ஒப்பந்தக்காரரின் அசமந்த செயற்பாட்டினால் ஆறு மாடி கட்டிடத்தினை இழந்தது அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை
றிப்தி அலி
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான ஆறு மாடி கட்டிடத்தின் நிர்மாண பணிகள் உரிய காலத்தினுள் ஒப்பந்தக்காரரினால் போதுமானளவில் பூர்த்தி செய்யப்படாமையின் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தின் ஊடாகவே இந்த தகவல் வெளியாகியுள்ளது. பொத்துவில் முதல் கல்முனை வரையான அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேச மக்களுக்கு தேவையான சுகாதார சேவையினை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வழங்கி வருகின்றது.
இப்பிராந்திய மக்களுக்கு மேலும் வினைத்திறனான சுகாதார சேவையினை வழங்கும் நோக்கில் சுகாதார அமைச்சினால் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஆறு மாடிகளைக் கொண்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவிற்கான கட்டிடத் தொகுதியொன்றினை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டது.
இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் வைத்தியசாலையின் இரத்த வங்கி திறப்பு விழாவும் கடந்த 2018ஆம் ஆண்டு ஜுன் 17ஆம் திகதி அப்போதைய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
இந்த கட்டிடத்தினை நிர்மாணிக்கும் பொறுப்பினை (ஒப்பந்தக்காரர்) 'லிங்க் இன்ஜினியரிங்க் தனியார் கம்பனி' எனும் நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு கடந்த 2018ஆம் ஆண்டு ஒகஸ்ட் 21ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
சுமார் 735 நாட்களுக்குள் நிறைவுசெய்ய வேண்டிய குறித்த செயற்திட்டம் கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 12ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆறு மாடிக் கட்டிடத்தின் முதல் இரண்டு மாடிகளை நிர்மாணிப்பதற்காக சுகாதார அமைச்சினால் 926,548,232.30 ரூபா நிதியொதுக்கப்பட்டது.
இதற்கமைய 31,098 சதுர அடி பரப்பளவினைக் கொண்ட வைத்தியசாலையின் நிலப்பரப்பு கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 02ஆம் திகதி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியடசகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எம். றஹ்மானினால் ஒப்பந்தக்காரரான லிங்க இன்ஜினியரிங்க் தனியார் கம்பனியிடம் கையளிக்கப்பட்டது.
இதனையடுத்து ஒப்பந்தக்காரரான லிங்க் இன்ஜினியரிங்க் தனியார் கம்பனிக்கு சுகாதார அமைச்சினால் முற்பணமாக 182,885,646.46 ரூபா (வெட் வரி நீங்கலாக) வழங்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த கட்டிடத்திற்கான நிர்மாணப் பணிகள் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதியே ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அப்போதைய சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசீம் பிரத அதிதியாக கலந்துகொண்டார்.
இவ்வாறான நிலையில் குறித்த கட்டிடத்திற்கான நிர்மாணப் பணிகள் எதுவும் இடம்பெற்றதை அவதானிக்க முடியவில்லை. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சு மற்றும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஆகியவற்றுக்கு தகவல் அறியும் விண்ணப்பங்கள் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டன.
குறித்த கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை கடந்த 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் 23ஆம் திகதி இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்து உரிய தரப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக தகவல் அறியும் விண்ணப்பங்களுக்கு அளிக்கப்பட்ட பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஒப்பந்தக்காரரினால் போதுமானளவு வேலைகள் மேற்கொள்ளப்படாமையின் காரணமாகவே இந்த வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவிற்கான ஆறு மாடி கட்டிடத்தின் நிர்மாண பணி இடைநிறுத்தப்பட்டது" என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
CECB என்று அழைக்கப்படும் மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்தின் ஆலோசனைக்கமையவே சுகாதார அமைச்சினால் இந்த இடைநிறுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், குறித்த கட்டிடத்தின் நிர்மாணத்தினை தொடர்ந்து மேற்கொள்வதற்கான அனுமதியினை வழங்குமாறு லிங்க் இன்ஜினியரிங்க் தனியார் கம்பனி, சுகாதார அமைச்சின் செயலாளரிடம் மேன் முறையீடு செய்துள்ளது.
"குறித்த ஒப்பந்தக்காரருக்கு வழங்கப்பட்ட முற்பணத்தினை இலங்கை வங்கியின் கடன் ஒத்துழைப்பு பிரிவின் பெருநிறுவனக் கிளையின் ஊடாக சுகாதார அமைச்சு மீளப் பெற்றுக்கொண்டுள்ளது" என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த கட்டிட நிர்மாணப் பணிக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவு, மார்பு சிகிச்சை பிரிவு, பேச்சு சிகிச்சை பிரிவு, மனநல பிரிவு, பிஸியோதெரபிஸ்ட் பிரிவு ஆகியன இயங்கிவந்த கட்டிடங்கள் உடைக்கப்பட்டன.
இதன் காரணமாக இந்த வைத்தியசாலை தற்போது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாரிய இடநெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. "எனினும் இதுபோன்ற பாரிய கட்டிட நிர்மாணங்களுக்கு நிதியொதுக்கீடு மேற்கொள்வதை அரசாங்கம் தற்போது நிறுத்தியுள்ளது.
இதனால் இந்த கட்டிட நிர்மாணத்தினை மீண்டும் முன்னெடுப்பதென்றால் அமைச்சரவையின் அனுமதியினை மீண்டும் பெற வேண்டும்" என சுகாதார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
Comments (0)
Facebook Comments (0)