வட பிராந்திய கண்ணி வெடி அகற்றல் செயற்பாடுகளுக்கு ஜப்பான் உதவி
இலங்கையின் வட பிராந்தியத்தில் மனித நேய கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்காக HALO Trust அமைப்புக்கு 625,698 அமெரிக்க டொலர்கள் (அண்ணளவாக ரூ. 124 மில்லியன்) வழங்க ஜப்பானிய அரசாங்கம் முன்வந்துள்ளது.
இந்த நன்கொடைக்கான ஒப்பந்தம் கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் சுகியாமா அகிரா மற்றும் HALO Trust அமைப்பின் பிராந்தியத்தின் தலைமை அதிகாரி பெலின்டா வோஸ் ஆகியோருக்கிடையே 2021 ஒக்டோபர் 28 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.
உலகின் மாபெரும் மற்றும் பழைய மனித நேய கண்ணி வெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்றான HALO Trust, 2002 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் பாதிக்கப்பட்ட காணியின் 36.8km 2 பகுதியை விடுவித்துள்ளது.
இதன் 25% அதிகமான பகுதியை விடுவிப்பதற்கு ஜப்பான் உதவிகளை வழங்கியிருந்தது. இலங்கை அரசாங்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விடுவித்து, தற்காலிகமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உதவுவதற்காக முன்னெடுக்கப்படும் பணிகளுக்கு இந்தத் தொகை உதவியாக அமைந்திருக்கும்.
இதனூடாக கிளிநொச்சி, முல்லைத் தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களைச் சேர்ந்த 12,500 பேருக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக உதவும் வகையில் இந்தப் பணிகள் அமைந்திருக்கும்.
2002ஆம் ஆண்டு முதல் இலங்கையில் முன்னெடுக்கப்படும் கண்ணி வெடி அகற்றும் பணிகளில் பாரிய பங்களிப்பு வழங்கியிருந்த நாடுகளில் ஒன்றாக ஜப்பான் அமைந்துள்ளது.
இலங்கையில் கண்ணி வெடி அகற்றும் பணிகளை முன்னெடுக்கும் நான்கு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு உதவும் ஒரே நாடாகவும் திகழ்கின்றது. 40.1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகையை தனது Grant Assistance for Grassroots Human Security Project (GGP) திட்டத்தினூடாக இந்த நடவடிக்கைகளுக்காக வழங்கியுள்ளது.
இந்த நன்கொடை வழங்கப்பட்டமை தொடர்பில் பெலின்டா வோஸ் கருத்துத் தெரிவிக்கையில்,
“HALO Trust என்பது ஜப்பானிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் தொடர்ச்சியான ஆதரவு தொடர்பில் திருப்தியும், மகிழ்ச்சியும் அடைகின்றது. இலங்கையில் பதினெட்டு வருட காலமாக கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு வழங்கப்படும் உதவிகளினூடாக, இதுவரையில் 9.31 சதுர கிலோமீற்றர் பகுதி பாதுகாப்பான பிரதேசமாக விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளினூடாக சுமார் 98,000 கண்ணி வெடிகள் மற்றும் இதர வெடி பொருட்கள் அகற்றப்பட்டுள்ளதுடன், அவற்றினால் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாது.
இவற்றை அகற்றியுள்ளதனூடாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தமது வசிப்பிடப் பகுதிகளுக்கு மீளத் திரும்பி, தமது வாழ்வாதார நடவடிக்கைகளை வழமை போல முன்னெடுப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானின் நிதி உதவியில் HALO அமைப்பினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களினூடாக ஏற்கனவே 210,000 அதிகமான மக்களுக்கு அனுகூலம் கிடைத்துள்ளது. இதற்கு மேலதிகமாக, நூற்றுக் கணக்கான ஆண், பெண் இருபாலாருக்கும் நிரந்தர வருமானம் கிடைப்பதற்கும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
Comments (0)
Facebook Comments (0)