காலநிலை மாற்றத்தை தணிக்க ‘உயிர்ப்பாக செயற்படும் குடிமக்கள்’ சமூக நடவடிக்கை திருமலையில் நிறைவு
Muslim Aid உடன் இணைந்து இலங்கை British Council, திருகோணமலை மாவட்டத்தில் காலநிலை மாற்றம் தொடர்பில் உயிர்ப்பாக செயற்படும் குடிமக்கள் எனும் முயற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இந்த ஒட்டுமொத்த திட்டமும், தற்போது உலக மக்களைப் பாதிக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றான காலநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இளைஞர்களை அணிதிரட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஆறு தனித்துவமான திட்டங்களை உள்ளடக்கியதாகும்.
'உயிர்ப்பாக செயற்படும் குடிமக்கள்' முயற்சியின் கீழான ஆறு திட்டங்கள்: கிண்ணியா காலநிலை மீளெழுச்சி, பாரிஜாதம், மூதூர் பாதுகாவலர்கள், Tiny Tide, வைர மாதிரிக் கிராமம், கண்டல் தாவரங்கள் (Kinniya Climate Resilience, Parijatham, Muthur Guardians, Tiny Tide, Diamond Model Village and Man Grow)
கிண்ணியா காலநிலை மீளெழுச்சித் திட்டமானது, காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் திருகோணமலை இளைஞர்கள் மத்தியில் சமூகத் தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.
அந்த வகையில், கிண்ணியா அல் இர்பான் மகா வித்தியாலய சிரேஷ்ட மாணவர்களை இலக்காகக் கொண்ட, காலநிலை மாற்றம் மற்றும் மீளெழுச்சி தொடர்பான முக்கியமான பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் ஒரு நாள் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொற்கேணி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரிஜாதம் திட்டமானது, வறுமை ஒழிப்பு மற்றும் சூழல் மாற்றத்தை மையமாகக் கொண்டிருந்தது. இந்த முன்முயற்சியின் ஒரு தன்னார்வலர் ஒருவர் தெரிவிக்கையில்,
“கிராம மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வீட்டுத்தோட்டம் மற்றும் விவசாயத்தை நம்பியிருக்கிறார்கள். அதிக விளைச்சலைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அழிவுகரமான அளவில் இரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சேதன வேளாண்மை நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காகவும், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை சமூகத்தினரிடையே ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்
'மூதூர் பாதுகாவலர்கள்', மூதூர் நடுத்தீவில் உள்ள நீர்நிலைகளில் உள்ள பாசிப் படிவுகள் மற்றும் அசுத்தங்களை அகற்றுவதற்காக 'சிரமதான' (சுத்தம் செய்தல்) நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ஒரு பங்கேற்பாளரின் கருத்தின்படி, இப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாசடைவின் விளைவாக நைதரசன் மற்றும் பொஸ்பரசு ஆகியன அதிகளவில் உருவாகியுள்ளதால் பாசிகள் ஆபத்தான விகிதத்தில் பரவியுள்ளன. பாசிகள் தீங்கு விளைவிக்கும் நச்சுகளை உருவாக்குகின்றன, அவை 'இறந்த வெற்று மண்டலங்களை' உருவாக்குவதுடன், சுத்தமான தண்ணீரைச் சார்ந்திருக்கும் தொழில்களையும் அது பாதிக்கின்றன.
கடல் மாசடைவு மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை குறைக்கும் நோக்கத்தைக் கொண்ட Tidy Tide (சுத்தமான அலைகள்) திட்டமானது, திருகோணமலை நகர சபை, தன்னார்வ தொண்டர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் ஆதரவுடன் கடற்கரையை சுத்தப்படுத்துதல் மற்றும் கழிவுத் தொட்டிகளை நிறுவுதல் ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
வைர மாதிரிக் கிராமம் (Diamond Model Village) திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்தின் மூதூரில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 20 குடும்பங்கள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட ஊக்குவிக்கப்பட்டன.
இந்த திட்டமானது பசுமை இல்லத்தை கட்டமைத்தல், காடுகளை வளர்த்தல், இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து தொழில் வல்லுநர்கள் மூலம் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியிருந்தது.
ஆறாவது திட்டமான கண்டல் தாரங்கள் திட்டம் மூலம், கிண்ணியாவில் அடிக்கடி ஏற்படும் இயற்கை அனர்த்தங்களை தவிர்க்கும் வகையில், கரையோரங்களில் கண்டல் தாவரங்களை நடுவதனை அடிப்படையாகக் கொண்டதாகும்.
கண்டல் தாவரங்கள் அடர்த்தியான சூழல் தொகுதிகளை உருவாக்குகின்றன. அவை காற்று, புயல் எழுதல் உள்ளிட்ட ஏனைய இயற்கை பேரழிவுகளுக்கு எதிரான தடைச் சுவர்களாக அல்லது தடுப்பாக செயற்படுகின்றன.
இதன் ஒரு பங்கேற்பாளரான பஹ்மீதா ஹனீப் தெரிவிக்கையில், "காலநிலை மாற்றம் ஒரு உலகளாவிய நெருக்கடியாகும். இது கலாசார ரீதியான உரையாடல்கள் மூலம் மட்டுமே சிறந்த பலனுடைய வகையில் தீர்க்க முடியும். இந்தத் திட்டம் சமூகங்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்த உதவியது. அத்துடன் ஆறு திட்டங்களை நிர்வகிப்பதற்கும், அதிலுள்ள சவால்களை குறைப்பதற்கும், சமாளிக்கவும் உள்ளூர்வாசிகள் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றுவார்கள் என்று நாம் நம்புகிறோம்" என்றார்.
காலநிலை மாற்றத்தை சமாளிப்பது இந்த முயற்சியின் முதன்மை நோக்கமாக இருந்தபோதும், பல்வேறு இன மற்றும் மத சமூகங்களுக்கிடையே சமூக ஒற்றுமையை மேம்படுத்தவும் இது உதவியது.
திருகோணமலை மாவட்டத்தில் இத்திட்டத்தின் வரவேற்பு மற்றும் விளைவுகள் தொடர்பில் ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனவே இயல்பு நிலை திரும்பியவுடன் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இதனை விரிவுபடுத்த அவர்கள் உத்தேசித்துள்ளனர்.
Comments (0)
Facebook Comments (0)