அதிகரித்த ஹஜ் கட்டணம்! அதிருப்தியில் ஹாஜிகள்!!
றிப்தி அலி
இலங்கையில் ஹஜ் யாத்திரை ஏற்பாடுகள் ஆண்டு தோறும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, ஹஜ் யாத்திரை ஏற்பாட்டுப் பொதிக்கான செலவு நிர்ணயம், ஹஜ் முகவர் நிறுவனங்களின் செயற்பாடுகள், ஹாஜிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போன்றவை தொடர்ந்தும் விவாதப் பொருளாக உள்ளன.
இந்த ஆண்டுக்கான ஹஜ் ஏற்பாடுகளிலும் இதே நிலைமை இருப்பதை அவதானிக்க முடிகிறது. ஹஜ் குழுவின் பரிந்துரைக்கே அப்பாற்பட்ட தொகையை பெரும்பாலான ஹஜ் முகவர் நிறுவனங்கள் அறிவித்திருப்பது புதிய முரண்பாடுகளுக்கு வழிவகுத்துள்ளது.
புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கான இந்த வருடம் முன்னெடுக்கவுள்ள ஹஜ் முகவர் நிறுவனங்களின் பயணத் தொகையினை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 30 நாட்களுக்கான ஹஜ் பொதிக்கு 21 இலட்சம் ரூபா அறிவிடுமாறும் ஹஜ் குழு சிபாரிசு செய்துள்ளது.
ஹஜ் முகவர் நிறுவனங்களுக்கு சிறிய இலாபம் கிடைக்கும் வகையிலேயே இந்த பொதியில் முன்னமொழியப்பட்டுள்ளதாக ஹஜ் குழு தெரிவிக்கின்றது. எனினும் ஹஜ் குழுவின் சிபாரிசுக்கமைய ஒரேயொரு ஹஜ் முகவர் நிறுவனம் மாத்திரமே 30 நாட்களுக்கான ஹஜ் பொதிக்கு 21 இலட்சம் ரூபா அறிவிடுவதாக அறிவித்துள்ளது.
ஏனைய 91 ஹஜ் முகவர் நிறுவனங்களும் ஹஜ் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்ட தொகையினை விட அதிக தொகையினை அறிவிடவுள்ளதாக திணைக்களம் வெளியிட்ட முகவர்கள் மற்றும் அவர்கள் அறவிடும் தொகை பற்றிய விபரப் பட்டியல் தெரிவிக்கின்றது.
ஹஜ் பொதிக்கான விலை நிர்ணயத்திலேயே ஹஜ் குழுவிற்கும் ஹஜ் முகவர் நிறுவனங்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டால், எப்படி அடுத்த கட்ட பணிகளை குறித்த இரண்டு தரப்பினரும் இணைந்து முன்னெடுப்பார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
ஏற்கனவே ஹஜ் கோட்டா பங்கீட்டின் போது ஹஜ் முகவர் நிறுவனங்களுக்கும் அரச ஹஜ் குழுவிற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. பின்னர் அது மேன் முறையீட்டு நீதிமன்றம் வரை சென்று இணக்கம் ஏற்பட்டது. இவ்வாறான நிலையிலேயே ஹஜ் பொதிக்கான விலை நிர்ணயத்தில் தற்போது முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
புனித கடமையினை நிறைவேற்றச் செல்கின்ற ஹாஜிகளுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டியது ஒவ்வொரு ஹஜ் முகவர் நிறுவனங்களின் பொறுப்பாகும். இதனை கண்கானிக்க வேண்டியது ஹஜ் குழுவின் பிரதான பணியாகும்.
எனினும், குறித்த இரண்டு தரப்பினரும் இந்தப் பணியினை ஒழுங்குகாக முன்னெடுக்கின்றார்களா என்பது இன்று வரை கேள்விக்குரியாகவே உள்ளது. காரணம், இலங்கையிலிருந்து செல்லும் ஹாஜிகள் ஒவ்வொரு வருடம் வெவ்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்தப் பிரச்சினைகளுக்கு இதுவரை நிரந்தத் தீர்வுகள் எதுவும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. அதேவேளை, மோசடியில் ஈடுபட்ட ஹஜ் முகவர் நிறுவனங்கள் தண்டிக்கப்பட்டதாக எந்த அறிக்கையுமில்லை. இதேவேளை, இந்த வருடம் ஹஜ் யாத்திரைக்கு செல்லவுள்ள ஹாஜிகளின் நன்மை கருதி மினாவில் 2 ஆவது வலயத்தின் பீ பிரிவிலேயே கூடாரம் வழங்கப்பட வேண்டும் என அரச ஹஜ் குழு அறிவுறுத்தியுள்ளது.
வழமையாக இலங்கை ஹாஜிகள் மினாவிலேயே அதிக நெருக்கடிகளை எதிர்நோக்குவது வழமையாகும். இதனை நிவர்த்தி செய்யும் வகையிலேயே மினாவில் 2ஆவது வலயத்தின் பீ பிரிவு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து அழைத்துச் செல்லப்படும் ஹாஜிகள் அசீஸியாவில் தங்கவைக்கப்படுவது வழமையாகும். அது தொடர்பிலும் ஹஜ் குழு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த வருடம் கிடைக்கப் பெற்ற 3,500 ஹஜ் கோட்டாக்கள் 92 முகவர் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
குறித்த 92 முகவர் நிறுவனங்களும் எவ்வாறு செயற்படப் போகின்றது என்பதை உற்றுநோக்க வேண்டியது ஹஜ் குழுவின் முக்கிய கடமையாகும். இதேபோன்று 35 பேஸா விசாக்களும் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்குடையவர்கள் இந்த விசாக்களை பயன்படுத்தி வந்தனர். இந்த வருடம் குறித்த விசாக்கள் எப்படி பகிர்ந்தளிக்கப்படவுள்ள முறையில் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும்.
இதேவேளை, ஹஜ் முகவர் நிறுவனங்கள் இரண்டு சங்கங்களாக பிரிந்து செயற்பட்டு வருகின்றன. குறித்த இரண்டு சங்களும் ஹஜ் குழுவில் அதிக செல்வாக்குச் செலுத்துவதை எம்மால் அவதானிக்க முடிந்தது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் அண்மையில் இடம்பெற்ற ஹஜ் குழுவின் ஊடக மாநாட்டில் இதனை அவதானிக்க முடிந்தது. இவ்வாறு ஹஜ் முகவர் நிறுவனங்களின் சங்கங்கள் ஹஜ் குழுவின் சில பணிகளை முன்னெடுத்தால், புதிய ஹஜ் குழுவின் சுயாதீனத் தன்மை கேள்விக்குரியாகும்.
ஏற்கனவே செயற்பட்ட ஹஜ் குழுக்களின் சுயாதீனம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்னர் எழுந்தமை குறிப்பிடத்தக்கது. ஹஜ் கடமையினை ஒழுங்குபடுத்துவது போன்று ஹஜ் சட்டத்தினை அமுல்படுத்த வேண்டிய நடவடிக்களை முன்னெடுக்க வேண்டியதும் ஹஜ் குழுவின் பணியாகக் காணப்படுகின்றது.
இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை இந்த வருடத்திற்கான ஹஜ் குழு உடனடியாக முன்னெடுக்க வேண்டும். ஹஜ் சட்டத்தினை நிறைவேற்றுவதன் மூலம் ஹஜ் கடமைக்கான மேற்கொள்ளப்படும் வியாபாரத்தினை நிச்சயமாக ஒழுங்குபடுத்த முடியும்.
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் ஹாஜிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான அனுபவத்தை உறுதிசெய்ய வேண்டியது ஹஜ் குழுவின் அடிப்படை பொறுப்பாகும். ஆனால், வருடந்தோறும் ஏற்படும் முரண்பாடுகள், முகவர் நிறுவனங்களின் செல்வாக்கு, மற்றும் சட்டமுறை ஏற்பாடுகள் குறித்த அதிருப்திகள், ஒரு நிலையான தீர்வு தேவை என்பதை தெளிவாக காட்டுகின்றன.
ஹஜ் தொடர்பான ஒரு சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் இந்தச் சூழ்நிலையை ஒழுங்குபடுத்த முடியும். மேலும், முகவர் நிறுவனங்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு, அவர்களின் முறைகேடுகள் தடுக்கப்பட்டால், எதிர்காலத்தில் ஹஜ் யாத்திரை மிகச் சீராக நடைபெற வழிவகுக்கும்.
Comments (0)
Facebook Comments (0)