கட்டார் ஸ்டாஃபோர்ட் பாடசாலை நிர்வாகத்தின் அதிகார துஷ்பிரயோகத்தால் அவதியுறும் இலங்கை மாணவர்கள்

கட்டார் ஸ்டாஃபோர்ட் பாடசாலை நிர்வாகத்தின் அதிகார துஷ்பிரயோகத்தால் அவதியுறும் இலங்கை மாணவர்கள்

றிப்தி அலி

கட்டாரின் தலைநகரான டோஹாவிலுள்ள ஸ்டாஃபோர்ட் இலங்கை பாடசாலை – டோஹா எனும் பாடசாலை நிர்வாகத்தின் பிழையான தீர்மானங்களினால் அங்கு தொழில்புரியும் இலங்கையர்களின் பிள்ளைகள் பல்வேறு சவால்களை தொடர்ச்சியாக எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் கட்டாரிலுள்ள இலங்கை தூதுவரிடம் பல்வேறு முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும் அது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

மாறாக பாடசாலை நிர்வாகத்தின் பிழையான தீர்மானங்களை ஊக்குவிக்கும் வகையிலேயே கட்டாருக்கான இலங்கைத் தூதுவரின் செயற்பாடுகள் காணப்படுவதாக கட்டாரில் வசிக்கும் இலங்கையர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கட்டாரில் தொழில் புரியும் இலங்கையர்களின் நன்மை கருதி கடந்த 2001ஆம் ஸ்டாஃபோர்ட் இலங்கை பாடசாலை – டோஹா எனும் பாடசாலை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அப்போது கட்டாருக்கான இலங்கைத் தூதுவராக செயற்பட்ட எம். மஹ்ரூபின் முயற்சியினாலேயே இந்த பாடசாலை உருவாக்கப்பட்டு மிகவும் வினைத்திறனாகச் செயற்பட்டது. அத்துடன் கட்டாரிலுள்ள இலங்கை தூதுவராலயத்தின் இணைந்த பாடசாலையாகவே இது காணப்படுகின்றது.

இதனால், இப்பாடசாலையின் போஷகராக கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் செயற்படுவதுடன் பாடசாலையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக ஹோடாவிலுள்ள இலங்கை தூதுவராலயத்தின் இரண்டு இராஜந்திரிகள் பதவி வழி உறுப்பினர்களாக செயற்படுகின்றனர்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக செயற்பட்ட காலப் பகுதியில் கட்டாருக்கான இலங்கைத் தூதுவராக ஏ.எஸ்.பி லியனகே நியமிக்கப்பட்டார். இந்த பாடசாலை விடயத்தில் இவர் மேற்கொண்ட அதிகார துஷ்பிரயோகத்தினை அடுத்து இப்பாடசாலை பல்வேறு நெருக்கடிகளை தொடர்ச்சியாக எதிர்நோக்கி வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக 2024/25ஆம் கல்வி ஆண்டுக்காக இப்பாடசாலையில் முதலாம் தரத்திற்கு மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக கட்டாரில் தொழில்புரியும் இலங்கையர்கள் 140 பேரின் பிள்ளைகளை இப்பாடசாலையில் கல்வி நடவடிக்கையினை முன்னெடுக்க முடியாத நிலையினை எதிர்நோக்கியுள்ளனர்.

இப்பிள்ளைகள் அனைவரும் இப்பாடசாலையிலேயே முன்பள்ளிக் கல்வியினை கற்றுள்ள நிலையிலேயே தரம் ஒன்றிற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் குறித்த பிள்ளைகளை வேறு பாடசாலைகளில் அனுமதிக்க முடியாது கஷ்டப்படுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத பெற்றோரெருவர் விடியலுக்கு தெரிவித்தார்.

கட்டாரில் கல்வி கற்கும் மாணவரொருவர் கட்டார் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சின் கீழ் கட்டாயம் பதிவுசெய்யப்பட வேண்டும். இப்பாடசாலையில் கடந்த 2023ஆம் ஜனவரி மாதம் 2,299 மாணவர்கள் கல்வி கற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. "இதில் 1,079 மாணர்கள் மாத்திரமே கட்டார் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சில் பதிவுசெய்யப்பட்டனர்.  ஏனைய 1,220 பேர் பதிவுசெய்யப்படவில்லை" என குறித்த பெற்றோர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த வருடத்தின் ஜனவரி மாதம் 1,980 மாணவர்கள் இப்பாடசாலையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இதில் 1,595 பேர் மாத்திரமே கட்டார் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சில் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய, 385 மாணவர்கள் பதிவுசெய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கட்டாரின் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சினால் இப்பாடசாலைக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையினை விட அதிக மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறித்த பெற்றோர் குற்றஞ்சாட்டினார்.

இதனாலேயே எங்கள் பிள்ளைகளுக்கு தரம் ஒன்றுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இப்பாடசாலையில் 2024/25ஆம் கல்வி ஆண்டுக்காக முதலாம் தரத்திற்கு மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்ட இப்பாடசாலையின் தலைவர் சல்மான் ஹில்மி, கட்டார் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சின் அறிவுத்தலுக்கமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிவித்தார்.

கட்டாரிலுள்ள பாடசாலைகளுக்கான இட ஒதுக்கீடு அந்நாட்டு கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சினாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. இந்த ஒதுக்கீடு வகுப்பறையினை மாத்திரமல்லாது, பாடசாலையின் மொத்த வளாகத்தினையும் அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுன்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களை அடிப்படையாகக் கொண்டே இது தீர்மானிக்கப்படுகின்றது. கட்டாரின் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சின் அறிவுத்தலை மீறி எம்மால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என இப்பாடசாலையில் தலைவர் சல்மான் ஹில்மி மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இப்பாடசாலையின் வங்கிக் கணக்குளில் சேமிக்கப்பட்டுள்ள பணத்தினைக் கொண்டு புதிய காணி கொள்வனவு செய்து மாணவர்களுக்கு தேவையான வகுப்பறைகளை நிர்மாணிக்க முடியும் என பெற்றோரொருவர் தெரிவித்தார்.

எனினும், அதனைச் செய்யாமல் வங்கிகளில் பல மில்லியன் கட்டார் ரியாழ்கள் சேமிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். இதேவேளை, குறித்த பிரச்சினை தொடர்பில் பாதிக்கப்பட்ட சுமார் 100 பெற்றோர்கள் கையெழுத்திட்டு டோஹாவிலுள்ள இலங்கைத் தூதுவர் மபாஸ் முஹைதீனிடம் இந்தப் பிரச்சினை தொடர்பில் கடிதமொன்றினை கடந்த மே 6ஆம் திகதி அனுப்பியுள்ளனர்.

எனினும், குறித்த கடிதத்திற்கு இலங்கை தூதுவரிடமிருந்தோ, தூதுவராலயத்திலிருந்தோ இதுவரை எந்தவொரு பதிலும் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இலங்கையர்களின் பிரதிநிதியாக கட்டாரில் செயற்படும் தூதுவர், எங்களது கடிதத்திற்கு எந்தவித பதிலும் வழங்காமை மிகவும் கவலையளிப்பதாக பெற்றோரொருவர் எமக்குத் தெரிவித்தார்.

இதேவேளை, இப்பாடசாலையின் 2024ஃ25ஆம் கல்வி ஆண்டுக்காக முதலாம் தரத்திற்கு 100 மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது பிழையான விடயமாகும் என கட்டாரிலுள்ள இலங்கை தூதுவராலயம் தெரிவித்தது.

இப்பாடசாலையில் 2024/25ஆம் கல்வி ஆண்டுக்காக முதலாம் தரத்திற்கு மாணவர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. இடப்பற்றாக்குறை காரணமாகவே இந்த  தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது எனவும் இலங்கைத் தூதுவராலயம் குறிப்பிட்டது.

இந்த விடயம் தொடர்பில் பெற்றோர்களுக்கு ஏற்கனவே பாடசாலை நிர்வாகத்தினால் எழுத்து மூலமும் கூட்டங்கள் ஏற்பாடு செய்தும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தூதுவராலயம் தெரிவிக்கின்றது.

இந்த பாடசாலையில் IGCSE and IAL – Pearson Edexcel தரத்திலான பாடத்திட்டமே கற்பிக்கப்படுகின்றது. இந்த பாடத்திட்டம் கற்பிக்கப்படுகின்ற பல பாடசாலைகள் டோஹாவிலுள்ளமையினால், அவற்றிலொன்றை இந்த மாணவர்களுக்காக தெரிவுசெய்ய முடியும் எனவும் தூதுவராலயம் குறிப்பிட்டத்தது.

டோஹாவில் வசிக்கின்ற சுமார் 130,000  பேரினைக் கொண்ட இலங்கை சமூகத்திற்கும் இப்பாடசாலையில் இடமளிக்க முடியாதுள்ளது. இதனால், மாணவர்களின் கல்வித் தேவைப்பாடுகள் தொடர்பில் பெற்றோர்கள் பிற பாடசாலைகளையும் நாட வேண்டியுள்ளது என இலங்கை தூதுவராலயம் தெரிவித்தது.

"கட்டார் அரசாங்கத்தின் சட்டங்களுக்கமைய, இப்பாடசாலையின் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் மேற்பார்வை செய்வதே போஷகரின் பணியாகும். அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட எமது மேற்பார்வைக்கமைய இப்பாடசாலையின் பணிகள் சிறப்பாக  முன்னெடுக்கப்படுகின்றது.

தரம் ஒன்றுக்காக இப்பாடசாலையில் மாணவர்கள் அனுமதிக்க முடியாத விடயம் கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி உத்தியோகபூர்வமாக பெற்றோர்களுக்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால் வேறு பாடசாலைகளுக்கு அந்த மாணவர்களை அனுமதிப்பதற்காக போதுமான கால அவகாசம் காணப்பட்டது" என கட்டாரிலுள்ள இலங்கை தூதுவராலயம் மேலும் தெரிவித்தது.