மருந்துக் கொள்வனவிற்கு இட்டுகம நிதியதிலிருந்து 180 கோடி ரூபா ஒதுக்கீடு
றிப்தி அலி
'இட்டுகம (செய்கடமை)' என்று அழைக்கப்படும் 'கொவிட் 19 – சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் 90 சதவீதமான 180 கோடி ரூபா நிதி, சுகாதார அமைச்சின் பட்டியலுக்கான சரியான தீர்ப்பனவிற்காக (settlement of accrued bills to Health Ministry) ஒதுக்கப்பட்டுள்ள விடயம் தகவலறியும் கோரிக்கையின் ஊடாக வெளியாகியுள்ளது.
இந்த நிதியத்துக்கு நன்கொடையாளர்களிடமிருந்து இருநூற்று இருபது கோடி எழுபத்து ஒரு இலட்சத்து அறுபத்து நான்காயிரத்து எழுநூற்று எண்பத்து ஐந்து ரூபா, ஐம்பத்தி எட்டு சதம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த நன்கொடையில் நூற்று தொண்ணூற்று ஒன்பது கோடி எழுபத்தைந்து இலட்சத்து அறுபத்தொன்பதாயிரத்து நானூற்று ஐம்பத்தி ஆறு ரூபாவும், ஐம்பத்தாறு சதமும் செலவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.
கொவிட் -19 மற்றும் அதனுடன் தொடர்புடைய சமூக நலத் திட்டங்களை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளுக்காக 2020 மார்ச் 23ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நிதியம் ஆரம்பிக்கப்பட்டது.
கொவிட்-19 தொற்றுநோயால் ஏற்படுகின்ற முக்கியமான சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்வதுடன், சுகாதார அவசர நிலைகளுக்கான இலங்கையின் நீண்ட கால தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்நிதியம் உருவாக்கப்பட்டது.
எனினும், "இதன் 90 சதவீதமான நிதிகள் இன்னும் செலவளிக்கப்படவில்லை" என தகவலறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக விடியல் இணையத்தளம் கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி வெளிக்கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் குறித்த நிதியத்தின் 90.50 சதவீதமான நிதி தற்போது செலவளிக்கப்பட்டு இருபது கோடி தொண்ணூற்று ஐந்து இலட்சத்து தொண்ணூற்று ஐயாயிரத்து மூன்னூற்று இருபத்தென்பது ரூபாவும் பூச்சியம் இரண்டு சதமும் மிகுதியாக காணப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்நிதியத்தினை முடிவுக்குக் கொண்டுவர கடந்த திங்கட்கிழமை (17) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கினங்க, குறித்த நிதியத்தின் வங்கிக் கணக்கில் ஒக்டோபர் 18ஆம் திகதி நிலுவையாகக் காணப்பட்ட இருபத்தி ஒரு கோடியே அறுபத்து எட்டு லட்சத்து எழுபத்தி ஏழாயிரத்து நானூற்று முப்பத்தொரு ரூபாவும் பூச்சியம் ஐந்து சதத்தினையும் ஜனாதிபதி நிதியத்தில் வைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்தது.
இலங்கை மக்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக குறித்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
ஜனாதிபதி நிதியத்தின் 10 கோடி ரூபா நன்கொடையின் ஊடாக நிறுவப்பட்ட 'இதுகம' நிதியத்திலிருந்து தற்போது சுமார் இருபது கோடி ரூபா நிதி ஜனாதிபதி நிதியத்திற்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த நிதியத்திற்காக இலங்கை வங்கியில் பேணப்பட்டு வந்த '85737373' என்ற உத்தியோகபூர்வ கணக்கு தற்போது செயற்படாமையின் காரணமாக குறித்த வங்கிக் கணக்கில் வைப்புக்கள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு நன்கொடையாளர்களிடம் கோரியுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)