கொவிட்-19 சவாலுக்கு முகங்கொடுக்க பாராளுமன்றத்துக்கு சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்கள்
பொதுத் தேர்தலின் பின்னர் பாராளுமன்றம் கொவிட் -19 சவாலுக்கு முகங்கொடுத்து சுகாதாரப் பாதுகாப்புடன் அமர்வுகளை முன்னெடுப்பதற்குத் தேவையான சுகாதார வழிகாட்டல் தொகுப்பொன்றைத் தயாரிக்கும் நடவடிக்கைகளை ஆராய்வதற்கு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் லக்ஷ்மன் கம்லத் உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழு இன்று (22) பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்தது.
பொதுத் தேர்தலின் பின்னர் ஆரம்பிக்கவிருக்கும் பாராளுமன்றத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் மற்றும் பிரபுக்கள், பாராளுமன்ற பணியாளர்கள், பாதுகாப்புப் பிரிவினர்களை கொவிட் -19 சூழலிலிருந்து பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களைத் தயாரிப்பதற்கு இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க, பிரதிச் செயலாளர் நாயகமும் பணியாட் தொகுதி பிரதானியுமான நீல் இத்தவல உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இந்த விஜயத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த வைத்தியர்கள் குழு பாராளுமன்ற சபா மண்டபம், உறுப்பினர்களின் முகப்புக் கூடம், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விசேட விருந்தினர்களுக்கான கலரிகள், உறுப்பினர்களின் உணவுக் கூடம், நூலகம் என்பவற்றை பார்வையிட்டனர்.
இதனைவிடவும் பாராளுமன்றப் பணியாளர்களின் உணவுக் கூடம், விசேட விருந்தினர்களின் உணவுக் கூடம் உள்ளிட்ட பாராளுமன்ற வளாகத்திலுள்ள முக்கிய இடங்களையும் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இந்த விஜயத்தின் பின்னர் வைத்தியர் குழுவுக்கும், பாராளுமன்ற அதிகாரிகள் குழுவுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தற்பொழுது பாராளுமன்றத்தில் கடைப்பிடிக்கப்படும் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் காணப்படும் நடைமுறை சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் விஜயத்தின் அவதானிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு சுகாதார அமைச்சின் அதிகாரிகளால் எதிர்வரும் நாட்களில் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய அமர்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டல் தொகுப்பொன்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படும்.
கொவிட் சூழ்நிலை மாற்றமடையும்வரை விசேட விருந்தினர்களை பாராளுமன்றத்துக்கு அனுமதிப்பதை வரையறுப்பது முக்கியமானதாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
சுகாதார அமைச்சு முன்வைக்கும் வழிகாட்டல்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளை சுகாதாரப் பாதுகாப்பு முறையின் கீழ் முன்னெடுப்பதற்கு சகல நடவடிக்கையும் எடுக்கப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க இங்கு வலியுறுத்தினார்.
Comments (0)
Facebook Comments (0)