இலங்கை - ஓமான் உறவுகள்: நேற்று, இன்று, நாளை
இலங்கை - ஓமான் உறவுகள் பற்றி முதன் முதலில் ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ளஇந்நூல் இரு நாடுகளுக்கிடையில் பயன் தரக்கூடிய நல்லுறவை வளர்ப்பதில் ஒரு இராஜதந்திரியின் சொந்த அனுபவங்களையும் வெற்றி பெற்ற முயற்ச்சிகளையும் மற்றும் எதிர்காலத்தில் சாத்தியமான வாய்ப்புகளையும் பதிவு செய்கிறது.
சர்வதேச உறவுகளைக் கட்டியெழுப்புவதில் வரலாறு வகிக்கும் முக்கிய பங்கை எடுத்துரைக்கும் இந்நூல் அந்த உறவுகளை மேம்படுத்துவதில் மக்கள் தொடர்பாடல் மற்றும் பரஸ்பர இராஜதந்திர முன்னெடுப்புகளின் தாக்கத்தையும் உதாரணங்களுடன் பதிவுசெய்கிறது.
இலங்கையின் சிரேஷ்ட இராஜதந்திரியும் சட்ட முதுமாணியுமான தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாத், ஓமான் நாட்டுக்கான இலங்கை தூதுவராக 2019 - 2022ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார்.
இக்காலகட்டத்தில் இலங்கைக்கும் ஓமானுக்குமிடையில் வர்த்தகம், முதலீடுகள், உல்லாசப்பிரயாணம், விவசாயத்துறை, சக்திவளத்துறை, உயர்கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டுத்துறை, விமான மற்றும் கடற்போக்குவரத்துத் துறைகளைஊக்குவிப்பதற்கு பல முயற்ச்சிகளை மேற்கொண்ட தூதுவர் அமீர் அஜ்வத் இத்துறைகளில்இரு நாடுகளுக்குமிடையே காணப்படும் அபரிதமான வாய்ப்புகள் அவற்றை பயன்படுத்துவதில் அவர் கண்ட வெற்றிகள் பற்றிய தனது அனுபவங்களை இந்நூலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
இலங்கை இராஜதந்திர சேவையிலுள்ள தூதுவர் ஒருவர் பணியில் இருக்கும் போதே இருதரப்பு உறவுகள் பற்றிய தனது அனுபவங்களப் பகிர்ந்துஎதிர்கால வாய்ப்புகளை ஆவணமாக்கிய முதல் நூலாக இது கருதப்படுகிறது. 40 ஆண்டுகால இலங்கை - ஓமான் இராஜதந்திர உறவுகளை நினைவு கூறுமுகமாக ஓமான் நாட்டின் வெளிவிவகார அமைச்சின் இராஜதந்திர கற்கை நிறுவனத்தில் இந்நூலின் முதல் பிரதி 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓமானில் வெளியிடப்பட்டது.
இந்நூலின் மீள்வெளியீடு இவ்வாண்டு ஜனவரி மாதம் லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கை நிறுவனத்தில் இலங்கை வெளிவகார அமைச்சு மற்றும் இலங்கையிலுள்ள ஓமான் நாட்டுக்கான தூதரகத்தின் அனுசரனையுடன் கொழும்பில் நடைபெற்றது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருனி விஜயவர்தன, இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹ்மத்அலி அல் றஷ்தி மற்றும் நூலாசிரியர் தூதுவர் அமீர் அஜ்வத் ஆகியோர்இணைந்து நூலை உத்தியோக பூர்வமாக வெளியிட்டு வைத்தனர்.
கேள்வி: இந்நூலை எழுதுவதற்கான காரணம் என்ன?
இலங்கைக்கும் அறபு உலகத்துக்குமிடையிலான தொடர்பு வரலாற்று முக்கியத்துவமிக்கது. இலங்கையும் ஓமானும் இந்து சமுத்திரத்தை பகிர்ந்து கொள்ளும் நாடுகள். இதனால் இரு நாடுகளுக்குமிடையே தொன்று தொட்டே கடல் வழித் தொடர்புகள் இருந்து வந்துள்ளன.
புராதன காலத்தில் இரு நாடுகளும் இப்பிராந்தியத்தின் வர்த்தக மையங்களாக இருந்துள்ளமைக்கு வரலாறு சான்று பகர்கிறது. அக்காலத்தில் நீண்ட கடல் பிரயாணம் செய்து இலங்கையைத் தரிசித்த “சிந்த்பாத்” என்பவரும் ஓமான் நாட்டைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.
இரு நாட்டுக்குமிடையே மக்கள் தொடர்பாடல் மிக நெருக்கமாக இருந்துள்ளது. ஓமான் கட்டியெழுப்பப்படும் ஆரம்ப காலங்களில் இலங்கையர் மிக முக்கிய பங்கை அந்நாட்டுக்கு வழங்கியுள்ளார்கள்.
ஓமான் நாட்டின் முதன் முதல் பொலிஸ் அத்தியட்சகர் (IGP) இலங்கையரான Felix de Silva ஆவார். முதன் முதலில் சலாலா என்ற நகரில் கட்டப்பட்டசுல்தான் கபூஸ் வைத்தியசாலையின் முதன் முதல் பிரதான வைத்திய அதிகாரி Dr. சற்குணநாதன் ஆவார்.
இலங்கைக்கும் ஓமானுக்குமிடையே இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்து இன்று 40 ஆண்டுகளுக்கு மேலாகும். இரு நாடுகளிலும் வதிவிடத் தூதரகங்கள்அமைக்கப்பட்டுள்ளன. இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் இரு நாட்டுத்தூதரகங்களும் பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளன.
எதிர்காலத்தில் இரு நாடுகளிடையே ஒத்துழைப்புக்கான எண்ணற்ற வாய்ப்புகள் காணப்படுகின்றன. இத்தகைய நீண்ட வரலாற்றையும் நெருங்கிய தொடர்பையும் கொண்ட இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் குறித்து போதிய தகவல்கள் கிடைப்பதில்லை. இந்த இடைவெளியை நிரப்பும் நோக்கமாகவே இந்நூல் எழுதப்பட்டது.
இந்த பின்புலத்தில் வரலாற்றுத் தொடர்புகளை மீட்டிப்பார்த்து நிகழ்கால உறவைப்பலப்படுத்தி எதிர்கால உறவுக்குப் பாலம் அமைக்கும் வகையில் தகவல்களை வழங்குவதேஇந்த நூலின் நோக்கமாகும்.
கேள்வி: இந்நூலின் சிறப்பம்சங்கள் எவை?
இந்நூலின் முக்கியத்துவம் பற்றி பல முக்கியஸ்தர்கள் தங்களது கருத்துக்களை நூலில் பதிவு செய்துள்ளனர். ஓமான் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் செய்யத் பத்ர் அல் புசைதி இந்த நூலுக்கான முகவுரையை எழுதியிருப்பது இந்நூலுக்கு மெருகூட்டுகிறது.
அவர் தனது முன்னுரையில் “வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட இருதரப்பு முன்னெடுப்புக்கள் பற்றிய கண்ணோட்டம் இந்நூலின் வாசகர்களுக்கு நல்ல தகவல்களை தருவதாகவும் அவற்றைப் பெற்றுக்கொள்ள இலகுவாக வழிகாட்டுவதாகவும் அமைந்துள்ளது” என்று கூறுகிறார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தனது நூல் பற்றிய குறிப்பில் 40 வருட இராஜதந்திர உறவை கொண்டாடும் இத்தருணத்தில் இரு நாடுகளின் உறவுகள் தொடர்பாக எழுதப்பட்டுள்ள இந்நூல் முக்கியத்துவமிக்கதாகும் எனப் பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் சுமார் ஏழு வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய முன்னாள் இலங்கைக்கான ஓமான் தூதுவர் ஷேய்க் ஜுமா அல் செஹ்ஹி தனது குறிப்பில் இந்நூல் ஒரு நீண்ட கால தேவையை நிறைவேற்றுகிறது என்கிறார்.
ஓமான் வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் றிழா அல் சாலிஹ் நூல் பற்றிக்கூறுகையில் “ஓமான் - இலங்கை வர்த்தக சமூகத்தை இணைப்பதில் இந்நூல் ஒரு பாலமாக விளங்குவதோடு இருநாடுகளுக்குமிடையான எதிர்கால பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கு ஒருவழிகாட்டியாக அமைகிறது” எனக் கூறுகிறார். இந்நூல் பற்றிய மேற்கண்ட கருத்துக்கள் நூலின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.
கேள்வி: நூலின் உள்ளடக்கம் பற்றிய ஓர் அறிமுகத்தைத்தர முடியுமா?
ஆம், இந்நூலிற்கு நான் எழுதியுள்ள முன்னுரை நூல் பற்றிய ஓர் சுருக்கமான அறிமுகத்தையும் அது எழுதப்பட்டதன் நோக்கத்தையும் எடுத்துரைக்கிறது. இது நூலுக்கான ஒரு திறவு கோலாகவும் அமைகிறது.
ஐந்து அத்தியாயங்களை உள்ளடக்கிய இந்நூலின் முதல் அத்தியாயம் கிறிஸ்த்துவுக்கு முன்பிருந்தே அறபு உலகுடன் இலங்கை கொண்டுள்ள வராற்றுத் தொடர்புகளை ஆராய்வதோடு கிறஸ்துவுக்குப் பின் 5ம் நூற்றாண்டில் அனுராதபுர இராஜ்யத்துக்கும்சாசானிய பேரரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு மற்றும் இஸ்லாத்தின் வருகைக்குப் பின் பொலன்னறுவை இராஜ்யத்திலிருந்து கண்டி இராஜ்யம் வரை இஸ்லாமிய உலகுடன் இலங்கைக்கு இருந்த நெருங்கிய தொடர்புகளையும் வரலாற்று ஆதாரங்களுடன் தெளிவாக விளக்குகிறது.
பின்னர் ஓமான் நாட்டுடனான இலங்கையின் இறுக்கமான வரலாற்று தொடர்புகளையும் பதிவுசெய்துள்ளேன். நூலில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்றுத் தகவல்கள் அனைத்தும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு பிரபலமிக்க வரலாற்றாசிரியர்களின் நூல்களில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
நூலின் இரண்டாம் அத்தியாயம் இலங்கைக்கும் ஓமானுக்குமிடையே இராஜதந்திரஉறவுகள் உருவாக்கப்பட்ட வரலாறு மற்றும் இரு நாடுகளுமிடையே சேவையாற்றிய முன்னாள் தூதுவர்களின் தகவல்கள் போன்றவற்றை வழங்குவதோடு, 40 ஆண்டு கால இலங்கை - ஓமான் இராஜதந்திர உறவுகளைக் நினைவு கூருமுகமாக இரு நாடுகளுக்குமிடையே ஒழுங்கு செய்யப்பட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் பட்டியலிட்டுள்ளேன்.
நூலின் மூன்றாம் அத்தியாயம் தற்போது இரு நாடுகளுக்குமிடையில் நிலவிவரும் இரு தரப்பு உறவுகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தையும் நடைமுறையிலுள்ள இரு தரப்பு ஒப்பந்தங்கள் பற்றிய தகவல்களையும் வழங்குகிறது.
ஆரம்பகால இருதரப்பு இராஜதந்திர விஜயங்கள் தொடர்பான அரிய புகைப்படங்கள் இவ்வத்தியாயத்தில் இணைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
நான்காம் அத்தியாயம் இலங்கைக்கும் ஓமானுக்குமிடையிலான நீண்ட கால மக்கள் தொடர்பாடல் மற்றும் இலங்கையர்கள் ஓமான் நாட்டுக்கு ஆற்றிய பணிகள், ஓமான்நாட்டிலுள்ள இலங்கையின் அமைப்புகள் நிறுவனங்கள் பற்றிய தகவல்களும் சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளன.
இந்நூலின் ஐந்தாம் அத்தியாயம் மிக முக்கியத்துவமிக்கதாகும். இவ்வத்தியாயம் இருநாடுகளுக்கிடையிலான எதிர்கால பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான காத்திரமான யோசனைகளையும் அவற்றை நடைமுறைப் படுத்துவதற்குத் தேவையான தகவல்களையும் வழங்குகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து துறைகளில் இரு நாடுகளிலும்காணப்படும் பல்வேறு வாய்ப்புக்கள் மற்றும் அவை தொடர்பாக தொழில் வல்லுனர்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் பதிவிட்டுள்ளேன். இவை அனைத்தும் அவர்களுடனானபிரத்தியேக நேர்காணல் மூலம் பெற்ற தகவல்களாகும்.
கேள்வி: நீங்கள் குறிப்பிட்ட பத்து துறைகள் பற்றி
வர்த்தகம், முதலீடு, விவசாயம், மீன்பிடி, உல்லாசத்துறை, கல்வித்துறை, வேலைவாய்ப்பு, கடல் வளம் மற்றும் சக்தி வளத்துறை போன்ற துறைகளில் இரு நாடுகளிலும் காணப்படும் வாய்ப்புகள் பற்றியும் அவை தொடர்பான விதிமுறைகள், அரசால் வழங்கப்படும் சலுகைகள், இரு நாடுகளுக்குமிடையான ஓப்பந்தங்கள், இரு நாடுகளும் மூன்றாம் தரப்பு நாடுகளுடன் செய்து கொண்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றிய தகவல்கள் அவற்றால் இரு நாடுகளும் பெற்றுக்கொள்ளக்கூடிய நன்மைகள் பற்றிய தகவல்களும் இந்நூலில் துல்லியமாக விளக்கப்பட்டுள்ளன.
மேலும் இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் காணப்படும் சாத்தியமிக்க வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் எனது சொந்த அனுபவங்கள் மற்றும்பெற்ற வெற்றிகளை சுட்டிக்காட்டியுள்ளேன். இன்னும் அளப்பரிய மற்றும்பயன்படுத்தப்படாத வாய்ப்புகள் பற்றி் தேவையான தகவல்களையும் வழங்கயுள்ளேன்.
மேற்கண்ட துறைகளில் இரு நாடுகளுக்கிடையில் ஆழமான இருதரப்புப் பொருளாதாரக்கூட்டுறவைக்கட்டி எழுப்புவதற்கக்கு வழிகாட்டும் ஒரு “கைநூலாக” இந்நூல்வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Comments (0)
Facebook Comments (0)