சுமித்திரா பீரிஸ் – உலக பிரசித்தி பெற்ற இலங்கைப் பெண்
உதித தேவப்பிரிய
சுமித்ரா பீரிஸ் கடந்த 19 ஜனவரி அன்று காலமானார். இலங்கை சினிமாவின் கடைசி சிறந்த இயக்குனர்களில் ஒருவரான சுமித்ரா, இலங்கை நாட்டின் சில இறுதி சர்வதேச பிரமுகர்களில் ஒருவராகவும் இருந்தார்.
1960களில் உதவி இயக்குனராகவும் படத்தொகுப்பாளராகவும் தனது வாழ்க்கையை ஆரம்பித்த அவர், 10 திரைப்படங்களை இயக்கினார். அவரது மிகச் சமீபத்திய படைப்பு 2018 இல் வெளிவந்தது; அவர் இன்னும் சிலவற்றை திட்டமிட்டிருந்தார்.
சுமித்ராவின் திரைப்படங்கள், இலங்கையிலும், அதன் நீட்டிப்பாக, தெற்காசியாவிலும் ஒரு பெண்ணாக இருப்பதன் வேதனைகள், அதன் அனைத்து நுணுக்கங்கள் மற்றும் சிக்கலான தன்மைகளை படம்பிடித்துக் காட்டுகின்றன.
அவர்கள் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான பிளவுகளில் மட்டுமல்ல, குழந்தைப் பருவத்தின் அப்பாவித்தனம் மற்றும் வாலிபக் காதலின் வேதனைகளிலும் கூட வாழ்கிறார்கள். ஆணாதிக்க சமூகமாக இருந்த, இன்னமும் அதிகமாக இருக்கின்ற சமூகத்தில் பெண்ணின் இடத்தையே அவர்கள் மையமாகக் கொண்டுள்ளனர்.
அவரது முதல் படமான கெஹேனு லமாய் (பெண் பிள்ளை, 1978), இந்த எண்ணக்கருக்களை குறிப்பிடத்தக்க வகையில் நிறுவுகிறது. கதையின் மையக்கரு ஒரு ஏழை கிராமத்து பெண்ணான, குசும், சிறந்த வாழ்க்கைக்கான லட்சியங்களைக் கொண்டவளாவாள்.
நடுவழியில், அவள் தன் மச்சானாக இருக்கும் ஒரு வசதியான சகவகுப்பு தோழனைக் காதலிக்கிறாள். அவர்களின் விவகாரம் கண்டறியப்பட்டதன் மூலம் உச்சக்கட்டத்தை அடையும் தொடர்ச்சியான சம்பவங்களுக்குப் பிறகு, குசுமின் நிலைமை மோசமடையத் தொடங்குகிறது.
படத்தின் முடிவில், அவளுடைய மச்சான் அவளைக் கைவிட்டு கிராமத்தை விட்டு வெளியேறுகிறான். பரீட்சைகளில் தேர்ச்சி பெற்று உள்ளூர் பல்கலைக்கழகத்தில் இடம் பெறத் தவறிய பிறகு, அன்பற்ற வறுமையின் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்து, அவள் அழுதுகொண்டே ஒரு கண்ணாடியை வெறித்துப் பார்க்கிறாள் - அங்கு ஒரு பெரிய கேள்விக்குறி அவளுக்குப் பின்னால் இருக்கிறது.
பாரம்பரிய, கிராமப்புற உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், சுமித்ரா அவ்வாறான பெண்களுடன் வலுவாக அடையாளம் காணப்பட்டார். சுமித்ரா குணவர்தனவாக 24 மார்ச் 1935 இல் பயகல கிராமத்தில் பிறந்ததுடன் நாட்டின் தலைநகரான கொழும்பில் இருந்து சுமார் 30 மைல் தொலைவில் உள்ள அவிசாவளை எனும் கிராமத்தில் வளர்ந்தார்.
அவரது தாயார் ஒரு வசதியான சாராய வடிசாலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், அவரது தந்தை தீவிர அரசியல் ஆர்வலர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். அவரது தந்தைவழி மாமாக்கள் இருவர் முன்னணி சோசலிச அரசியல்வாதிகளாக ஆனார்கள்.
அவர்களில் ஒருவர் இலங்கையில் "சோசலிசத்தின் தந்தை" என்ற அடைமொழியைப் பெற்ற பிலிப் குணவர்தன ஆவார். இவை அனைத்தும் சிறுவயதிலிருந்தே சுமித்ராவின் அரசியல் உணர்வை வடிவமைத்தன. பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற ஒரு மாதத்திற்குப் பிறகு, அவர் 13 வயதை அடைந்த பிறகு, கொழும்பில் கல்வி கற்பதற்காக அனுப்பப்பட்டார்.
இரண்டு வருடங்கள் கழித்து அவருடைய அம்மா இறந்துவிட்டார். இழப்பால் பெருந் துயருக்கு ஆளான அந்நேரத்தில் அவளுடன் மிகவும் நெருங்கிய உடன்பிறப்பாக இருந்த அவரது மூத்த சகோதரரான காமினி, "எல்லாவற்றையும் எங்களிடம் விட்டுவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார்".
சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சுமித்திராவுடன் தொடர்பு கொண்டார்: அவர் ஐரோப்பாவில் இருந்ததுடன், சுமித்திராவை தன்னுடன் சேர்த்துக்கொள்ள விரும்பினார். “நான் உடனே ஒப்புக்கொண்டேன். கொஞ்சம் பணத்தைச் சேகரித்த பிறகு, நான் P&O லைனர் கப்பலில் ஏறி 1956-ல் நானாக மத்தியதரைக் கடலுக்குச் சென்றேன். என் தந்தை எனக்கு ஆசீர்வாதங்களை வழங்கினார்” என்று சுமித்திரா கூறினார். அப்போது அவருக்கு 21 வயது நிறைவடையவில்லை.
சுமித்ரா தனது சகோதரரை இத்தாலியில் உள்ள நேபிள்ஸில் சந்தித்தார், அங்கிருந்து அவர்கள் மால்டாவிற்கு சென்றனர். அவரது சகோதரர் அங்கு ஒரு படகை நங்கூரமிட்டு நிறுத்தி வைத்து, சில நண்பர்களுடன் போஹேமியன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார், அவர்களில் ஒருவர் அமெரிக்காவில் உள்ள மயோ கிளினிக்கின் உரிமையாளரின் மகள் மஃபின் மாயோவை மணந்த கடற்படை கட்டிடக் கலைஞரான கிளாட் கிராஃப் ஆவார்.
மத்திய தரைக்கடல் முழுவதும் நங்கூரமிட்டு, "நாங்கள் சந்தித்த மக்களிலிருந்து நாங்கள் உண்ணும் உணவு வரை" தனது புதிய வாழ்க்கையில் மகிழ்ச்சியடைந்தார். Saint-Tropez இல், பிரிஜிட் பார்டோட் மற்றும் ரோஜர் வாடிம் நடித்த கடவுள் பெண்ணை உருவாக்கினார் (And God Created Woman) (1956) படப்பிடிப்பை பார்க்கச் சென்றார்.
படப்பிடிப்பைப் பார்ப்பது அதுவே முதல் முறையாகும். தொடர்ச்சியான சாகசங்கள் மற்றும் இழப்புக்களுக்குப் பிறகு, அவரது சகோதரர் இலங்கைக்குத் திரும்பிய பின்னர், சுமித்ரா லொசானிலும் பின்னர் பாரிஸிலும் தனது தனிமையை உணர்ந்தார்.
பாரிஸில் உள்ள சிலோன் இராஜதந்திரிகளுக்கான இடத்தில் இலங்கை பிரான்சில் ஒரு தனி இராஜதந்திர அலுவலகத்தை மட்டுமே நிறுவியிருந்ததுடன் அவர் சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி இந்திய திரையுலகில் இருந்த அதே காலக்கட்டத்தில் இலங்கை சினிமாவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய ரேகாவை (1956) தயாரித்த தனது வருங்கால கணவரான லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸை (1919-2018) சந்தித்தார்.
சுமித்ராவை இங்கிலாந்துக்கு செல்லுமாறு லெஸ்டர் அறிவுறுத்தினார். சுமித்திரா அதனை மேற்கொண்டதுடன் பிரிக்ஸ்டனில் உள்ள லண்டன் திரைப்பட நுட்ப பாடசாலையில் (LSFT) சேர்ந்தார். அங்கு, அவர் தனது வகுப்பு தோழர்கள் இருவருடனும் நட்பு கொண்டார், அவர் பெரும்பாலும் வெள்ளை, நடுத்தர வர்க்க ஆண்கள் மற்றும் அவரது ஆசிரியர்களை கொண்ட வகுப்பில் ஒரே பெண் மாணவியாவார் .
அவரது ஆசிரியர்களில் லிண்ட்சே ஆண்டர்சன் இருந்தார், அவர் 1994 இல் இறக்கும் வரை அவருடன் நண்பராக இருந்தார். சுமித்ரா தனது படிப்பில் சிறந்து விளங்கினார்: அவர் திரைப்படத்துறையை நோக்கி தூண்டப்படுவதை கண்டார். ஆனாலும் வேலை தேடுவது சுலபமாக இருக்கவில்லை.
உப தலைப்பு வழங்கும் நிறுவனமான எலிசபெத் மாய்-ஹாரிஸின் கதவுகளைத் தட்டிய பிறகுதான் அவருக்கு வேலை கிடைத்தது; பிரெஞ்சு மொழியில் அவரது சரளமான தன்மை, தன் பணியைச் செய்ய உதவியது என்று அவர் நினைவு கூர்ந்தார்.
சிறிது காலத்திற்குப் பிறகு, அவர் தாய்நாட்டுக்கு செல்லும் உணர்வு மேலோங்குவதை உணர ஆரம்பித்தார். இதனால் அவர் இலங்கைக்கு திரும்பினார், அங்கு அவர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் இயக்கிய ஒரு திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
நான்கு ஆண்டுகளில் அந்தப் படம் சந்தேசயா (செய்தி, 1960), வெளியாகிய பின்பு, சுமித்ரா அவரை திருமணம் செய்து கொள்ள இருந்தார். அவரது கணவரின் பல திரைப்படங்கள் உட்பட, படத்தொகுப்பாளராக தொழிற்துறையில் முன்னேறிய சுமித்ரா, 1978 இல் கெஹனு லமாய் என்ற தனது படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இத்திரைப்படம் இலங்கையில் மட்டுமன்றி உலகளவிலும் சிறந்த திரைப்படமாக வெற்றி பெற்றது. இது குறிப்பாக பிரிட்டிஷ் பத்திரிகைகளிடமிருந்து நேர்மறையான பதிலைப் பெற்றது:, The Times பத்திரிகையின் டேவிட் ராபின்சன் அதன் "முழுமையான பெண் உணர்வுக்கான" உதாரணமாக அதைப் பாராட்டினார். இது லண்டன் மற்றும் கார்தேஜ், துனிசியாவின் மிகவும் நேர்மறையான வரவேற்புகளுடன் திரையிடப்பட்டது.
கெஹெனு லமாயியின் வெற்றி, மேலும் ஒன்பது திரைப்படங்களைத் தயாரிப்பதற்கு அவருக்குத் தைரியம் அளித்ததுடன், அவற்றில் ஒன்றை தவிர மற்றய அனைத்தும் பெண் கதாநாயகிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டன:
கங்கா அத்தர (நதியின் கரையில், 1980), யஹலு யெஹெலி (நண்பர்கள், 1982), மாயா (1984), சாகர ஜலயா மதி ஹந்துவா ஒப சண்டா (மணலில் எழுதப்பட்ட கடிதம், 1988), லோகு துவா (மூத்த மகள், 1996), துவாட மவாகா மிச (தனியான அம்மா, 1997), சக்மன் மாலுவா (தோட்டம், 2003), யஹலுவோ (நண்பர்கள், 2007, இது ஓர் விதிவிலக்காகும், இதில் ஒரு இளைஞசனை மையப்படுத்தியதுடன், இனங்களுக்கு இடையேயான திருமணத்தின் கதை) மற்றும் வைஷ்ணவி (தெய்வம், 2018).
சாகர ஜலயா மதி ஹந்துவா ஒப சண்டா (சில நேரங்களில் சாகர ஜலயா என சுருக்கப்பட்டது), பொதுவாக அவரது சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. ஒரு சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு, ஒரு கிராமத்துப் பெண்ணின் (இலங்கையின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவரான ஸ்வர்ணா மல்லவாராச்சி நடித்தார்) கணவர், நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்பவர், மரத்திலிருந்து விழுந்து இறந்துவிடுகிறார்.
முழுக்கதையும் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு தாய் ஏன் எல்லோரிடமும் கோபப்படுகிறாள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அவளது மகனின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது. அம்மாவை விடுவிக்க மாமாவின் கடையில் தன்னை வேலைக்கு அமர்த்தும்படிகேட்டு சிறுவன் தன் மாமாவுக்கு மணலில் ஒரு கற்பனைக் கடிதம் எழுதுவதுடன், படம் முடிகிறது. இலங்கையில் கடுமையான கொளுத்தும் வெய்யிலிலும், கிராம வாழ்க்கையின் கொடூரமான சித்தரிப்பிலும், அது அன்றும் இன்றும் மிஞ்சாமல் உள்ளது.
திரைப்படத்தில் தனது பணிக்கு மேலதிகமாக, சுமித்திரா தொலைக்காட்சியிலும் தனது தடம் பதித்தார், 1970 களின் முற்பகுதியில் தனது தாய்நாட்டிற்கு வருவதற்கு கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்பு பிரான்சில் ஊடகத்துறையையும் கற்றிருந்தார். அவர் 1995 முதல் 1999 வரை பாரிஸுக்குப் புறப்படுவதற்கு முன்பாக, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கான அதிவிசேட மற்றும் அதிகாரம்பெற்ற தூதுவராக பல உத்தியோகபூர்வ மற்றும் கல்விப் பதவிகளில் பணியாற்றினார்.
2018 இல் அவரது கணவர் இறந்தபோது, தொடர்ச்சியான சட்டப் பிரச்சினைகள் அவரை வீட்டை விட்டு கொழும்புக்கு அருகிலுள்ள புறநகருக்கு வெளியேற நிர்பந்தித்தன. அவர் இன்னமும் மக்களை, குறிப்பாக இளைஞர்கள், ஆர்வமுள்ள இயக்குனர்களை சந்தித்து, இன்னும் அவர்களுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்தார்.
இந்த ஆண்டும் அவரது அடுத்த படத்திற்கான கதை தெரிவுகளை பரிசீலித்து வந்திருந்தார். அந்த வகையில், அவரது மரணம், ஒரு சகாப்தம் கடந்து செல்வது மட்டுமல்லாது, மிக முக்கியமாக அதன் முடிவையும் குறிக்கிறது: இந்த உண்மையை இலங்கையர்கள் மிகவும் வருத்தத்துடன் ஏற்றுக் கொள்வார்கள்.
உதித்த தேசப்பிரிய Factum இல் சர்வதேச உறவுகள் தொடர்பான பிரதான பகுப்பாய்வாளராவார். அவரை uditha@factum.lk மூலமாக தொடர்பு கொள்ளலாம்.
Comments (0)
Facebook Comments (0)