PTAஇன் கீழ் 125 பேருக்கு விளக்கமறியல்
றிப்தி அலி
சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 125 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
இதில் 81 பேர் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதலுடனும், 44 பேர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என அப்பிரிவு தெரிவித்தது.
இதில், 49 பேர் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலும், 76 பேர் மேல் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக, பயங்கரவாத தடைச் சட்டத்தின் 9ஆவது பிரிவின் 1ஆவது உப பிரிவின் கீழ் ஈஸ்டர் தற்கொலை தாக்குல் மற்றும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இருவர் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என பயங்கரவாத தடுப்புப் பிரிவு குறிப்பிட்டது.
சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையினை வெளியிடுமாறு மனித உரிமைகள் ஆர்வலளரான அம்பிகா சற்குகணாதன் தகலறியும் விண்ணப்பமொன்றினை 2021.07.19ஆம் திகதி பொலிஸ் திணைக்களத்திற்கு சமர்ப்பித்திருந்தார்.
எனினும் குறித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமையினால் கடந்த ஜனவரி 24ஆம் திகதி தகலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் மேன் முறையீடு செய்திருந்தார்.
இந்த மேன் முறையீட்டினை ஆராய்ந்த ஆணைக்குழு, குறித்த தகவலை நவம்பர் 3ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது.
இதற்கமைய, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுவர்களின் எண்ணிக்கையினை பொலிஸ் திணைக்களத்தின் கீழுள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)