முதல் முறையாக மில்லியன் கணக்கான உலக இசை பிரியர்களின் மனதை வென்ற இலங்கைத் தமிழ்ப் பாடல்
ரஞ்சன் அருண்பிரசாத்
இந்தியத் தமிழ் சினிமாவுடன், ஒப்பிடுகையில், இலங்கையின் சினிமா சார்ந்த கலைத் துறையானது, பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகிறது.
எனினும், இந்த சவால்களையும் தகர்த்தெரியும் விதமாக வெற்றி பெறுகிறது ''ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்" பாடல். இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள பொத்துவில் பகுதியைச் சேர்ந்த அஸ்மினின் வரிகளில் உருவான இந்த பாடல், சமூக வலைத்தளங்கள் மற்றும் பிரதான ஊடகங்களில் இன்று அதிகளவில் ஒளிபரப்பாகி, பகிரப்படும் ஒரு பாடலாக காணப்படுகின்றது.
யூடியூப் வலைத்தளத்தில் தரவேற்றப்பட்ட இந்த பாடல், இரு வாரங்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது. இலங்கையின் தமிழ் கலைத்துறைக்கு குறுகிய காலத்தில் 5 மில்லியன் பார்வையாளர்கள் என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு எண்ணிக்கை.
தமிழ் மொழியில் வெளியாகியுள்ள இந்த பாடலை, இசை அமைத்து, பாடியவர்கள், இலங்கையை சேர்ந்த சிங்களவர்கள் என்பது விசேட அம்சமாகும்.
தமிழ் மற்றும் சிங்களவர்கள் இணைந்து, இவ்வாறான சாதனையை படைத்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். சிங்கள இசைத்துறையில் புகழ்பெற்ற விண்டி குணதிலக்கவின் குரலில், சனுக்க விக்ரமசிங்கவின் இசையில் இந்த பாடல் உருவாகியுள்ளது.
இந்த பாடல் தொடர்பில் பாடலாசிரியர் பொத்துவில அஸ்மின், பிபிசி தமிழுக்கு இவ்வாறு கருத்துரைத்தார்.
"இலங்கையில் இருக்கக்கூடிய தமிழ் பாடல்கள் உலகளவில் முதல் முதலாக எல்லோரும் பாடுகின்ற பாடலாக கவனம் பெற்றிருக்கின்றது. இலங்கையில் இருக்கின்ற கலைஞர்களுக்கு ஒரு நம்பிக்கையை தரக்கூடிய விடயமாக நான் இதனை பார்க்கின்றேன்.
இனிவரும் காலங்களில் இலங்கை தமிழ் பாடலுக்கும் உலகளவில் வரவேற்பு கிடைக்கும் என்று நான் நம்புகின்றேன். இலங்கையில் சந்தர்ப்பம் கிடைக்காமல் இருக்கின்ற பல தமிழ் கலைஞர்களுக்கு, நம்பிக்கையை ஏற்படுத்தும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.
எங்களைப் போன்று வளர்ந்து வரும் கலைஞர்களை ஆதரியுங்கள். எதிர்காலத்தில் நல்ல பாடல்களை தருவோம் என்று நம்புகிறோம்." என அஸ்மின் தெரிவிக்கிறார்.
இலங்கையைச் சேர்ந்த பாடலாசிரியர் அஸ்மின் தற்போது இந்திய தமிழ் சினிமாவில் தடம் பதித்துள்ளார். விஜய் அன்டனியின் நான் திரைப்படத்தில் இடம்பெற்ற "தப்பெல்லாம் தப்பே இல்லை" என்ற பாடலின் ஊடாக அஸ்மின் தென்னிந்திய தமிழ் சினிமாவில் 2012ஆம் ஆண்டு தடம் பதித்துள்ளார்.
தென்னிந்தியாவில் உருவாகிய சுமார் 25 திரைப்படங்களுக்கு அஸ்மின் பாடலாசிரியராக கடமையாற்றியுள்ளார். தமிழ் சினிமாவிற்கு வெளியிலும், அஸ்மின் பல பாடல்களை எழுதி, மக்களின் வரவேற்புகளை பெற்றுக்கொண்டார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கான இரங்கல் பாடலை, பொத்துவில் அஸ்மின் எழுதியிருந்தார். இந்த நிலையில், "ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்" என்ற பாடல் எவ்வாறு உருவானது என்பதற்கும் பொத்துவில் அஸ்மின் பதிலளித்தார்.
"பிரபல பாடகி விண்டி குணதிலக்கவிற்கு பாடலொன்றை எழுதுவதற்காக, இசையமைப்பாளர் சனுக்க விக்ரமசிங்க என்னை தொடர்புக் கொண்டார். அவர்களை நான் நேரிலே சந்தித்தது இல்லை.
நான் தமிழகத்திலிருந்து தமிழ் சினிமாவிலே முழு நேர பாடலாசிரியராக பணிபுரிந்து வருகிறேன். அவர்கள் தொலைபேசி மூலமாக என்னை தொடர்பு கொண்டார்கள்.
வாட்ஸ் அப்பில் இசைத் துணுக்கை அனுப்பி வைத்திருந்தார்கள். பெண்களுடைய காதல் தோல்வியின் வலியை சொல்கின்ற பாடலாக தமிழில் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.
அந்த பாடலை நான் தமிழ் நாட்டில் இருந்து எழுதினேன். அந்த பாடல் இன்று மக்கள் இடையே பிரபல பாடலாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் சினிமாவை பொருத்தவரை ஆண்களுக்கான காதல் தோல்வி பாடல்கள் அதிகளவில் இருக்கின்றன.
ஆனால் பெண்களுடைய காதல் தோல்வியை அவர்களுடைய உணர்வுகளை பிரதிபலிக்கின்ற பாடல்கள் மிகவும் அரிதாகவே இருக்கின்ற காலக் கட்டத்தில், இந்த பாடல் பெண்களுடைய மன உணர்வை, அவர்களுடைய வலியை, அவர்களுடைய கவலையை சொல்கின்ற பாடலாக இருக்கின்றமையினால், உலகளவில் வாழும் பெண்கள் இந்த பாடலை ரசிக்கின்றார்கள் என நினைக்கின்றேன்." என அவர் மேலும் கூறினார்.
இந்த பாடல் தொடர்பில் பாடகி, விண்டி குணதிலக்கவும், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.
"ஐயோ சாமி" பாடலுக்கு தற்போது நிறைய வரவேற்பு கிடைத்துள்ளது. அது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எனது மூன்றாவது வெற்றி பாடல். எனது முதலாவது தமிழ் பாடல் இது. இது எனக்கு பாரிய சவாலாக அமைந்தது.
இதற்கான இசையை சனுக்க விக்ரமசிங்க அமைத்திருந்தார். பாடல் வரிகளை பொத்துவில் அஸ்மின் எழுதியிருந்தார். இந்த பாடலில் உச்சரிப்பை சரியாக பாடுவதற்கு அஸ்மின் பாரிய ஒத்துழைப்புக்களை எனக்கு வழங்கியிருந்தார்.
இந்த பாடலை எவ்வாறு பாட வேண்டும் என்பது தொடர்பில் குரல் பதிவுகளை அவர் குறுந்தகவல் மூலம் அனுப்பினார். அவரது குரல் பதிவுகளை கேட்டே, நான் வரிகளை படித்தேன்.
இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்புக்கு உண்மையாகவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது இலகுவான விடயம் இல்லை. அது என்னை மகிழ்வித்துள்ளது" என விண்டி குணதிலக்க குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, இந்த பாடல் இயற்றப்பட்டு, இன்று உலகளவில் வரவேற்பை பெற்றுள்ளமை தொடர்பில், இசையமைப்பாளர் சனுக்க விக்ரமசிங்க, பிபிசி தமிழுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
"இந்த பாடல் எதேச்சையாகவே உருவானது. விண்டிக்காக வேறொரு பாடலை தயாரித்துக் கொண்டிருந்த தருணத்தில், இசை பலகையில் திடீரென ஒரு இசையை கேட்க கூடியதாக இருந்தது. அதன் பின்னரே இந்த பாடலை தயாரிக்க நான் நினைத்தேன்.
இந்த இசைக்கு வேறொரு மொழியில், அதாவது இந்தி அல்லது தமிழ் மொழிப் பாடல் சரியாக இருக்கும் என நினைத்தேன். அதன்பின்னர் பொத்துவில் அஸ்மின் நினைவிற்கு வந்தார்.
அவர் எமக்கு பாரிய அளவில் உதவிகளை வழங்கினார். குறிப்பாக உச்சரிப்புக்களை சரி செய்வதற்கு உதவி செய்தார். பாடல் மிகவும் அழகாக வந்துள்ளது. நாம் நினைத்துப் பார்க்காத அளவுக்கு இந்தப் பாடல் வரவேற்பை பெற்றுக்கொண்டுள்ளது.
இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வேறொரு மொழியில் பாடலை தயாரித்தது இதுவே முதல் தடவை. அதேபோன்று, வேறொரு ரசிகர்களுக்கு இந்தப் பாடலை நாம் வழங்கியுள்ளோம். இந்த பாடலைப் பார்த்து - சிங்களம், தமிழ், முஸ்லிம், இந்தியர்கள், பங்களதேஷ் உள்ளிட்ட பல நாடுகள், பல மக்கள், பல இனத்தவர்கள் எமக்கு ஆதரவை வழங்கினார்கள்.
யூடியூபில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களை இந்த பாடல் எட்டியுள்ளது. பிளே லிஸ்ட் நான்கில் முதலிடத்தில் இந்த பாடல் உள்ளது. இலங்கையின் டாப் 100 பட்டியலில் ஆப்பிள் மியூசிக்கில் முன்னிலையில் உள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது" என இசையமைப்பாளர் சனுக்க விக்ரமசிங்க தெரிவிக்கிறார்.
பிபிசி தமிழ்
Comments (0)
Facebook Comments (0)