ஈரான் ஜனாதிபதியினால் விரைவில் திறந்துவைக்கப்படவுள்ள உமா ஓயா மின் நிலையம்
றிப்தி அலி
நாட்டின் தேசிய மின் கட்டமைப்பிற்கு தேவையான 120 மெகாவோட் மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்காக நிர்மாணிக்கப்படுகின்ற நீர் மின் உற்பத்தி நிலையத்தின் பணிகளை இந்த வருட இறுதியில் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கமைய, நிலக்கீழ் மின் உற்பத்தி நிலையத்தினூடாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தினை எதிர்வரும் ஜனவரி மாதமளவில் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்படும் என உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தின் பணிப்பாளரான பொறியியலாளர் சுதர்ம ஏக்கலந்த தெரிவித்தார்.
இலங்கையின் விவசாயம் மற்றும் மின்சாரம் ஆகிய இரண்டு துறைகளும் பாரிய பங்களிப்பினை வழங்கும் நோக்கிலேயே உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நமது நாட்டிலுள்ள 103 ஆறுகளில் ஒன்றான உமா ஓயா ஆற்றின் மேலதிக நீரினை விவசாயத்திற்கும், மின்சாரத்திற்கும் பயன்படுத்தும் நோக்கிலேயே இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
வெலிமடையிலிருந்து வெல்லவாயவிற்கு நீரினைக் கொண்டு செல்லல் மற்றும் நீர் மின் நிலையம் நிர்மாணித்தல் ஆகியனவே இந்த பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.
ஈரான் அரசாங்கத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்தமையினால் சுமார் 30 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த திட்டத்தினை முன்னெடுக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய, ஈரானின் அப்போதைய ஜனாதிபதி மஹ்மூத் அஹமதிநெஜாதினால் கடந்த 2008.04.29ஆம் திகதி உத்தியோகபூர்வமாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
ஈரான் அரசாங்கத்தின் 514 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுமதவியிலேயே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த திட்டத்தின் 85 சதவீதமே இக்கடனுதவியுகும்.
எவ்வாறாயினும், இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு சில வருடங்களில் அமெரிக்காவினால் ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை காரணமாக இத்திட்டத்தினை ஈரானினால் முன்னெடுக்க முடியாமல் போனது.
இதனால், இலங்கை அரசாங்கத்தின் நிதியிலேயே இந்த திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பராப் எனும் ஈரானிய நிறுவனமே இந்த செயற்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து மேற்கொண்டு வருகின்றது.
நிலக்கீழ் மின் நிலைய நிர்மாணத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இந்த நிறுவனத்தினால் ஈராக், ஈரான், தஜிஹிஸ்தான், கென்யா, ஆர்மேனியா போன்ற நாடுகளில் 20க்கு மேற்பட்ட மின்சார உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
சுமார் 5 ஐந்து வருட காலப் பகுதிக்குள் முடிக்க வேண்டிய இந்த செயற்திட்டம், ஈரான் மீதான பொருளாதாரத் தடை, ஈஸ்டர் தற்கொலை தாக்குதல், கொவிட் தொற்று பரவல், பொருளாதாரத் நெருக்கடி போன்ற பல காரணங்களினால் இன்னும் முடிவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெலிமட - தல்கொல் ஓயாவினை மறித்து புஹுல்பொல நீர்தேக்கமும், வெலிமட – மாதட்டில்;ல ஓயாவினை மறித்து டயரபா நீர்த் தேகமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. குறித்த இரண்டு நீர்த் தேக்கங்களும் 3.9 கிலோ மீற்றர் நீளமானதும், 4.1 மீற்றர் விட்டமுடைய சுரங்கப் பாதையின் ஊடாக இணைக்கப்படுகின்றன.
மேற்படி இரண்டு நீர்த் தேக்கங்களில் இருந்து 15.6 கிலோ மீற்றர் நீளமான சுரங்கப் பாதையின் ஊடாக கரந்தகொல்ல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலக்கீழ் மின்சார உற்பத்தி நிலையத்திற்கு நீர் கொண்டு செல்லப்பட்டு 120 மெகாவோட் மின்சாரத்தினை உற்பத்தி செய்யப்படும். இந்த மின்சாரம் 22 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள பதுளை தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படும்.
இதேவேளை, உமா ஓயா வடிநிலத்தில் சுற்றாடல் மற்றும் ஏனைய நீர்த் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் அங்கிருந்து 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீர்ப் பற்றாக்குறையினால் அவதியுறும் தென் பிரதேசத்தின் கிரிந்தி ஓயா வடிநிலத்திற்கு இத்திட்டத்தின் ஊடாக நீரினை கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொனராகலை மாவட்டத்தில் வெல்லவாய மற்றும் தனமல்வில பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட 4,500 ஹெக்டயர் நிலப்பரப்பில் பெரும்போகம், சிறுபோகம் ஆகிய இரு போகங்களிலும் புதிதாக பயிர்ச்செய்கை செய்வதற்கு தேவையான நீரை வழங்குவதற்கும் தற்போது பயிர்ச்செய்கை செய்யப்படும் 1,500 ஹெக்டயர் நிலப்பரப்பிற்கு சிறுபோகத்திற்கு தேவையான நீரை வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இச்செயற்திட்ட பிரதேசத்தில் குடிநீர் மற்றும் கைத்தொழில் நடவடிக்கைகளுக்குத் தேவையான 30 மில்லியன் கனமீற்றர் நீரை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய நீர்த்தேக்கங்களின் ஊடாக பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை மற்றும் எட்டெம்பிட்டிய பிரதேசங்களுக்கு குடிநீரை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்காக நீர் சுத்திகரிப்பு நிலையமொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் ஊடாக அப்பிரதேச மக்கள் சிறுநீரக நோயிலிருந்து பாதுகாப்படுகின்றனர்.
இதற்கு மேலதிகமாக இப்பிரதேசத்திலுள்ள 96 குளங்கள் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தினூடாக நீர்ப்பாசனத்திற்கான நீரால் போஷிக்கப்படுகின்றன.
ஊவா - வெல்லஸ்ஸ மக்களின் விவசாயம், குடிநீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றினை அடிப்படையாக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு பல்வேறு தடைகள் முன்வைக்கப்பட்டன.
எனினும், இத்தடைகள் அனைத்திற்கும் அரசாங்கத்தினால் மாற்று வழிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சுற்றாடலுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாத வகையிலேயே இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பராப் கம்பனியின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இந்த திட்டத்தினை மக்களிடம் கையளிக்கம் நிகழ்விற்கு ஈரான் ஜனாதிபதி செய்யித் இப்ராஹிம் ரைசியினை கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி ரணில்; விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் விடுத்த அழைப்பிற்கு ஈரான் ஜனாதிபதி பச்சைக் கொடி காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)