2015 - 2021 காலப் பகுதியில் நியமிக்கப்பட்ட 12 ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்கு 52 கோடி ரூபா செலவு
க. பிரசன்னா
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரால் 2015 - 2021 காலப்பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள 12 ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்கு 52 கோடி ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.
2015 - 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இதுவரை 12 ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஆறு ஜனாதிபதி ஆணைக்குழுக்களும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் ஆறு ஆணைக்குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதி செயலகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2015 - 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரால் நியமிக்கப்பட்ட 12 ஆணைக்குழுக்களுக்கு 520,459,200 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.
ஆணைக்குழுக்களுக்காக 2015ஆம் ஆண்டு 43,000,000 ரூபாவும், 2016ஆம் ஆண்டு 41,774,500 ரூபாவும், 2017ஆம் ஆண்டு 55,000,000 ரூபாவும், 2018ஆம் ஆண்டு 33,000,000 ரூபாவும், 2019ஆம் ஆண்டு 92,000,000 ரூபாவும், 2020ஆம் ஆண்டு 129,500,000 ரூபாவும் 2021ஆம் ஆண்டு 126,184,700 ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு பலகோடி ரூபா மக்கள் பணத்தில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் முழுமையாக இதுவரை நாட்டில் அமுல்படுத்தப்பட்டது கிடையாது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கைகள் எவையும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை.
இறுதியாக ஜூன் 6 ஆம் திகதி 2022-03-31 மற்றும் 2022-05-15 திகதிகளுக்கு இடையில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற தீவைப்பு, கொள்ளை மற்றும் கொலை உட்பட அனைத்து வகையான சொத்துக்கள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)