நஷ்டத்தில் செயற்படும் முஸ்லிம் அரசியல் கட்சிகள்
கொழும்பில் 4,250,000 ரூபா பெறுமதியான 15.3 பேர்ஸ்சஸினைக் கொண்ட காணி மற்றும் கட்டிடமொன்றினை நிலையான சொத்தாக கொண்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ்
கணக்கீட்டு நியமம் பேணப்படாது முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸின் நிதி அறிக்கைகள் தயாரிப்பு
தேசிய காங்கிரஸினால் 13,952,000 ரூபா கடனாக செலுத்த வேண்டியுள்ளது. இதில் அதாஉல்லாவிற்கு 9.500,000 ரூபாவாகும்
இரு கட்சிகளின் நிதி அறிக்கைகள் ஒரே பட்டயக் கணக்காய்வாளர் நிறுவனத்தினால் கணக்காய்வு
தகவல் அறியும் விண்ணப்பத்தின் ஊடாக தகவல் வெளியானது
றிப்தி அலி
பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் சில அரசியல் கட்சிகள் வருமானத்தினை விட அதிக செலவு மேற்கொள்கின்ற விடயம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக வெளியாகியுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தள தகவல்களின் பிரகாரம் கடந்த டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 76 அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் முஸ்லிம் சமூகத்தினை அடிப்படையாக வைத்து எட்டு அரசியல் கட்சிகள் செயற்படுகின்றன.
மேற்படி எட்டு அரசியல் கட்சிகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு ஆகிய நான்கு அரசியல் கட்சிகளும் ஒன்பதாவது பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்தின் ஊடாக மேற்படி எட்டு கட்சிகளினதும் கடந்த ஐந்து வருட நிதி அறிக்கைகள் அண்மையில் கிடைக்கப்பெற்றன.
அங்கீகரிக்கப்பட்ட பட்டயக் கணக்காய்வாளர் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த நிதி அறிக்கைகள் மூலம் பல அரசியல் கட்சிகள் வருமானத்திலும் கூடிய செலவுகளை மேற்கொண்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவிடம் இருந்து கிடைக்கப் பெற்ற மேற்படி எட்டு அரசியல் கட்சிகளினதும் நிதி அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
இக்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களினால் வழங்கப்படும் நன்கொடை மாத்திரமே இந்தக் கட்சியின் பிரதான வருமானமாக காணப்படுகின்றது.
அதுபோன்று, சம்பளம், இணையத்தளம், உயர் பீடக் கூட்ட செலவுகள், நீர்க் கட்டணம், பத்திரிகை, நன்கொடை, தொலைபேசி, கட்டிட திருத்தச் செலவு போன்றன இக்கட்சியின் பிரதான செலவுகளாக காணப்படுகின்றன.
இல. 55/11, வெக்ஷொல் லேன், கொழும்பு – 02 எனும் முகவரியில் 4,250,000 ரூபா பெறுமதியான 15.3 பேர்ஸ்சஸினைக் கொண்ட காணி மற்றும் கட்டிடமொன்றினை நிலையான சொத்தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொண்டுள்ளது.
கடந்த 16.06.2014ஆம் திகதி முதல் 15.07.2019ஆம் திகதி வரையான காலப் பகுதியில் மேற்குறிப்பிட்ட பெறுமதியிலேயே இந்த நிலையான சொத்து காணப்படுகின்றது. இக்கட்சியின் கணக்கறிக்கையில் நிலையான சொத்தாக காட்டப்பட்டள்ள கட்டிடத்திற்கு இலங்கை கணக்கீட்டு நியமம் 16க்கு அமைய வருடாந்த பெறுமானத் தேய்வு எதும் மேற்கொள்ளப்படவில்லை.
எனினும் கட்டிட திருத்தச் செலவு வருடாந்தம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், இக்கட்சியின் அலுவலக தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் தொடர்பான எந்தத் தகவலும் நிதி அறிக்கையில் பிரகடணப்படுத்தப்படவில்லை.
கணக்கீட்டு சட்டக நடைமுறை (Conceptual frame work of Accountings) பிரகாரம் நிதி அறிக்கைகள் குறிப்பிட்ட ஒரு நிதியாண்டுக்கு மேற்கொள்ளப்பட வேண்டும். இலங்கையில் ஏப்ரல் 01ஆம் திகதி முதல் மார்ச் 31ஆம் திகதி வரை அல்லது ஜனவரி 1ஆம் திகதி முதல் - டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப் பகுதியில் மேற்கொள்ளப்படுவது வழமையாகும்.
எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கடந்த பல வருட நிதி அறிக்கைகள் வெவ்வேறு மாத காலப் பகுதியிலும், 12 மாதங்களை தாண்டியும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் மின்சாரக் கட்டணமாக 109,401.60 ரூபா செலுத்தப்பட்டுள்ள விடயம் கடந்த 2015ஆம் ஆண்டின் நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் அதற்குப் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட எந்தவொரு நிதி அறிக்கையிலும் மின்சாரக் கட்டணம் செலுத்தப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை. எனினும் நீர்க் கட்டணம் செலுத்தப்பட்டமை தொடர்பில் வருடாந்த நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை ஊழியர்களுக்கு வருடாந்தம் 700,000 ரூபாவிற்கு மேற்பட்ட சம்பளத்தினை வழங்கி வந்த இந்தக் கட்சி 2019 இல் அதை 472,400 ரூபாவாக குறைத்துள்ளது.
இதேவேளை, கடந்த 2017ஆம் ஆண்டு பாலமுனை பிரதேசேத்தில் இடம்பெற்ற கட்சியின் மாநாட்டு செலவு, வருடாந்தம் நடைபெறும் போராளர் மாநாட்டு செலவுகள் மற்றும் 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 2018 இல் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆகியவற்றின் போது இக்கட்சியினால் செலவளிக்கப்பட்ட நிதி தொடர்பான விபரங்கள் எதும் இந்த நிதி அறிக்கைகளில் குறிப்பிடப்படவில்லை.
அத்துடன் கட்சி அங்கத்தவர்களின் அங்கத்துவ கட்டணம் மற்றும் சந்தா தொடர்பான தகவல்கள் எதும் இக்கட்சியின் கடந்த ஐந்து வருட நிதி அறிக்கைகள் எதிலும் குறிப்பிடப்படவில்லை.
இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற இக்கட்சியின் பேராளர் மாநாட்டில் பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் உத்தியோகபூர்வமாக தெரிவுசெய்யப்பட்டார்.
எனினும் புதிய பொருளாளரிடம் எந்தவித பொறுப்புக்களும் இதுவரை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை என்ற விடயம் கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பிலும், கட்சியின் தற்போதைய நிதி நிலமைகள் தொடர்பிலும் ஆராயும் முகமாக சுமார் ஐந்து பேரைக் கொண்ட குழுவொன்று கட்சியின் உயர் பீடத்தினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய காங்கிரஸ்
இந்தக் கட்சியினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு 2018.10.23ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 29 பேரைக் கொண்ட 'உயர் சபை' என அழைக்கப்படும் நிர்வாகக் குழு உறுப்பினர் பட்டியலின் அடிப்படையில் இக்கட்சியில் தலைவர் என்ற பதவியொன்றில்லை.
செயலாளர் நாயகம் எனும் பதவியே முதலாவதாக பட்டியலிடப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா இந்தப் பதவியினை வகிக்கின்றார்.
அங்கத்தவர்களின் பங்களிப்பு மற்றும் நன்கொடை ஆகியனவே இந்தக் கட்சியின் வருமானமாகும். மேலுள்ள நிதி நிலமையின் பிரகாரம் கடந்த ஐந்து வருடங்களாக இந்தக் கட்சி வருமானத்தினை தாண்டிய செலவினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 2015.03.31ஆம் திகதி 914,757 ரூபாவாக காணப்பட்ட இந்த கட்சியின் நிலையான சொத்து, 2020.03.31ஆம் திகதி 44,911 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
தேசிய காங்கிரஸின் செயலளார் நாயகமான ஏ.எல்.எம். அதாஉல்லாவிற்கு 9.500,000 ரூபாவும் கட்சியின் தேர்தல் நிதிக் குழுவிற்கு 4,452,000 ரூபாவும் இக்கட்சியினால் செலுத்த வேண்டியுள்ளதாக 2020ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து வருட காலப் பகுதியில் நடைபெற்ற தேர்தல்களுக்காக இக்கட்சியினால் செலவளிக்கப்பட்ட நிதி விபரம்:
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடந்த 2021.03.16ஆம் திகதி இக்கட்சியினால் வழங்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் 27 பேரைக் கொண்ட அரசியல் அதிகார சபை காணப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், அலி சப்ரி றஹீம் மற்றும் எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோர் இந்த சபையின் உறுப்பினர்களாவர். எனினும், அலி சப்ரி றஹீம் மற்றும் எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோருக்கு கட்சியில் எந்தப் பதவிகளும் வழங்கப்படவில்லை. ஆனால் இஷாக் ரஹ்மான் இக்கட்சியின் நான் பிரதித் தலைவர்களில் ஒருவராவர்.
இந்தக் கட்சியின் 2015ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கை 2017.01.30 இலும், 2017, 2018ஆகிய ஆண்டுகளுக்கான நிதி அறிக்கை 14.01.2020 இலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சியின் பிரதான வருமானமாக அங்கத்துவ கட்டணம் மற்றும் நலன்விரும்பிகள் மற்றும் அங்கத்தவர்களின் பங்களிப்பு ஆகியன காணப்படுகின்றன.
இதில் பல இலட்சம் ரூபா பெறுமதியான நிதி நலன்விரும்பிகளினால் இந்தக் கட்சிக்கு பங்களிப்புச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்சியின் விளம்பரப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக 2018 இல் 659,854 ரூபாவும், 2017 இல் 879,800 ரூபாவும் செலவளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக ஊழியர் சம்பளமாக 2017 இல் 2,360,000 ரூபாவும் 2018 இல் 1,545,000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2015.12.31 இல் 402,020 ரூபா என மதிப்பிடப்பட்ட இக்;கட்சியின் நிலையான சொத்துக்களான அலுவலக உபகரணங்கள் 2018.12.31 இல் 952,020 ரூபாவாக அதிகரித்துள்ளது.
எனினும், இலங்கை கணக்கீட்டு நியமம் 16க்கு அமைய இந்த நிலையான சொத்துக்களுக்கு எந்தவித தேய்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. இதேவேளை, 2017 இல் 752,000 ரூபாவாகவும் 2018 இல் 420,000 ரூபாவாகவும் இக்கட்சியின் அலுவலகத்திற்கான வாடகையாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அதற்கு செலுத்தப்பட்ட நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் எந்தத் தரவுகளுமில்லை.
கடந்த 2015 இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலும், 2018 இல் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாட்டின் பல பிரதேசங்களிலும் இக்கட்சி தனித்து மயில் சின்னத்தில் களமிறங்கியது. குறித்த தேர்தல்களில் செலவளிக்கப்பட்ட நிதி தொடர்பான விபரங்கள் இக்கட்சியின் நிதி அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை.
முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான அலி சப்ரி றஹீம் பாராளுமன்றத்தில் இக்கட்சியினையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். இதனால் அவருக்கு பாராளுமன்றத்தில் கட்சி தலைவர் அந்தஸ்து வழங்கப்பட்டு எதிர்க்கட்சி தரப்பில் முன்வரிசை ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்சியின் பேராளர் மாநாடு கடந்த ஏப்ரல் 3ஆம் திகதி கண்டியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இக்கட்சியின் செயலாளர் நாயகமாக எம்.நயீமுல்லாஹ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தவிசாளராவார்.
இதேவேளை, இந்தக் கட்சியின் மூன்று இணைத் தவிசாளர்களில் ஒருவராக டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் மூத்த சகோதரரான இவர், குறிப்பிட்ட சில காலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன இணைந்து இந்தக் கட்சியின் 'திராசு' சின்னத்தின் கீழ் போட்டியிட்டது.
அது போன்று 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் நாட்டில் பல பாகங்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் இந்தக் கட்சியின் ஊடாக களமிறங்கினர்.
எவ்வாறாயினும், குறித்த இரண்டு தேர்தல்களிலும் இந்தக் கட்சியினால் செலவளிக்கப்பட்ட நிதி தொடர்பான எந்தத் தகவலும் நிதி அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
இந்தக் கட்சியின் வருமானம் நன்கொடையாகவே காணப்படுகின்றது. 2014ஆம் ஆண்டு இந்தக் கட்சியின் நிலையான சொத்தாக 77,300 ரூபாவும், பணமாக 33,086.00 ரூபாவும் காணப்பட்டது. எனினும் 2019ஆம் ஆண்டு இறுதியில் நிலையான சொத்துக்கள் எதுவுமின்றி பணமாக 26.025 ரூபா மாத்திரமே காணப்பட்டது.
இந்தக் கட்சியின் நிலையான சொத்துக்களான தளபாடங்கள் மற்றும் பிட்டிங்ஸ், அலுவலக உபகரணங்கள் மற்றும் கணணி ஆகியவற்றில் வருடாந்தம் 12.5 சதவீதம் தேய்மானம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, கணக்காய்வு கட்டணமான 12,000 ரூபா இக்கட்சியினால் செலுத்த வேண்டியுள்ளது.
ஜனநாயக ஐக்கிய முன்னணி
இந்தக் கட்சியின் செயலாளர் நாயகமாக இஸட். எம். ஹிதயாதுல்லாஹ் செயற்படுகின்றார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நசீர் அஹமடின் சகோதரராவர்.
இந்தக் கட்சியின் நிறைவேற்று சபை மற்றும் அரசியல் பீடம் ஆகியவற்றின் கூட்டம் கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்றுள்ளது. இதன்போது 15 பேரைக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கட்சி இறுதியாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டது. இந்தக் கட்சியின் பிரதான வருமானமாக சந்தாவும் நன்கொடையும் காணப்படுகின்றது.
கடந்த 2014 இல் நிலையான சொத்தாக 86,695 ரூபாவும், பணமாக 36,666 ரூபாவும் காணப்பட்ட இந்தக் கட்சியிடம் 2020ஆம் ஆண்டின் இறுதியில் நிலையான சொத்துக்கள் எதுவுமின்றி பணமாக 111,434 ரூபா மாத்திரமே காணப்பட்டது.
இந்தக் கட்சியின் நிலையான சொத்துக்களான தளபாடங்கள் மற்றும் பிட்டிங்ஸ், அலுவலக உபகரணங்கள் ஆகியவற்றினால் வருடாந்தம் 12.5 சதவீதம் தேய்மானம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, கணக்காய்வுக் கட்டணமான 24,000 ரூபா இக்கட்சியினால் செலுத்த வேண்டியுள்ளது என நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக ஐக்கிய முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளினதும் நிதி அறிக்கைகள் Haqquejim Associates எனும் பட்டயக் கணக்காய்வாளர் நிறுவனத்தினால் கடந்த ஐந்து வருடங்களாக கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தேசிய ஐக்கிய முன்னணி
ஆறு பேரை செயற்குழுவாகக் கொண்ட இந்தக் கட்சியின் தலைவராகவும் செயலாளர் நாயகமுமாகவும் மேல் மாகாண முன்னாள் ஆளுநரும், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அசாத் சாலி செயற்படுகின்றார்.
அவருடைய புதல்வியான ஆமினா சாலி இந்தக் கட்சியின் பிரதி பொருளாராக செயற்படுகின்றார். சுமார் நான்கு வருட கால பதிவினைக் கொண்ட இந்தக் கட்சியின் நிலையான சொத்தாக 31.12.2018ஆம் திகதி 98,000 ரூபாவும் பணமாக 72,500 ரூபாவும் காணப்படுகின்றது. இந்தக் கட்சியின் பிரதான வருமானம் சந்தா மற்றும் நன்கொடையாகும்.
ஐக்கிய சமாதான கூட்டமைப்பு
இக்கட்சியின் தவிசாளராக முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூதும், சிரேஷ்ட பிரதித் தலைவராக ஐ.எம்.என். மிப்லால் மௌலவியும் செயலாளர் நாயகமாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலியும் செயற்படுகின்றனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாட்டின் பல பாகங்களிலும் இக்கட்சி போட்டியிட்டது.
எனினும் அதற்கு செலவளிக்கப்பட்ட நிதி தொடர்பான விடயங்கள் எதுவும் இந்த கட்சியின் நிதி அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இக்கட்சியின் பிரதான வருமானமாக அங்கத்தவர் சந்தா மற்றும் நன்கொடை ஆகியன காணப்படுகின்றன.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
இக்கட்சியின் தவிசாளராக சிராஜ் மசூரும், பிரதி தவிசாளராக எம்.எம். அப்துல் ரஹ்மானும், செயலாளர் நாயகமாக ஏ.எல்.எம். சபீலும் செயற்படுகின்றனர். இதன் தலைமைத்துவ சபையில் 17 உறுப்பினர்களும், முகாமைத்துவ சபையில் ஏழு உறுப்பினர்களும், தேசிய செயற்குழுவில் 25 பேரும் காணப்படுகின்றனர்.
உறுப்பினர் சந்தா, நன்கொடை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு ஆகியன வருமானமாகக் காணப்படுகின்றன.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இக்கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து களமிறங்கியது. இதில் இக்கட்சியின் உறுப்பினர்கள் இருவர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் 17,105,000 ரூபா பொதுத் தேர்தல் நிதி சேகரிப்பிற்கு செலவளிக்கப்பட்டதாக நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கட்சி கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாட்டின் பல பாகங்களில் போட்டியிட்டு ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.
இந்தக் கட்சியின் 2017, 2018, 2019ஆகிய ஆண்டுகளுக்கான நிதி அறிக்கைகள் 2019ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, நிர்வாக உறுப்பினர்களின் போக்குவரத்திற்காக 329,575 செலவிடப்பட்டுள்ளமை 2020ஆம் ஆண்டு நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2016/17ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஊடகவியலாளர் மாநாடுகள் நடத்துவதற்காக இக்கட்சியினால் 360,785 ரூபா செலவளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இலவச புத்தக விநியோகம் என்பவற்றிற்கு இக்கட்சியினால் 2,227,275 ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)