புனரமைக்கப்பட்டு மீள திறக்கப்படவுள்ள தாக்குதலுக்குள்ளான திகன பள்ளிவாசல்
-ஏ.ஆர்.ஏ.பரீல்-
கண்டி, திகன பகுதிகளில் 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களின்போது முழுமையாக சேதமாக்கப்பட்ட கென்கல்ல பள்ளேகலை பஸார் மஸ்ஜிதுல் லாபீர் ஜும்ஆ பள்ளிவாசல் 4.25 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தொற்று அசாதாரண நிலைமை முடிவுக்கு வந்து சீரானதும் புனரமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசல் திறந்துவைக்கப்படுமென பள்ளிவாசல் பரிபாலன சபையின் தலைவர் ஏ.எப்.எம்.ரிஸ்வி ‘விடிவெள்ளிக்குத்’ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில், "வன்செயல் காரணமாக முழுமையாக சேதமாக்கப்பட்டுள்ள பள்ளிவாசலின் இழப்பீடுகளை அரசாங்கம் மிகவும் குறைவாகவே மதிப்பீடு செய்தது. பள்ளிவாசலுக்கான நஷ்டஈடாக 6½ இலட்சம் ரூபாவை மதிப்பீடு செய்ததுடன் அத்தொகையில் இதுவரை ஒரு இலட்சம் ரூபாவே வழங்கப்பட்டுள்ளது. தீக்கிரையான பள்ளிவாசலின் தரைவிரிப்பின் (காபட்) பெறுமதி மாத்திரமே 10 இலட்சம் ரூபாய்களாகும்.
பள்ளிவாசல் புனர் நிர்மாணத்திற்கு 8½ கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. தற்போது 4.25 கோடி ரூபாய் செலவில் முதற்கட்ட நிர்மாணப்பணிகள் பூர்த்தியாகியுள்ளன. மேலும் இரண்டு மாடிகள் இரண்டாம் கட்டமாக நிர்மாணிக்கப்படவுள்ளது. இரண்டாம் கட்ட நிர்மாணப்பணிகளுக்கு 4.24 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
பள்ளிவாசல் புனர்நிர்மாணப்பணிகளுக்காக தும்பற திகன உதவி நிதியம் (Dumbara Digana Relief Fund) என்னும் அமைப்பினால் 2½ கோடி ரூபாய் திரட்டப்பட்டது. இந்த நிதியத்தின் மூலமே பள்ளிவாசல் நிர்வாகத்துக்குட்பட்ட சேதமாக்கப்பட்ட 90 வீடுகளும் புனரமைக்கப்பட்டது. பள்ளிவாசல் நிர்மாணப் பணிகளுக்கு மேலும் பலர் உதவிகள் செய்தார்கள்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் எவரும் உதவிகள் செய்யவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் நிர்மாணப் பணிகளுக்காக பொறியியலாளர் குழுவொன்றினை அனுப்பி வைத்தார். பள்ளிவாசலில் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்கு சமூகம் உதவி நல்க வேண்டும்" என்றார்.
-Vidivelli-
Comments (0)
Facebook Comments (0)