையிலுள்ள தோட்டப்புர பாடசாலையொன்றில் தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவி இரா. சக்தி கூறினார்.

இதனிடையே ஆசிரியர்கள் அதிபர்கள் தொடர்ந்தும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில்  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து வெளியிடுகையில்,

“நாடு திறக்கப்பட்ட பின்னர் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. என்றாலும் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எங்களுடன் கலந்துரையாடப்பவில்லை. பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதாக இருந்தால் அது தொடர்பில் மேற்கொள்வதற்கு பல நடவடிக்கைகள் இருக்கின்றன.

பாடசாலைக்கு தேவையான சுகாதார பாதுகாப்பு, மாணவர்களுக்கான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யவேண்டி இருக்கின்றன. அதன் பின்னரே பாடசாலைகளை ஆரம்பிக்கலாம்” என்றார்

அத்துடன் பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் நாடு பூராகவும் எதிர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டு, அதிபர், ஆசிரியர் போராட்டத்தை புதிய வடிவத்தில்  தொடர்ந்து முன்னெடுப்போம்.

எமது இந்த போராட்டத்துக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களும் ஆதரவளிப்பதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றன" என்றார்.

இதேவேளை, இன்றைய அரசாங்கத்திற்கு ஒரு கல்விக் கொள்கையே கிடையாது என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

“ராஜபக்ஷ அரசாங்கம் கல்விக்கு முக்கியத்துவமளிப்பதில்லை. அதனால், இன்று கல்வி பாரியளவில் பின்தங்கியிருக்கிறது. கொரோன சூழ்நிலையை விட அரசாங்கத்தின் பொடுபோக்கும் கரிசனையற்ற தன்மையுமே படுமோசமான நிலைமைக்கு காரணம்.

எல்லாவற்றையும் கொரோனாவை காட்டி மக்களை ஏமாற்ற முடியாது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்திடமும் அதன் பிரதானியான ரணில் விக்ரமசிங்கவிடமும் சிறந்த கல்விக் கொள்கை காணப்பட்டது. அதனால் தூரநோக்குடைய கல்வித் திட்டங்களை செயற்படுத்த முடிந்தது.

அத்தோடு, நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் டிஜிடல் தொழிநுட்பத்தை கல்வி செயற்பாடுகளுக்கு பயன்படுத்தும் முறைமையை அவர் அறிமுகப்படுத்த முயன்றபோது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை தடுத்தார்.

அப்போதைய எதிர்க்கட்சியாக செயற்பட்ட கூட்டு எதிரணியும் நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தவிடல்லை. நாம் மாணவர்களுக்கு டெப் வழங்கும் திட்டத்தையும் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தையும் அமுல்படுத்தியிருந்தால் இன்று கற்றல் செயற்பாடுகளில் பெரும் தடங்கல் ஏற்பட்டிராது.

அத்தோடு, பின்தங்கிய கிராமபுரங்களிலும் மலையக தோட்டபுறங்களிலும் தொலைதொடர்பு வலையமைப்புளில் சிக்கல் இருக்கின்றன. முன்னாள் டிஜிடல் அமைச்சர் ஹரீன் கொண்டுவந்த திட்டங்களையெல்லாம் விமர்சித்தவர்களால் இன்று எந்தவொரு நல்ல திட்டங்களையும் நடைமுறைப்படுத்த முடியாதிருப்பது வெட்கப்பட வேண்டும்.

இவர்களின் அசரித்தையாள் அப்பாவி மாணவர் சமூகம் பாதிக்கப்படுகிறது. எதிர்கால கல்வி அபிவிருத்தியில் தேக்க நிலையொன்று உருவாகின்றது” என்னும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக கல்வித்துறைக்க பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டிலிருந்து  மாணவர்களின் கற்றல் நிலை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இணையவழி முறைமை ஊடாக ஆசிரியர்கள் கற்பித்தல்நடவடிக்கைகளில் ஈடுப்பட்டார்கள் என தொலைநோக்கு கல்வி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றும்போது கூறினார்.

“ஆசிரியர்- அதிபர் சேவையில் நிலவும் வேதன பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொள்ளும் வரை நிகழ்நிலை முறைமை ஊடான கற்பித்தலில் ஈடுப்பட போவதில்லை என ஆசிரியர்கள் உறுதியாகவுள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் மாணவர்களன் கல்வி நிலையை கருத்திற் கொண்டு தொலைநோக்கு முறைமை ஊடாக கற்றல் நிகழ்ச்சிகள்  அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி சேவையில் ஒளிப்பரப்பு செய்யப்படுகின்றன. அத்துடன் இவ்வருடம்  நடைப்பெறவுள்ள தேசிய பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்காக விசேட கற்பித்தல் நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகுகின்றன.

கொவிட் தாக்கத்தினால் கல்வித்துறைக்கு பெறும் சவால்கள்  ஏற்பட்டுள்ளன. இச்சவால்களை வெற்றிக் கொள்ள புதிய கொள்கை வகுப்பது அவசியமாகும். கல்வித்துறை மேம்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கம் திட்டங்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

தேசிய தொலைக்காட்சி அலைவரிசையான ருபவாஹினி, ஐ அலைவரிசை, நேத்ரா, சுயாதீன தொலைக்காட்சி மற்றும் வசந்தம் ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகளில் கல்வி சேவைகள் நடத்தப்படுகின்றன. அத்தோடு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், அதன் பிராந்திய ஒலிபரப்புச் சேவைகள் ஊடாகவும் இவ்வாறு கல்வி ஒலிபரப்புகள் இடம்பெறுகின்றன.

National Srtreem Hub என்ற ஒரு தளத்தை ஸ்தாபிக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றதாக தேசிய கல்வி நிறுவகத்தின் விரிவுரையாளரும், teachmore.lk இணையத்தளத்தின் நிறுவுனருமான ஜெஸார் ஜவ்பர் கூறினார்.

அத்தோடு, தனித் தனி தொலைக்காட்சி அலைவரிசைகள் ஊடாக ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்க ஏற்பாடு செய்வதுடன், புதிய கல்வி கொள்கையுடன் எதிர்கால செயற்திட்டங்களை முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுப்பதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, “இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் 'கிராமத்திற்கு தொடர்பு' என்ற திட்டத்தின் கீழ் நாட்டின் 25 மாவட்டங்களுக்குள் உள்ள 14,000 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய ரீதியாக ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பல பகுதிகளில் அதிவேக இணைய வசதி குறைவாக உள்ளது" என ஊடகத்துறை அமைச்ச டலஸ் அழகப்பெரும, சுட்டிக்காட்டினார்.

இதனை சரி செய்ய தேவையான நிதி தொலைத்தொடர்பு மேம்பாட்டு நிதியிலிருந்து நிதியளிக்கப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் 200 பேருக்கு குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை முதற்கட்டமாக அரசாங்கம் ஆரம்பிக்கின்றன.

கடந்த வருடம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட இலங்கையின் வருடாந்த பாடசாலை கணக்கெடுப்பு எனும் தலைப்பிலான அறிக்கையின் அடிப்படையில் நாட்டிலுள்ள 10,155 பாடசாலைகளில் 5,131 பாடசாலைகளை ஆரம்பிக்க முடியும். இது 50 வீதத்திற்கும் அதிகமான பாடசாலைகளாகும்.

எனினும், அரைவாசிக்கும் அதிகமான பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் நிலையில் தொடர்ந்து ஆசிரியர் அதிபர்களின் போராட்டம் இடம்பெறுகின்றமையினால் மாணவர்களின் கல்வி நிலைமை பாதிக்கப்படும்.

அத்தோடு, நாட்டிலுள்ள அரைவாசி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் 50 வீதத்திற்கும் குறைவான மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பை ஏற்படுத்தமுடியும். இந்த திட்டம் ஒரு பரீட்சார்த்தமான திட்டமானாலும் மாணவர்களுக்கு சமகல்வி மறுக்கப்படுகின்றமையை சுட்டிக்காட்ட முடியும்.

எது எவ்வாறாயினும், மாணவர்களின் கல்வி நடவடிக்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வுத்திட்டங்கள் சுமூக நிலையை எட்டவில்லை என்பதும் புலனாகிறது.

அத்தோடு, 2 வருடங்களாக கொரோனா தொற்றால் நாடு ஸ்தம்பிதமடைந்திருந்து ஏற்பட்டிருக்கும் அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்து அதற்கேற்ற வகையிலான கல்விக் கொள்கைகள் உருவாக்குவதிலும் செயற்றினற்ற மந்த நிலைமை காணப்படுகின்றது.

நவீன தொழிநுட்பத்தை கல்விக்கு பயன்படுத்தும் திட்டம் நல்லாட்சி அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தபோதும் அதனை நடைமுறைக்கு கொண்டுவருவர முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அன்று எதிர்க்கட்சியாக இருந்த இன்றைய அரசாங்கத்தினரும் பெரும் தடை ஏற்படுத்தியிருந்தனர்.

எனவே, கல்வியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையானது எதிர்காலத்தில் மேலும் பல்வேறு சவால்களை எதிர்நோக்கவேண்டி ஏற்படும் சாத்தியம் இருக்கின்றது. இது குறித்து சமூகமட்டத்தில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களும் அரசியல் நிர்வாக மட்டத்தில் ஸ்திரமான கொள்கையுடான செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்படுமானால் நாட்டின் எதிர்காலம் சுபீட்சமாகும் என்பதில் ஐயமில்லை.